மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

ஜனவரி 1: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

ஜனவரி 1: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 7) சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.

இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காகக் கடந்த செப்டம்பர் 2017, ஜனவரி 2019 ஆகிய காலங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய வேலைநிறுத்தப் போராட்ட காலங்களை பணிக்காலமாக வரன் முறைப்படுத்த வேண்டும்.

முந்தைய ஆட்சியாளர்களால் பழிவாங்கும் நடவடிக்கையாக பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களை மீண்டும் அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய பணியிடத்திலேயே பணியமர்த்திட வேண்டும்.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக ஒன்றிய அரசு உயர்த்தியது. இந்த 11 சதவீத உயர்வு 2021 ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியைத் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.

கொரோனாவை காரணம் காட்டி ஏற்கெனவே 27 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டதால் அரசு ஊழியர்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். எனவே உடனே அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வரைச் சந்தித்து மனுவும் அளித்தனர்.

இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்,

“அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை உயர்வு குறித்து நிதிநிலை அறிக்கையில் 2022 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வரப்பெற்ற அரசு ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த அரசுக்கு கடும் நெருக்கடியான நிதி சூழல் இருப்பினும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட மூன்று மாத காலத்திற்கு முன்னதாகவே அதாவது 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும்.

இதன் மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

அறிவிக்கப்பட்ட காலத்திற்கு முன்னரே அகவிலைப்படி உயர்வினை அமல்படுத்துவதால், மூன்று மாத காலத்திற்குக் கூடுதலாக ஆயிரத்து 620 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். ஆண்டொன்றுக்குக் கூடுதலாக 6 ஆயிரத்து 480 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் , அரசுப் பணியாளர்கள் தங்கள் பணிக் காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதியின் மூலம் அவர்களுடைய பணித் திறன் மற்றும் அவர்களது செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு உயர் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்துள்ள வழிபாட்டு முறைகளின் அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தேவைக்கேற்ப அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்.

2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டங்கள் தொடர்பாக பல்வேறு சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்த காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்து பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுடைய வேலை நிறுத்த காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் ஆகியவை பணிக்காலமாக முறைப் படுத்தப்படும்.

வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை அதே இடத்தில் மீண்டும் பணி அமர்த்தும் வகையில் கலந்தாய்வின் போது அவர்களுக்கான உரிய முன்னுரிமை வழங்கப்படும். போராட்ட காலத்தில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும். ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாகப் பதவி உயர்வு ஏதேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் அதுவும் சரி செய்யப்படும்.

பணியில் இருக்கும்போது காலமான அரசுப் பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசு பணி பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் தீர்க்கும் வகையிலும், கருணை அடிப்படையிலான நியமனங்கள் குறித்து தற்போது நடைமுறையில் உள்ள தெளிவின்மையைச் சரி செய்யும் வகையிலும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். சத்துணவு சமையல் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும்” என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

-பிரியா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

செவ்வாய் 7 செப் 2021