கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம்!

politics

கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளைச் சட்டப் பேரவையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 8) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத் துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சிவசங்கர்,

தமிழகத்திலுள்ள 259 கல்லூரி விடுதிகளில் ரூ. 2.59 கோடி செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும்.

259 கல்லூரி விடுதிகளுக்கு ஒரு கோடியே 44 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்படும்.

40 சீர்மரபினர் கல்லூரி விடுதிகளுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்குக் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு 2 லட்சத்திலிருந்து 2.50 லட்சமாக உயர்த்தப்படும்.

விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்களுக்கு 83 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.

மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளுக்கு 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் பரிசுகள் வழங்கப்படும்.

கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு 23.60 லட்சம் ரூபாய் செலவில் அங்கீகார அடிப்படையில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும்.

கள்ளர் பள்ளி கட்டடங்களில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்குக் கழிப்பிட வசதிகள் 4.68 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும்.

கிராமப்புற மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கான வருமான வரம்பு 72 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்படும்.

நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நலவாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாகவும், பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

தமிழகத்தில் நடைமுறையிலிருந்து வரும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றியும் சமூகநீதி செயல்பாடுகள் பற்றியும் வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி குறித்து பல்வேறு தகவல்கள் அடங்கிய புத்தகம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் வெளியிடப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *