மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

1996ல்... பழைய நினைவுகளைப் பகிர்ந்த முதல்வர்!

1996ல்... பழைய நினைவுகளைப் பகிர்ந்த முதல்வர்!

ரிப்பன் மாளிகையைப் பார்க்கும்போது நான் மேயராக இருந்தது நினைவுக்கு வருகிறது என முதல்வர் ஸ்டாலின் உருக்கமாகப் பேசியுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக ரூ.36.52 கோடியில், பேட்டரியால் இயங்கும் 1,684 மூன்று சக்கர வாகனங்கள், 15 காம்பாக்டர் இயந்திரங்களைத் தொடங்கி வைத்தல் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று (செப்டம்பர் 7) நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, 195 பேருக்குப் பணி ஆணை வழங்கினார்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “மாநகராட்சி வளாகத்திற்குள் வந்ததும் என் நினைவுகள் 1996க்கு சென்றுவிட்டது. 1996 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் நேராக என்னைத் தேர்ந்தெடுத்து அந்த பணியாற்றுவதற்குச் சென்னை மாநகர மக்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.

மேயர் என்றால் பெரிய அங்கி மற்றும் 100 பவுன் செயின் அணிந்து கொண்டு செவர்லெட் காரில் செல்வது தான் பணியாக இருந்தது. அதை நான் மாற்றி மக்கள் பணியாற்றுவது தான் மேயருடைய பணி என அந்தக் கடமையைச் செய்தேன்.

இந்த சாலை வழியாக செல்லும் போதெல்லாம் இந்த ரிப்பன் கட்டிடத்தைப் பார்த்துக்கொண்டே தான் செல்வேன். 1996ஆம் ஆண்டு வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்பதற்கு ஒரு நிகழ்ச்சியை இதே கட்டிடத்தில் நடத்தினோம். அதற்காக அழைப்பிதழ் தயாரித்து கலைஞரிடம் கொண்டு சென்றோம். அந்த அழைப்பிதழைக் கலைஞர் ஊற்று பார்த்துக் கொண்டிருந்தார். முதல் பக்கத்தில் கலைஞர் எனக்குப் பொன்னாடை அணிவித்துப் போன்ற ஒரு புகைப்படம், கடைசி பக்கத்தில் ரிப்பன் கட்டடத்தின் தோற்றம் இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

1996ஆம் ஆண்டு வெற்றி பெற்று நாம் ஆட்சிக்கு வந்தபோது என்னை அமைச்சராக்க வேண்டும் என்று அனைவரும் கலைஞரிடம் சொன்னார்கள். ஆனால் கலைஞர் என்னை அமைச்சர் ஆக்கவில்லை. நானும் அந்த நேரத்தில் அதை விரும்பவில்லை.

நம்முடைய தோழர்கள் சென்று கட்டாயப்படுத்தியும் முடியாது என்று அவர் மறுத்துவிட்டார்.

அதன்பின் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயர் பொறுப்புக்குப் போட்டியிட்டு மக்களுடைய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றேன்.

அந்தக் கட்டிடத்தைப் பார்த்த கலைஞர் என்னைப் பார்த்துச் சொன்னார், எல்லோரும் சேர்ந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சின்ன அறையில் உன்னை உட்கார வைக்கப் பார்த்தார்கள். ஆனால் நான் உன்னை இந்த பெரிய கட்டிடத்தில் உட்கார வைத்திருக்கிறேன் என்றார் . இந்த ரிப்பன் மாளிகை வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடம் என்று உங்களுக்குத் தெரியும்.

தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டத்தொடர் நடைபெறும் போது நான் எந்த நிகழ்ச்சிக்கும் ஒப்புக்கொள்வதில்லை. ஏனென்றால் சட்டமன்ற பணிகளைக் கவனிக்க வேண்டும்.

ஆனால் அமைச்சர் நேரு சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, ’வர வேண்டியது கொடியசைத்துப் போக வேண்டியது’ என்று கூறி என்னை அழைத்து வந்தார். இங்கு வந்து பார்க்கும்போது தான் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மேடை அமைத்துப் பேசவும் வைத்திருக்கிறார்.

எப்போதும் நேரு மிகவும் வேகமாக இருப்பார். அதனால் அந்த நகராட்சி நிர்வாகத்தை நேருவிடம் நாங்கள் ஒப்படைத்து இருக்கிறோம். சிங்காரச் சென்னை மட்டுமல்ல சென்னை 2.0 என்ற வகையில் பல திட்டங்கள் எல்லாம் தீட்டப்பட்டு வருகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா என்ற பெருநகரங்களின் வரிசையில் சென்னை உள்ளது. எனவே, சென்னைக்குப் பெருமை சேர்க்கக்கூடிய வகையில் பணியாற்றவேண்டும் என்று அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 8 செப் 2021