மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

எதை எண்ணி வருந்துவது?: கமல்

எதை எண்ணி வருந்துவது?: கமல்

ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடரத்தான் செய்கிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மணல் திருட்டு நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அரசும், உயர் நீதிமன்றமும் இதுகுறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மணல் திருட்டு குறையவில்லை.

இந்நிலையில் மணல் திருட்டு குறித்து இன்று(செப்டம்பர் 9) மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்து வருவதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் நிகழ்வது தானே ?இதில் என்ன ஆச்சரியம் . இந்த மணல் கொள்ளை நடப்பது தலைமைச் செயலகத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில், நாற்புறமும் அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சாலையின் வழியாக, லாரி லாரியாக மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. பொதுப்பணித்துறை சிறப்பான முறையில் வேடிக்கை பார்த்துள்ளது.

மிக மிகக் குறைந்த பட்ச மதிப்பு வைத்து கணக்கிட்டாலும் நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மணல் ஏப்பம் விடப்பட்டுள்ளது. வருடத்திற்கு சுமார் 11 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு. இவை எல்லாவற்றையும் விட பெரும் கொடுமை என்னவென்றால் இந்த மணல் கட்டுமானத்திற்கு உகந்தது அல்ல. மணலை கொண்டு கட்டடம் கட்டினால் நிச்சயம் இடிந்து விழுந்து விடும் என்கிறார்கள் கட்டுமான நிபுணர்கள். அப்படி எனில் இந்த மணலை அள்ளி கட்டிடங்கள் கட்டிய மகானுபாவர்கள் யார் ?அவற்றைப் பயன்படுத்த போவது யார் ?அதில் வாழும் மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு? கூவம் கடலுடன் இணையும் பகுதியில் மணல் அள்ளப்படுவதால், சூழல் மிக மோசமாக அழிந்து வருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள்.

அனுமதியில்லாமல் திருடுகிறார்களே என்று வருந்துவதா? அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா? அரசு இயந்திரம் உறங்கிக்கொண்டு இருக்கிறதே என்று வருந்துவதா? ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறதே என வருந்துவதா? சூழியல் சீரழிகிறது என்று வருந்துவதா?இந்த மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்படப்போகும் உயிர்பலிகள் எண்ணி வருந்துவதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வியாழன் 9 செப் 2021