மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

கொடநாடு- உச்ச நீதிமன்றமும் பச்சைக் கொடி: எந்த நேரத்திலும் எடப்பாடியிடம் விசாரணை!

கொடநாடு- உச்ச நீதிமன்றமும் பச்சைக் கொடி: எந்த நேரத்திலும் எடப்பாடியிடம் விசாரணை!

கொடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை என்று கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 7) உறுதி செய்திருக்கிறது. இதனால் கொடநாடு கொலை வழக்கில் இனி எந்த தடையும் இன்றி மேல் விசாரணை வேகமெடுத்திருக்கிறது.

2017 ஏப்ரல் 23 நள்ளிரவு ஜெயலலிதாவின் உகப்பான இடமான கொடநாடு எஸ்டேட்டில் கொலையும், கொள்ளையும் நடந்தது. கொள்ளையடிப்பதைத் தடுக்க முயன்ற காவலாளி ஓம் பகதூர் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் மர்மமான விபத்தில் மரணம் அடைந்தார். கொலை, கொள்ளையில் ஈடுபட்ட சயனின் மனைவி, மகள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் இப்படிப்பட்ட சங்கிலி மர்மங்களுக்கு விடை தெரியாமல் இருந்த நிலையில், திமுக ஆட்சி அமைத்ததும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதை ’அறிந்துகொண்ட’ முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு 18 ஆம் தேதி சட்டமன்றத்தில், ‘கொடநாடு வழக்கில் என் பெயரையும் சேர்க்க சதி நடக்கிறது’என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தார். ஆகஸ்டு 19 ஆம் தேதி அவசரமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக புகார் அளித்தார். ஆனால் சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் இருக்க வேண்டும். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று அதிமுகவினர் சொல்கிறார்கள்” என்று பதிலளித்தார்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடநாடு கொலை வழக்கின் சாட்சியாக இருக்கும் அனுபவ் ரவி என்பவர் மேல் விசாரணைக்கு தடை கேட்டு வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் மேல் விசாரணைக்கான காரணங்களை அடுக்கினார்கள். இதையடுத்து கொடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து ஆகஸ்டு 27 ஆம் தேதி மின்னம்பலத்தில் கொடநாடு வழக்கு: உயர் நீதிமன்ற தீர்ப்பு- எடப்பாடிக்கு அதிகரிக்கும் நெருக்கடி! என்ற தலைப்பில் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுவெளியில் கொடுத்த பேட்டிகளில் இருந்த வாதங்களையே முன் வைத்து மேல் விசாரணைக்கு தடைகேட்டார் அனுபவ் ரவி. அந்த மனுவை தள்ளுபடி செய்ததன் மூலம் எடப்பாடியின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதாகவே சட்ட வட்டாரங்களில் கருதப்பட்டது.

இந்த நிலையில் இரண்டே நாட்களில் அதாவது ஆகஸ்டு 30 ஆம் தேதி அனுபவ் ரவி உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன் என்ற வகையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கு இன்று (செப்டம்பர் 7) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அனுபவ் ரவி சார்பில் மூத்த வழக்கறிஞரும் மிகுந்த காஸ்ட்லியான வழக்கறிஞர் என டெல்லி பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டப்படுபவருமான சித்தார்த் லுத்ரா ஆஜரானார்.

மேல் விசாரணைக்கு தடை கேட்டு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தை அணுகி அதன் பேரில் உச்ச நீதிமன்றம் தடை விதித்த சில வழக்குகளைப் பட்டியலிட்டுக் காட்டிய சித்தார்த் லுத்ரா, “ஒரு வழக்கில் மேல் விசாரணை நடைபெற வேண்டுமானால் அந்த வழக்கை விசாரிக்கும் கீழமை நீதிமன்றத்தின் முறையான அனுமதியைப் பெற வேண்டும். ஆனால் தமிழ்நாடு காவல்துறை இதை முறையாக பின்பற்றிடவில்லை”என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட், “ஒரு குற்றவியல் வழக்கில் காவல்துறையினர் விசாரணை நடத்தும்போது திடீரென முக்கியமான தகவலோ, முக்கிய துப்பு கிடைத்தால் அந்த வழக்கை மறுவிசாரணையோ, மேல் விசாரணையோ செய்வது இயல்பானதுதானே? இதை எதற்கு பெரிது படுத்த வேண்டும்?” என்று கேட்டார்.

தொடர்ந்து வாதிட்ட சித்தார்த் லுத்ரா, “தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் ஆளுங்கட்சியாக வந்துள்ளார்கள். அதன் அடிப்படையில் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கை மேல் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள்” என்று குறிப்பிட்டார்.

ஆனால் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “இதற்கு மேல் இந்த மனு தொடர்பாக எதையும் நாங்கள் கேட்கத் தயாராக இல்லை. மேல் விசாரணையை எதிர்கொள்ளுங்கள். இந்த நேரத்தில் காவல்துறையினரின் மேல் விசாரணையைத் தடுத்தால் அது சரியாக இருக்காது” என்று கூறி தள்ளுபடி செய்தனர்.

ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் கொடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணைக்கு அனுமதி அளித்துவிட்ட நிலையில் இன்று உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்திருப்பதால் ஜெட் வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது மேல் விசாரணை.

இதற்கிடையில் இன்று காலை முதல் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் கொடநாடு கொலை வழக்கு மறு விசாரணை தொடர்பாக ஆறு மணி நேரம் போலீஸ் உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஏற்கனவே தேவைப்பட்டால் யாரை வேண்டுமானாலும் விசாரிப்போம் என்று நீலகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றமும் மேல் விசாரணைக்கு இன்று தெளிவாக பச்சைக் கொடி காட்டிவிட்ட நிலையில், கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எந்த நேரத்திலும் விசாரணை நடத்த போலீஸ் தயாராகிக் கொண்டிருக்கிறது.

-வேந்தன்

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

செவ்வாய் 7 செப் 2021