மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

நீட் குறித்து தனி விவாதம் நடத்த தயார்: மா.சுப்பிரமணியன்

நீட் குறித்து தனி விவாதம் நடத்த தயார்: மா.சுப்பிரமணியன்

நீட் குறித்து தனி விவாதம் நடத்த தயார் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆட்சி அமைத்துள்ள திமுக தலைமையிலான அரசு, தனது தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தது. அதன்படி அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வின் தாக்கம் குறித்த ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை ஆராய தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில், சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 7) சட்டப்பேரவையில் பேசிய கன்னியாகுமரி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், “நீட் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டதாக தவறான தகவலை ஆளும்கட்சி தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், நீட் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் தனியாக நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவால் விடுத்தார்.

அதற்குப் பதிலளித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் தேர்வு குறித்த விவாதத்தை தனியாக ஒருநாள் வைத்தால், அதற்கு தயாராக இருக்கிறேன். நீங்கள் சொல்கிற அல்லது காட்டுகிற எந்த ஆவணத்தையும் நான் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன். இதே சட்டமன்றத்திலிருந்து நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானம் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. குடியரசு தலைவரும் அதை திருப்பி அனுப்பிவிட்டார். இந்த இரண்டும் எப்போதாவது இந்த அவைக்குத் தெரிவிக்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “குடியரசு தலைவரின் உத்தரவுக்கு எந்தவிதமான விளக்கத்தையும் கேட்க முடியாது என்பது வழக்கறிஞரான தங்களுக்கும் நன்றாகவே தெரியும். அப்படி இருக்கும்போது குடியரசு தலைவர் நீட் தொடர்பான தீர்மானத்தைத் திருப்பி அனுப்பிய பிறகும், அன்றைய முதல்வரின் அறிவுறுத்தலை ஏற்று சட்டத் துறை சார்பில் ஒன்றிய அரசுக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்படுகிறது. அதில், ;நீட் தீர்மானத்தை குடியரசு தலைவர் நிறுத்தி வைப்பதற்கான காரணத்தை நாங்கள் அறிய விரும்புகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் கேட்க முடியாது என்று தெரிந்திருந்தும், இப்படி தொடர்ந்து காலம் கடத்தியது நீங்களா, இல்லையா? இதை உறுதிப்படுத்தி சொல்லிவிடுங்கள். என்னிடம் இருக்கும் ஆவணங்களை நான் காட்டுகிறேன். உங்களிடம் இருக்கும் ஆவணங்களைக் கொண்டு வாருங்கள். நாளையே சபாநாயகர் முன்பு தனி விவாதத்தை வைத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

புதன் 8 செப் 2021