900 கோடி கமிஷன், 150 கோடி ரொக்கம்… அதிகாரி அதிரடி மாற்றம்…அதிமுக தலைகளின் ஐ.டி.,ஆட்டம்!

politics

சென்னையில் ஒரு வீட்டில் பல நூறு கோடி ரூபாய் ரொக்கப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, வருமான வரித்துறை அலுவலகத்துக்கு ஒரு தகவல் போகிறது. அடுத்த நாள் அதிகாலையில் அந்த வீட்டுக்குள் நுழைகிறது ஐ.டி.,டீம். அறை அறையாக அலசிப் பார்த்ததில் அதிர்ந்து போகிறார்கள் அதிகாரிகள். அள்ள அள்ளப் பணம்… கிட்டத்தட்ட 265 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கம் பிடிபடுகிறது. இன்னும் நிறைய ஆவணங்கள் கிடைக்கின்றன.

காலையில் துவங்கி மாலை வரை ரெய்டு நடக்கிறது. எப்படியும் மூன்று நாட்களுக்கு ரெய்டைத் தொடர வேண்டியிருக்குமென்று ஐ.டி., அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். அந்த ரெய்டுக்கு தலைமை வகித்து வந்த அதிகாரிக்கு, திடீரென எங்கிருந்தோ ஓர் அலைபேசி அழைப்பு வருகிறது. பேசப்பேச அவருடைய முகத்தில் அச்ச ரேகை அப்பட்டமாக ஓடிக் கடக்கிறது. அடுத்த சில நிமிடங்களில், மழை வந்ததும் சூட்டிங்கிற்கு ‘பேக்கப்’ சொல்வது போல, ரெய்டை முடிக்கச் சொல்கிறார் அந்த அதிகாரி. எடுத்த பணத்தில் 65 கோடியை மட்டும் கணக்காக எடுத்துக் கொண்டு, மீதிப்பணத்தையும் ஆவணங்களையும் ஒப்படைத்து விட்டு, பேருக்கு எதையோ எழுதி வாங்கிக் கொண்டு கிளம்புகிறது அந்த டீம். அழைத்தது யாரென்பது அந்த அதிகாரி மட்டுமே அறிந்த ரகசியம்.

இது கற்பனையான சம்பவமில்லை… கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, சென்னையில் ஒரு ஒப்பந்ததாரரின் வீட்டில் நடந்த ரெய்டு பற்றி, வருமான வரித்துறையின் அதிகாரி ஒருவர் தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட குமுறல்.

அந்த ஒப்பந்ததாரர், அப்போதிருந்த தமிழக அமைச்சரவையில் ‘பவர்ஃபுல்’ ஆக வலம்வந்த ஓர் அமைச்சரின் பினாமி. அந்த ரெய்டு பற்றி, மறுநாள் சில நாளிதழ்களில் மட்டும், குட்டியாய் ஒரு செய்தி வந்திருந்தது. அந்த சம்பவம், ஐ.டி., இப்போது எப்படி கைப்பாவையாக மாறிவிட்டது என்பதை அரசியல் வட்டாரத்திலும், அதிகார வளையத்திலும் இருப்பவர்களுக்கு அழுத்தம் திருத்தமாகச் சொன்னது.

நிச்சயம் தோல்வி என்று தெரிந்தும், பாரதிய ஜனதாவுடன் அதிமுக இவ்வளவு இணக்கமாகப் போவதற்கான ஒரே காரணம், ஐடி மீதான அச்சம்தான் என்று தமிழகமே பேசுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு, பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருந்ததுதான் காரணமென்று அமைச்சர்களாக இருந்த பலரும் ஆவேசப்பட்டார்கள். அதிமுகவின் அடிமட்டத் தொண்டன் ஒவ்வொருவரும் குமுறி கொந்தளித்தார்கள். ஆனால் எந்தத் தலைவரும் அதற்கு செவி கொடுக்கவே இல்லை. ஒரே காரணம்…ஐடி ரெய்டு அச்சம்!.

இப்போதும் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியைத் தொடர்வதற்கு, அதிமுக தலைகள் தயாராக இருக்கின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யாருடைய வீட்டிலும் ஐ.டி.,டீம் உள்ளே நுழையவே கூடாது என்பதுதான் அவர்களின் ஒரே நிபந்தனை என்று வருமான வரித்துறையிலுள்ள நேர்மையான அதிகாரிகள் பல விஷயங்களையும் மனம் திறந்து கொட்டுகின்றனர். இதையும்விட அவர்கள் சொல்லும் ஓர் ஆச்சரியத்தகவல் யாதெனில், தங்களுடைய வீடுகளில் எந்த ரெய்டும் நடத்திவிடக்கூடாது என்பதற்காகவே தமிழகத்திலுள்ள வருமானவரித் துறையின் நேர்மையான அதிகாரிகளை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் தங்கள் அரசியல் செல்வாக்கை வைத்து மாற்றிவிட்டனர் என்பதுதான்.

நடந்த…நடந்து கொண்டிருக்கின்ற சில விவகாரங்களைப் புட்டு வைத்தார்கள் ஐடி அதிகாரிகள் சிலர்…

‘‘2019 எம்.பி தேர்தலுக்கு முன்னால், மார்ச் 28 ஆம் தேதியன்று, அப்போதிருந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர்கள் சரவணன், வினோத் ஆகிய இரண்டு பேருடைய வீடுகளில் சர்ச் வாரண்ட் வாங்கி ரெய்டு நடத்தினார்கள் எங்கள் துறை அதிகாரிகள். சரவணன் வீடு, சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கிறது. வினோத் வீடு, கோவை வடவள்ளியில் இருக்கிறது. சரவணன் கொடுத்த தகவலை வைத்து, ஆதம்பாக்கத்தில் இருந்த எலக்ட்ரிக் காண்ட்ராக்டர் சபேசன் வீட்டிலும், அவருடைய அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ரெய்டில் சபேசன் வீட்டில் 16.6 கோடி ரொக்கப்பணமும், ஒரு டைரியும் சிக்கியது. அந்த டைரியில், 900 கோடி ரூபாய், யார் யாரிடமிருந்து கமிஷனாக வாங்கப்பட்டது என்பதற்கான குறிப்புகள் இருந்திருக்கின்றன.

சபேசனை அலுவலகத்துக்கு அழைத்து வந்து, விசேஷமாக விசாரித்தார்கள் அதிகாரிகள். அந்த பணம் வேலுமணிக்கு வாங்கித்தரப்பட்டது என்று சொல்லியிருக்கிறார் சபேசன். அதற்கு அடுத்ததாக சரவணனையும், வினோத்தையும் விசாரிக்க நினைத்திருந்தார்கள். ஆனால் என்ன நடந்ததோ, அவர்கள் இருவரையும் இதுவரை விசாரணைக்கு அழைக்கவே இல்லை. டெல்லியில் முக்கியப் பொறுப்பிலுள்ள சிலர் கொடுத்த அழுத்தம்தான் அதற்குக் காரணமென்பது எங்கள் துறை அதிகாரிகள் எல்லோருக்குமே தெரிந்த விஷயம். இந்த அழுத்தம் கொடுப்பதற்கு யார் எந்த வகையில் பலனடைந்தார்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.

இத்தனைக்கும் அந்த ரெய்டை நடத்தியது, வருமான வரித்துறையின் சென்னை மத்திய மண்டல இணை ஆணையர் டாக்டர் அருண் ராஜா, ஆல்பர்ட், ஜெயவேலு, ராகவன் போன்ற நேர்மையான அதிகாரிகள்தான். விசாரணை அரைகுறையாக முடிக்கப்பட்டது ஒரு பக்கம். அந்த டைரியில் குறிப்பிட்டிருந்த 900 கோடி ரூபாயை 390 கோடி ரூபாயாகக் குறைத்துக் காண்பிக்கச் சொல்லி அந்த அதிகாரிகளுக்கு மத்தியில் அதிகாரத்தில் இருப்பவர்கள், அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். வேறு வழியின்றி, அந்த அதிகாரிகளும் 900 கோடி ரூபாயை 390 கோடி ரூபாய் என்று திருத்திக் காட்டியிருக்கிறார்கள். அதையும் விட கொடுமை, அந்த 390 கோடி ரூபாயும் சபேசனுக்கு உரியது என்று வழக்கைப் பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.

சபேசனுக்கு ஐந்து வருடங்களில் ஒன்றரை கோடி ரூபாய் கூட வருமானமில்லை என்ற நிலையில், அவருடைய வருமானம் 390 கோடி ரூபாய் என்று எப்படிக்காட்ட முடியும்… வேலுமணி மீது பினாமி சட்டத்தில் பதிவுசெய்யலாம் என்று குறிப்பு எழுதி வைத்துவிட்டு, பதவி உயர்வில் கொச்சினுக்கு சென்றுவிட்டார் வழக்கை மானிட்டர் செய்த ஆல்பர்ட்.

இந்த டீமை வழிநடத்திய இணை ஆணையர் டாக்டர் அருண்ராஜா, கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாகத்தான் இருந்திருக்கிறார். ஆனால் அவர்கள் கொடுத்த அழுத்தத்தால் ‘வம்பே வேண்டாம்’ என்று ஓரமாக ஒதுங்கிக் கொண்டார். 2017-2018 ஆம் ஆண்டில், அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குறிவைத்து, பல இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. பாளையங்கோட்டை காண்ட்ராக்டர் நாகராஜன் வீடு, அலுவலகம், கார்கள் என ஒன்பது இடங்களில் நடந்த ரெய்டில் ஒரே காரில் மட்டும் 9 கோடி ரூபாய் ரொக்கம் பிடிக்கப்பட்டது. வெவ்வேறு இடங்களிலும் எடுத்த பணத்தைச் சேர்த்து மொத்தம் 150 கோடி ரூபாய் ரொக்கமாக மட்டுமே கைப்பற்றப்பட்டது. இவ்வளவு பெரிய தொகை என்றதும் அமலாக்கத் துறையினரும் வந்து விசாரித்தார்கள். கடைசியில் அது எடப்பாடி பழனிசாமிக்குச் சொந்தமானது என்று தெரியவந்ததும், வழக்கு கிடப்பில் போடப்பட்டது. அதிகாரத்திலிருந்தவர்கள் பாரதிய ஜனதா தலைவர்களிடம் பேசியதும் இந்த மேஜிக் நடந்தது.

சபேசன் டைரியில் சிக்கிய 900 கோடி ரூபாய் கமிஷன், பாளையங்கோட்டை காண்ட்ராக்டரிடம் சிக்கிய ரொக்கம், என இந்த ரெய்டுகளில் வேலுமணி, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், புதுக்கோட்டை விஜயபாஸ்கர் உட்பட ஐந்து அமைச்சர்கள் வசமாக சிக்கிக் கொண்டதாக எங்கள் துறையிலேயே எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் அந்த அரசியல் அதிசயம் நிகழ்ந்தது. தங்களுக்கு ஒத்துவராத டாக்டர் அருண் ராஜை, டெல்லிக்குத் துாக்கி அடித்தது அதிமுக ஐவர் அணி. ஆனால் அவருடைய வேலையையும், திறமையையும், குடும்ப நிலையையும் பார்த்த டெல்லி வருமான வரித்துறை ஆணையர், அவரை 2019 ஜூலையில் மீண்டும் சென்னைக்கு அனுப்பி விட்டார். மூன்றே மாதத்தில் அவர் திரும்பிவிட்டார். அதற்குப் பிறகும் மற்றொரு அரசியல் அதிசயம் நடந்தது. ஜூலை மாதத்தில் சென்னைக்கு வந்த அருண் ராஜா, அடுத்த மாதத்திலேயே பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு துாக்கியடிக்கப்பட்டார்.

இதற்கிடைப்பட்ட காலத்தில் நடந்த விஷயம் தான், எங்கள் துறையிலுள்ள நேர்மையான அதிகாரிகள் எல்லோரையும் கொந்தளிக்க வைக்கிற விஷயம். டெல்லியிருந்து மூன்றே மாதத்தில் சென்னைக்குத் திரும்ப வந்த அருண்ராஜா, தன்னை மாற்றியது ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் வேலுமணி ஆகிய மூவர்தான் என்று தெரிந்ததும், அவர்கள் சம்பந்தப்பட்ட பழைய கோப்புகளை தூசு தட்ட ஆரம்பித்தார். உடனே டெல்லிக்கு பெட்டிஷனுடன் கிளம்பிவிட்டார்கள் மூவரும். 2019 ஜூலை 25 அன்று ஈபிஎஸ், ஓபிஎஸ், வேலுமணி, தங்கமணி என அமைச்சர் பட்டாளமே, டெல்லிக்குப் பறந்து பிரதமர் மோடியைச் சந்தித்தது. ரொம்பவே போராடி அமித்ஷாவையும் சந்தித்துப் பேசியது. தமிழகத்துக்காக அதைக் கேட்டோம், இதைக்கேட்டோம் என்று அவர்கள் வெளியில் விட்டதெல்லாம் உதார்தான். அவர்கள் வைத்த கோரிக்கைகளில் முதல் கோரிக்கை அருண்ராஜாவை சென்னையிலிருந்து மாற்ற வேண்டும் என்பது மட்டும்தான். அப்படியே அவர் மாற்றப்பட்டார்.!’’ என்று கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் வருமானவரித் துறையில் நடந்த வரலாற்று ரகசியங்களை புட்டு வைத்தார்கள்.

அல்லும் பகலும் வெயிலிலும் பனியிலும் மழையிலும் அயராது பாடுபட்டு, சிறுகச்சிறுகச் சேமித்து பத்து லட்ச ரூபாய்க்கு நிலம் வாங்கும் மாதச்சம்பளத்துக்காரனுக்கு, பத்திர ஆபீசில் விபரம் பிடித்து நோட்டீஸ் அனுப்புகிறது டிஜிட்டல் இந்தியாவின் வருமான வரித்துறை. ஆனால் மக்கள் வரிப்பணத்தில் கோடி கோடியாக கொள்ளையடித்த அரசியல்வாதிகளுக்கு, ஊழலில் அவர்கள் உச்சம் தொடுவதற்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுக்கிறது.

வார்த்தைக்கு வார்த்தை, நேர்மை, துாய்மை, வாய்மை என்று முழங்குபவர்களிடம் அப்பாவித் தமிழன் கேட்கும் கேள்வி ஒன்றுதான்…இதுதானா சார் உங்கள் மனதின் குரல்?

**-பாலசிங்கம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *