மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: கட்டுப்பாடுகளுக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு!

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: கட்டுப்பாடுகளுக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு!

தியாகி இம்மானுவேல் சேகன் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நினைவு நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கட்டுப்பாடுகளை தளர்த்த புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் மாவட்டங்களில் செப்டம்பர் 11 இமானுவேல் சேகரன் நினைவு தினம், அக்டோபர் 30 முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி ஆகிய இரு தினங்களும் காவல்துறைக்கு சவாலான நாட்கள்தான். இவ்விரு தினங்களிலும் காவல்துறை சோதனையும் பாதுகாப்பும் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும்.

இந்நிலையில், முன்னாள் ராணுவ வீரரும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் முக்கிய அடையாளமாக திகழும் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் வரும் செப்டம்பர் 11 வரும் நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக உள்துறைச் செயலாளர். டிஜிபி ஆகியோருக்கு இன்று (செப்டம்பர் 8) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “ சமத்துவத்தை நிலைநாட்டப் போராடி உயிர்நீத்த, தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களுடைய நினைவு நாளை, கடந்த 35 ஆண்டுகளாக இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலுள்ள அவரது நினைவிடத்தில், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி, புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்களும், தேவேந்திரகுல வேளாளர்களும் அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சக்கட்டமாக இருந்த காரணத்தினால், கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சியிலே பங்கு பெற்ற நானும் கலந்து கொள்ள இயலவில்லை. அதேபோல, புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்களும், அந்தந்த மாவட்டங்களில், கிராமங்களில் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். இந்தாண்டு கொரோனா பெருந்தொற்று வெகுவாகக் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன; தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், வணிக வளாகங்கள் இயங்க ஆரம்பித்துவிட்டன; பொதுமக்களில் பெரும்பாலானோர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டனர்; பொது இடங்களில் மற்றும் நிகழ்ச்சிகளில் முகக் கவசம் அணியும் பழக்கத்தைத் தாங்களாகவே கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர்; சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் கிருமி நாசினிகளைக் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளவும் மக்கள் பெரிதும் பழக்கப்பட்டுவிட்டனர்”என்று குறிப்பிட்டுள்ள கிருஷ்ணசாமி தற்போதைய அரசு செப்டம்பர் 11 குறித்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் விமரிசித்துள்ளார்.

“வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு காவல்துறையும், வருவாய்துறையும் முழுமையாக ஒத்துழைப்புக் கொடுத்து, அளப்பரிய தியாகம் செய்த அந்தத் தியாகிக்கு உரிய மரியாதை செய்யும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 11-க்கு முன்பாக புதிய தமிழகம் நிர்வாகிகளை முறையாக அழைத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் அந்நிகழ்ச்சியை அமைதியாக நடத்துவதற்குண்டான கலந்தாலோசனைகள் நடைபெறும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி அதுபோன்ற ஒரு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, அதிகாரிகளை மட்டுமே வைத்து ஒரு கூட்டத்தை நடத்தி, அதில் எண்ணற்றக் கட்டுப்பாடுகளை விதித்து, செயல்முறை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. புதிய தமிழகம் கட்சியின் முன்முயற்சியில் துவங்கப்பட்டு, புதிய தமிழகம் கட்சியால் நடத்தப்பட்டு வரக்கூடிய அந்நிகழ்ச்சி குறித்து, புதிய தமிழகம் கட்சியை அழைக்காமல், ஏதோ ஓர் அமைப்பை மட்டும் அழைத்து, அவர்களிடத்தில் கையொப்பம் பெற்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. அதேபோல, நேற்றைய முன்தினம் (6.9.2021) சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடத்திலிருந்து ஓர் அறிக்கை வந்திருக்கிறது. பிற மாவட்ட அதிகாரிகளிடத்திலிருந்தும் எப்பொழுது அறிக்கைகள் வரும் என்று தெரியவில்லை. இன்னும் மூன்று தினங்களே எஞ்சியிருக்கின்றன.

இதுவரையிலும் இல்லாத ஒரு நடைமுறையாக, நிகழ்ச்சிக்கு வரக்கூடிய அனைவருமே சொந்த வாகனங்களிலே மட்டுமே வர வேண்டும்; அதில் 5 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்; அதுவும் 7-ஆம் தேதிக்குள்ளாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடத்தில் அனுமதி பெற வேண்டும் என்றெல்லாம் அந்த செயல்முறை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. இது நடைமுறையில் எந்தளவிற்கு சிரமமானதும், சிக்கலானதும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏதோ ஓர் ஆண்டு ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்ததை மட்டுமே நினைவில் கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை விதிப்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “கடந்த 3 மாதங்களில் என்னென்ன விழாக்களெல்லாம் நடைபெற்றிருக்கின்றன, அதில் யார் யாரெல்லாம் கலந்து கொண்டிருக்கிறார்கள், அந்த விழாக்களுக்கு எப்படியெல்லாம் தளர்வுகள் வழங்கப்பட்டன என்பதையெல்லாம் புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்களும், தேவேந்திரகுல வேளாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் உன்னிப்பாகக் கவனித்துத் தான் வருகிறார்கள்.

எனவே ஒரு கண்ணிற்கு வெண்ணெய், ஒரு கண்ணிற்கு சுண்ணாம்பு என்று சொல்வதைப் போல, தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் என்று வந்துவிட்டாலே தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பதும், தேவையற்ற பீதிகளை உருவாக்குவதும், தமிழ் சமூகங்களுக்கிடையே நிரந்தரமாக சாதியச் சுவர்களை எழுப்புவதுமே அண்மைக்கால வாடிக்கையாகிவிட்டது. 75 ஆண்டுகளாக சமூகநீதி பேசக்கூடிய இந்தத் தமிழ் மண்ணில் தான் இத்தனை எல்லைக்கோடுகளை விதிக்கிறார்கள். இம்மண்ணின் மக்களில் ஒரு பிரிவு மக்கள் இன்னொரு பிரிவு மக்களின் பகுதி வழியே வரக்கூடாது என்ற கொடுமை நடக்கிறது.

எனவே, செப்டம்பர் 11-ஆம் தேதி, வழக்கம் போல தமிழ்நாடெங்குமிருந்து புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்களும், தேவேந்திரகுல வேளாளர்களும், அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உரிய அறிவுத்தலை வழங்க வேண்டும்”என்று அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார். டாக்டர் கிருஷ்ணசாமி.

-வேந்தன்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

புதன் 8 செப் 2021