மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

போனவாரம் போராட்டம்- இந்த வாரம் நிவாரணம்: விநாயகர் சிலை தொழிலாளர்களுக்கு அறிவிப்பு!

போனவாரம் போராட்டம்- இந்த வாரம் நிவாரணம்: விநாயகர் சிலை தொழிலாளர்களுக்கு அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் விநாயகர் ஊர்வலங்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கும் நிலையில் இந்தப் பிரச்சினை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் இன்று (செப்டம்பர் 7) விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசின் முடிவுக்கு இந்து முன்னணி, பாஜக ஆகிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்து முன்னணி போராட்டம் அறிவித்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் தமிழக அரசு பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரவில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொது இடங்களில் கட்டுப்பாடுகளை 30--9-21 வரை அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றமும் அதைத்தான் குறிப்பிட்டுள்ளது.

கேரள மாநிலத்திலே ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்ததால்தான் அங்கே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது.

தமிழ்நாட்டிலும் கொரோனா இன்னும் முழுமையாக தடுக்கப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறது. ஒரு நாளுக்கு 50 ஏறுகிறது,ஒரு நாள் 50 குறைகிறது. இப்படியொரு சூழல் இருந்துகொண்டிருக்கிறது.

ஆகவேதான் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில்கொண்டு 15-9-21 வரை பொது இடங்களில் அனைத்து சமய கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது விநாயகர் சதுர்த்திக்கும் பொருந்தும்.

பொது இடங்களில் கொண்டாடத்தான் இந்த கட்டுப்பாடே தவிர, தனி நபர்கள் தங்கள் இல்லங்களில் கொரொனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கொண்டாட எந்த தடையும் இல்லை. எனவே இதை யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.

இதைஒட்டி இன்னொரு அறிவிப்பையும் வெளியிட விரும்புகிறேன். தமிழ்நாட்டில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள 12 ஆயிரம் மண் பாண்டத் தொழிலாளர்களுக்கு பொதுவாகவே மழைக் காலங்களில் தொழில் செய்யாத நிலையில் அவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் திருவிழாக் காலங்களில் விநாயகர் சிலைகளை செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் பொது இடங்களில் விழா கொண்டாட தடை விதிக்கப்பட்ட நிலையில் இவர்களின் தொழில் ,வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த மூவாயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை போக கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டு மொத்தம் பத்தாயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்கப்படும்" என்று அறிவித்திருக்கிறார் முதல்வர்.

கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதி ஜெயலலிதா பல்கலைக் கழக விவகாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்து வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நிலையில்... சில மணித்துளிகளில் சட்டமன்றத்தை நோக்கி விநாயகர் சிலைகளோடு ஒரு கூட்டம் ஊர்வலமாக சட்டமன்றத்தை நெருங்கியது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு கைவினை காகிதக் கூழ் விநாயகர் சிலைகள், களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர் நல சங்கத்தினர்தான் சட்டமன்றத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்கள் கையில் விநாயகர் சிலைகளும், ‘மன்றாடிக் கேட்கிறோம் மண் கலைத் தொழிலைக் காப்பாற்று’ என்ற பதாகைகளும் இருந்தன.

“தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகள் தயாரிப்பது, விற்பனை செய்வது போன்றவற்றுக்கு தடைகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு ஏற்பட்ட தொழில் முடக்கம், பொருளாதர இழப்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்... இந்த ஆண்டும் கொரோனாவால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்புக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். கடந்த ஆண்டைப் போல தொழில் செய்யும் தொழில் கூடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை இந்த அரசு கைவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து மின்னம்பலத்தில் சட்டமன்றத்தை நோக்கி திடீர் விநாயகர் ஊர்வலம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

சட்டமன்றத்தை நோக்கி ஊர்வலமாக வந்து அவர்கள் கோரிக்கை வைத்து சரியாக ஒரு வாரத்தில் இன்று (செப்டம்பர் 7) விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணத்தை சட்டமன்றம் வாயிலாக அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

-வேந்தன்

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

செவ்வாய் 7 செப் 2021