மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

திராவிட அடையாளமே தமிழரின் பெருமை!

திராவிட அடையாளமே தமிழரின் பெருமை!

ராஜன் குறை

சென்ற வாரம் தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் சங்க இலக்கியம் குறித்த நூல்கள், திராவிட களஞ்சியம் என்ற நூல் வரிசை ஆகியவை வெளியிடப்படும் என்று கூறியிருந்ததை தவறாகப் புரிந்துகொண்டு சங்க இலக்கியத்தை தமிழ் களஞ்சியம் என்று சொல்லாமல் திராவிட களஞ்சியம் என்று சொல்லலாமா என்று ஒரு சர்ச்சை இணைய வெளியிலும், பொதுக்களத்திலும் உருவாக்கப்பட்டது. அமைச்சகம் தெளிவுபடுத்திய பிறகு இது ஓய்ந்தது. ஆயினும் இடையில் இந்த சர்ச்சையில் பங்கேற்ற பலர் கூற்றுக்கள் வழக்கம்போல “திராவிடம்” என்ற சொல்லின்மீதான ஒவ்வாமையை வெளிப்படுத்துவதாக இருந்தன. முரசொலி பத்திரிகையும் இந்த திராவிட ஒவ்வாமை குறித்து ஒரு தலையங்கம் தீட்டியது. தமிழ், திராவிடம் ஆகிய சொற்களின் ஆழ்ந்த உட்பொருள் என்ன, எதனால் இந்த பிரச்சினை மீண்டும், மீண்டும் எழுகிறது என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியமானதாகும்.

ஆரியரும், திராவிடரும்

பதினெட்டாம் நூற்றாண்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய ஆய்வாளர்கள் இந்தியாவின் பண்பாட்டுக்கு மூலாதாரம் ஆரிய இனத்தவர் என்று கருதினர். மத்திய ஆசிய புல்வெளிகளிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வந்த இவர்கள் சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினார்கள். அவர்கள்தான் இந்தியாவில் இருந்த பூர்வகுடிகளுக்கு, அதாவது அவர்களுக்கும் முன்னால் இங்கே வசித்து வந்தவர்களுக்கு, மொழியையும், பண்பாட்டையும் பயிற்றுவித்தார்கள் என்றும் நினைத்தார்கள். இந்த ஆரியர்களில் ஒரு பகுதியினர் தெற்கே இந்தியாவுக்கு வர, மற்றொரு பகுதியினர் வடக்கே ஐரோப்பாவுக்குச் சென்றதாகவும் ஐரோப்பிய நாகரிகத்தின் தோற்றுவாயும் இவர்கள்தான் என்றும் கருதினார்கள். இதற்கெல்லாம் அடிப்படை மொழியியல் ஆய்வு சமஸ்கிருத மொழிக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கண்டு அந்த மொழிக் குடும்பத்தை இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பம் என ஆய்வாளர்கள் அழைத்ததுதான் காரணம். மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் பேசும் மொழி அடிப்படையிலான வித்தியாசத்தை, இன (Race) வேறுபாடாக அடையாளம் காணக் கூடாது என்று கூறினாலும் “ஆரிய இனம்” (Aryan Race) என்ற கருத்து இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் வலுவடைந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் பல சிந்தனையாளர்கள், கலைஞர்களுக்குப் பல்வேறு காரணங்களால் மத்திய கிழக்கிலிருந்து வந்த யூதர்களின், கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கு ஒவ்வாததாக இருந்தது. அதனால் அவர்களுக்கு “ஆரியர்களே நமது மூதாதையர்கள்” என்ற கோட்பாடு மிகவும் பிடித்திருந்தது. இந்த ஐரோப்பிய ஆரிய மாயை ஹிட்லரின் ஆரிய இனவாதம், நாசிஸம், யூத இனப்படுகொலை வரை சென்றது. ஆனால் ஹிட்லர் போன்ற ஐரோப்பிய இனவாதிகள் இந்திய ஆரியர்களை “தூய” ரத்தமாகக் கருதவில்லை. இனக்கலப்பால் இந்திய ஆரியர்கள் தூய்மையிழந்துவிட்டதாகவே கருதினார்கள்.

இந்தியாவில் ஆரிய அடையாளம் முழுக்கவும் சமஸ்கிருத மொழி சார்ந்ததாகவே இருந்தது. வேத காலத்திலேயே ஆரியர்களும், உள்ளூர்காரர்களும் கலந்துவிட்டதாகவே ரோமிலா தாப்பர் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆரிய என்ற வார்த்தை மரியாதைக்குரியவர் என்ற பொருளில் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையில் சமஸ்கிருத மொழியைப் பயிலும், பயன்படுத்தும் பார்ப்பனர்கள் தங்களை ஆரியர்கள் என்றே கருதிக்கொண்டார்கள்; பிறரும் கருதினார்கள். அதன் காரணமாக சமஸ்கிருத கலப்பு அதிகம் கொண்ட வட இந்திய மொழிகளைப் பேசுபவர்களும் ஓரளவு ஆரியர்களே என்ற எண்ணமும் இருந்தது. உதாரணமாக சுவாமி விவேகானந்தர் தனது அமெரிக்கச் சொற்பொழிவு ஒன்றில் வட இந்தியர்களின் இனம் வேறு, தென்னிந்தியர்கள் இனம் வேறு என்று கூறுகிறார்.

இந்திய பண்பாட்டின் மூலாதாரம் ஆரியர்களும், சமஸ்கிருதமும்தான் என்ற சிந்தனை இரண்டு காரணங்களால் உடைபட்டது. ஒன்று தென்னிந்தியாவில் வசித்த ஆங்கிலேய, ஐரோப்பிய சிந்தனையாளர்கள் தமிழை மையமாகக் கொண்டு தென்னிந்திய மொழிகளின் வேர்ச்சொற்கள் இந்தோ - ஐரோப்பிய மொழியிலிருந்து வேறுபட்டவை என்று நிறுவினார்கள். இதன் மூலம் திராவிட மொழிக்குடும்பம் என்பது சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்ட தோற்றுவாயைக் கொண்டது என்று பெறப்பட்டது. இரண்டாவது மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நடந்த தொல்லியல் ஆய்வுகள். இந்த இடங்களில் கிடைத்த நகர நாகரிகத்தின் சான்றுகள் ஆரியர் வருகைக்கு முன்னால் நாகரிகம் செழித்திருந்ததை சுட்டிக்காட்டின. இந்த சிந்துவெளி நாகரிகம் ஆதி திராவிட நாகரிகமே என்பது குறித்த ஆய்வுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஆர்.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள 'Journey of a Civilization: Indus to Vaigai' என்ற நூல் அவ்விதத்தில் முக்கியமானது.

சமஸ்கிருதம் பயன்படுத்துபவர்கள் ஆரியர்கள் என்றால், தமிழை தொன்மையான மூத்த மொழியாகக் கொண்ட மொழிகளைப் பேசுபவர்கள் திராவிடர்கள் என்ற கருத்து உருவானது. தமிழம் என்ற சொல்லே திராவிடம் (Tamila-Damila-Dramila-Dravida) என்று பிற மொழிகளில் மருவியதாகவும் மொழியிலாளர் ஜி.ஏ.கிரியர்சன் 1906ஆம் ஆண்டு வெளியான அவரது 'Linguistic Survey of India' (Vol.4) நூலில் குறிப்பிடுகிறார். தேவநேயப் பாவாணரும் இந்த கருத்தை கூறியிருப்பதை அனைவரும் அறிவர். எனவே ஆரியம், சமஸ்கிருதம் போல இருவேறு மூலம் கொண்ட சொற்கள்கூட அல்ல தமிழும், திராவிடமும். காலப்போக்கில் “சமஸ்கிருதம் - தமிழ்” மொழி வேறுபாடாகவும், “ஆரியம்-திராவிடம்” என்பது பண்பாட்டு வேறுபாடாகவும் உருவாயின.

ஆரிய திராவிட வேறுபாடு என்பது பண்பாட்டு வேறுபாடே

மொழி வேறுபாட்டை மொழியின் பேரால் குறிப்பிடலாம். ஆரியர், திராவிடர் என்பது இன வேறுபாடு என்பதும் அறிவியலுக்குப் பொருத்தமானது இல்லை; ஏனெனில் இனக்கலப்பு ஏற்பட்டதை அனைத்து அறிஞர்களும், அண்ணா உட்பட ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால் ஆரிய-திராவிட வேறுபாடு என்னவென்றால் பண்பாட்டு வேறுபாடுதான்.

ஆரியம் என்பது பார்ப்பனர்களின் உயர்பிறப்பையும், சமஸ்கிருத தர்ம சாஸ்திரங்களையும், புராண, இதிகாசங்களையும் அடிப்படையாகக் கொண்டது. திராவிட பண்பாடு இவற்றை ஏற்காதது; இவற்றிலும் கூட மையமானது “பார்ப்பனர்+சமஸ்கிருதம் = ஆரியம்” என்ற சமன்பாடுதான். அண்ணாவின் ஆரிய மாயை நூல் இந்த முக்கியமான அம்சத்தைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. 1941ஆம் ஆண்டு ஒரு வழக்கில் தர்ம சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி ஒரு பார்ப்பனரல்லாத பெண்ணை பார்ப்பனர் மணந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது (Justice Pandrang Row. and Justice Somayya, Swayampakula Subbarammaya & Ors Vs Swayampakula Venkatasubbamma, Indian Law reports Madras Series (Madras High Court 1941). அதைச் சுட்டிக்காட்டும் அண்ணா, இனக்கலப்பு ஏற்பட்டதென்றால் ஏன் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதோரை திருமணம் செய்வது செல்லாது எனக் கூறப்படுகிறது என்று கேட்கிறார்.

நான்கு வர்ணங்களாக மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்ததும், பின்னர் சத்திரிய, வைசிய வர்ணங்கள் சூத்திரர்களுடன் கலந்துவிட்டன என்று கூறி பார்ப்பனர், சூத்திரர் என்ற இரு பிரிவுகளே நிலவுகின்றன என்றதும் எல்லாமே சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட சாத்திரங்கள்தான். இவைதான் ஆரிய பண்பாட்டின் அடிப்படையாக உள்ளன. எனவே சாதி ஒழிப்பில், சமூக நீதியில் அக்கறை கொண்டோர் ஆரிய பண்பாட்டுக்கு மாற்றாக திராவிட பண்பாட்டை தங்களுடையதாக வரிப்பது அவசியம். இதுவே இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் திராவிட அடையாளம் ஓர் அரசியல் அடையாளமாக மாறியதன் அடிப்படை. அந்த திராவிடப் பண்பாட்டின் தவிர்க்க முடியாத அடித்தளம் தமிழ் மொழி.

தமிழ் மொழி அடையாளமே போதாதா?

திராவிட இயக்கம் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாரதிதாசன் வார்த்தைகளை உயிர் மூச்சாகக் கொண்டது. கீழப்பழுவூர் சின்னசாமி உள்ளிட்ட பலர் தமிழுக்காக உயிரை ஈந்தனர். ஆனாலும் தமிழர் என்ற அடையாளத்துடன் ஏன் திராவிடர் என்ற அடையாளத்தையும் அவசியம் சேர்க்க வேண்டியுள்ளது என்பதே நாம் தெளிவுபட வேண்டிய கூறாகும். அறிஞர் அண்ணா ஆரிய மாயை நூலில் இதைத் தெளிவாக விளக்குகிறார். தமிழ் மொழியில் பல்வேறு நூல்களில் ஆரிய சிந்தனை நுழைந்துள்ளதை, அவை தமிழ் இலக்கியத்தின் அங்கமாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வச்சணந்தி மாலை என்ற இலக்கண நூலில் எப்படி பா வகைகள் வர்ண பாகுபாட்டுடன் பிணைக்கப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். வெண்பா என்பது பார்ப்பனர்களைக் குறித்து எழுதுவதற்கு உகந்தது என்றெல்லாம் கூறுகிறது அந்த நூல். ஏன், ராமாவதாரம் என்ற கம்பராமாயணம் தமிழின் தன்னிகரற்ற காப்பியம் அல்லவா? அதனை திராவிடப் பண்பாடு விமர்சனமில்லாமல் ஏற்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பெரிய புராணத்தில் பக்தர்களின் கண்மூடித்தனமான வன்செயல்களை நீதி தேவன் மயக்கம் நாடகத்தில் எடுத்துரைக்கிறார் அண்ணா. இவ்வாறாக தமிழ் மொழியினுள் ஆரிய பண்பாட்டின் சிந்தனை கணிசமாக கலந்துவிட்டதால்தான் தமிழின் தொன்மையான அடித்தளமான திராவிடப் பண்பாட்டை மீட்க திராவிட அடையாளம் தமிழுக்குத் தேவைப்படுகிறது. எனவே “திராவிடத் தமிழர்” என்று சேர்த்துச் சொல்வதே ஆரியக்கலப்பற்ற திராவிட தமிழ் பண்பாட்டினை வலியுறுத்துவதாக இருக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். பெரியாரும், அண்ணாவும் திராவிடர் என்ற வார்த்தையை அரசியலின் அச்சாணியாகக் கொண்டது அதனால்தான் என்பது வெளிப்படையானது. எனவே தமிழின் தவிர்க்கமுடியாத பண்பாட்டு அடித்தளம்தான் திராவிடம்.

தமிழக அரசா? தமிழ் தேசமா?

இருபதாம் நூற்றாண்டின் போக்கில் இந்திய விடுதலை இயக்கத்தின் பகுதியாக தமிழகமும் விளங்கியது. தமிழின் மறுமலர்ச்சியும் காலனீய எதிர்ப்பினால் உரம் பெற்றது. இந்தியா விடுதலை பெற்றபோது பல்வேறு மொழி பேசும் மக்கள் தொகுதிகளின் உரிமைகள் குறித்த கேள்வி நிச்சயம் அனைவர் மனதிலும் இருந்தது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் அதற்கு விடையாகப் பல்வேறு அரசுகளின் ஒன்றிய அரசாங்கமாகவே இந்தியாவின் ஆட்சி மையத்தை வரையறுத்தது. அதாவது ஒற்றை தேசிய அரசு, மாநில அரசாங்கங்கள் என்று கூறவில்லை. மாநில அரசுகள், ஒன்றிய அரசாங்கம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. அந்த ஒன்றியத்தின் அடித்தளம் இந்திய தேசம் என்ற கருத்தாகும்.

மாநிலங்களின் உரிமைகளைப் பேசுபவர்கள் சிலர், அந்த மாநிலத்தின் மக்கள் தொகுதியை தேசிய இனம் என்று பேசுவதே முக்கியம் எனக் கருதுவது வழக்கம். இது இந்திய தேசியத்தை மறுதலிப்பதால் பிரிவினைவாத போக்காகக் காணப்படும். காலனீய எதிர்ப்பு தேசியம் என்பது வரலாற்றின் தவிர்க்க முடியாத கட்டம் எனலாம். ஆனால் அதன்பிறகு தொடர்ந்து தேசங்கள் பிரிந்து தேசிய அரசுகள் தோன்றுவதை உலக முதலீட்டிய வலைப்பின்னல் ஆதரிப்பதில்லை. மேலும் பிரமாண்டமாக வளர்ந்துவிட்ட போக்குவரத்து மற்றும் ஊடக வலைப்பின்னலால் முதலீட்டிய செயல்முறையும் சரி, இறையாண்மையின் உள்ளடக்க வடிவமும் சரி முற்றிலும் மாறிவிட்டன. இருபத்தோராம் நூற்றாண்டில் கள்ள மார்க்கெட் ஆயுத வியாபாரிகள் வேண்டுமானால் தேசிய இனப்போராட்டங்களை ஆதரிப்பார்களே தவிர, புதிய தேசிய அரசுகள் உருவாவது சாத்தியமும் இல்லை. அதற்கு வரலாற்று உள்ளடக்கமும் இல்லை என்பதை ஜென்ஸ் பார்டெல்சன் என்ற அறிஞர் அழகாக ஆய்ந்து விளக்கியுள்ளார்.

எனவே மக்களின் உரிமைகளை சுயாட்சி உரிமைகளாக கோருவதுதான் பொருத்தமே தவிர, இறையாண்மை பெற்ற தேசத்தை கனவு காண்பது பொருத்தமில்லை. இந்த விதத்தில் அண்ணா ஓர் அரசியல் தீர்க்கதரிசியாக இருந்ததால்தான் திராவிட கூட்டாட்சி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் எனலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அமெரிக்க அரசியலாளர் வெண்டல் வில்க்கி முன்மொழிந்த உலகக் கூட்டாட்சியை அண்ணா ஒத்திசைவுடன் குறிப்பிடுகிறார். ஒரு மக்கள் தொகுதி தங்கள் உரிமைகளைப் பெற சுயாட்சி-கூட்டாட்சி வடிவம்தான் தேவையே தவிர, இறையாண்மையுள்ள தேசிய அரசுதான் தேவை என்பது மாயை. இருபத்தோராம் நூற்றாண்டில் மேலும் நீர்த்துப்போன மாயை.

தேசியத்தின் பக்க விளைவுகள்

தேசியம் ஒரு புறம் சாத்தியமற்ற, உள்ளடக்கமற்ற இறையாண்மையை நோக்கி தூண்டுமென்றால் மற்றொருபுறம் யாரை உள்ளடக்குவது, யாரை வெளியேற்றுவது என்ற கேள்வியை எழுப்பும். தமிழ் தேசியம் பேசும் பலர் அண்டை மாநிலங்கள் மீது விரோதபாவம் கொள்வதும், பிற மாநிலத்திலிருந்து பணிபுரிய தமிழகம் வந்துள்ளவர்களை வெறுப்பதையும் காணலாம். இவர்கள் தமிழர்கள் இந்தியா முழுவதும் சென்று பொருளீட்டி வருவதை கவனிப்பதுமில்லை; புரிந்துகொள்வதுமில்லை. இன்றைய முதலீட்டிய உலகில் இவ்வாறான உழைக்கும் மக்கள் புலம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாத ஓர் உலகளாவிய நிகழ்வாகும்.

தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழர் நலன்களுக்கும், அண்டை மாநிலங்களான பிற திராவிட மொழி பேசும் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் நலன்களுக்கும் பெரியதொரு முரண்பாடு இருப்பதாகக் கற்பிப்பது விபரீதமான போக்காகும். நதி நீர் பிரச்சினை போன்ற சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அது ஒரு மாநிலத்துக்குள்ளும், ஏன் ஒவ்வொரு ஊரிலும்கூட உருவாகக் கூடியதுதான். அந்த பிரச்சினைகளை விரோதபாவமாக்குவது என்பது ஆரோக்கியமான போக்கல்ல.

தமிழர் உரிமைகள், தமிழர் நலன் என்பது நமது அரசியலின் அடிப்படை குறிக்கோள். அது திராவிட பண்பாடு என்ற அடித்தளத்தில் கட்டி எழுப்பப்படும்போதுதான் சமூகநீதி என்ற சிறந்த வரலாற்று உள்ளடக்கத்துடன், சுயாட்சி மற்றும் கூட்டாட்சி என்ற அரசியல் மாண்பினையும் கொண்டதாக இருக்கும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மகத்தான வாக்கியத்துக்கு சொந்தக்காரர்கள் நாம். அதற்கு அடுத்த வரியும் முக்கியம். அது: “தீதும் நன்றும் பிறர் தர வாரா.”

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

.

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

திங்கள் 6 செப் 2021