மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம்: பாஜக வெளிநடப்பு!

சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம்: பாஜக வெளிநடப்பு!

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து திமுக போராடும் என்று முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை மத ரீதியாகப் பிரிக்கிறது என்பதால் இந்த சட்டத்தை ஆரம்ப நிலையிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பைத் தெரிவித்தது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், “இந்த சட்டம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்குக் குறிப்பாக மதச்சார்பற்ற தன்மைக்கு முற்றிலும் எதிரானது. இது நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.

இந்த சட்டத்தை எதிர்க்கும் வகையில் சட்டம் நிறைவேறுவதற்கு முன்பே எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் முந்தைய அரசால் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாகப் பார்க்க வேண்டும், மத ரீதியிலோ இன ரீதியிலோ, எந்த நாட்டிலிருந்து வருவார்கள் என்ற ரீதியிலோ அவர்களைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பது தான் சரியான பார்வையாக இருக்கும்.

சொந்த நாட்டில் வாழ முடியாமல் வேறு நாட்டுக்கு வருபவர்களைக் கூட மதம் பிரித்து பார்ப்பது அகதிகளுக்கு நன்மை செய்வது ஆகாது. அரசியல் ரீதியான பாகுபாட்டைச் சட்ட ரீதியான பாகுபாடாக உறுதிப்படுத்துவது மிகமிக தவறானது.

பல்வேறு இனங்கள் மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம்.

நாட்டின் சுதந்திரம் என்பது அனைவரும் ஒன்று சேர்ந்து போராடியதால் கிடைத்தது.

இத்தகைய உன்னதமான நல்லிணக்க மரபிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இந்திய மக்களிடையே பேதத்தைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்தம் தேவையற்றது. ரத்து செய்யப்பட வேண்டியது.

இச்சட்டத்தின் நீட்சியாகத் தேசிய குடிமக்கள் அல்லது குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் தயாரிக்கும் பணியினை ஒன்றிய அரசு முழுவதுமாக கைவிட வேண்டும்.

மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் இணக்கமாக ஒன்றிணைந்து வாழும் இந்திய மக்களிடையே மத இன ரீதியான பாகுபாடுகளை ஏற்படுத்தி இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றித் தரவேண்டும் என்று தீர்மானத்தை முன் மொழிந்தார்.

இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் நான்கு பேரும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்காத முதல்வர் ஸ்டாலின் மதநல்லிணக்கத்தை பற்றிப் பேசுவது வருந்தத்தக்கது. நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக ஒன்றிய அரசு பாடுபட்டு வரும் நிலையில் இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம். அரசியலமைப்பு சட்டப்படி ஒன்றிய அரசுக்கு மக்கள் பாதுகாப்புக்காகச் சட்டம் கொண்டுவருவதற்கு இடமிருக்கிறது” என்று கூறினார்.

இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முன்னதாக சட்டப்பேரவையில் தங்களுக்குப் பேச அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

-பிரியா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

புதன் 8 செப் 2021