மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

விநாயகர் சதுர்த்தி: சேகர்பாபு வைத்த செக்- நிலைப்பாட்டை மாற்றிய அண்ணாமலை

விநாயகர் சதுர்த்தி: சேகர்பாபு வைத்த செக்-  நிலைப்பாட்டை மாற்றிய அண்ணாமலை

தமிழ்நாட்டில் சென்ற வருடம் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் கரைக்கும் நிகழ்வுக்கு அப்போதைய அதிமுக அரசு தடை விதித்தது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி இல்லை. வீடுகளில் வைத்து வழிபடலாம் என்று கடந்த வருடம் அதிமுக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்தது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் -அக்டோபரில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் என்ற நிபுணர்களின் எச்சரிக்கையின் பேரில் மத சம்பந்தமான கூடுகைகளுக்கு இந்த வருடமும் இப்போதைய திமுக அரசு தடை விதித்தது.

இதுகுறித்து சில தினங்களுக்கு முன் தென்காசியில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பது பேரணி கிடையாது. அவரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம், நமது மரபு இது. விநாயகரை கையிலெடுத்து அரசியல் ஆரம்பித்தால், திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் விநாயகரே காரணமாக இருப்பார். நம் கட்சியை சமூக தளங்களில் திட்டிக் கொண்டே இருக்கிறார்களே என்று வருத்தப்படாதீர்கள். நம் கட்சியை திட்டத் திட்டத்தான் குஜராத்தில் வளர்ந்தோம். சோனியா காந்தி நம் மோடியை மரணத்தின் தூதர் என்று திட்டினார். அதன் பிறகுதான் நாம் வளர்ந்தோம்” என்று பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் செப்டம்பர் 4 ஆம் தேதி நடந்த இந்து சமய அறநிலையத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது, நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, "விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்”, என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கொரோனா மூன்றாம் நிலை உருவாகும் சூழல் இருப்பதால், மக்கள் அதிகளவு கூடும் வகையில் விழாக்களை நடத்தத் தடை விதிக்க வலியுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

விநாயகர் ஊர்வலத்துக்கு தடை விதித்தால் திமுக அரசையே விநாயகர் முடித்து வைப்பார் என்று ஆவேசமாகப் பேசிய அண்ணாமலை சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு, “ஒன்றிய அரசின் அறிவுரையின் பேரில்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்ததும் தனது போக்கை மாற்றிக் கொண்டு இன்று (செப்டம்பர் 6) ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் வீடுகளில் விநாயகர் வழிபாடு நடத்தப்பட வேண்டும். வீட்டுக்கு வீடு விநாயகர் சிலை வைக்கப்பட வேண்டும். புதுச்சேரி, கர்நாடகா ,மகாராஷ்டிரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் எல்லாம் விநாயகர் வழிபாட்டுக்கு எந்த தடையும் இல்லாத போது கட்டுப்பாடுகள் கூட விதிக்காமல் தமிழ்நாட்டில் முழுமையான தடை விதிக்க காரணம் என்ன? தமிழரின் தொன்மையான விநாயகர் வழிபாட்டை மதிக்காமல் முழுமுதற் கடவுளை மதிக்காமல் தொடர்ந்து பக்தர்களை அவமானப்படுத்தினால் மாற்று மதத்தினரின் ஓட்டுகளை சம்பாதிக்கலாம் ஆதரவைப் பெருக்கலாம் என்ற நோக்கத்தில் இந்த அவல முடிவு எடுக்கப்பட்டதா?

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒரு லட்சம் வீடுகளில் வாசலில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் அகவல் பாடி வழிபட இருக்கிறோம். தமிழர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் வாசலில் கோலத்தின் மீது விநாயகர் சிலையை வைத்து வழிபடுங்கள். மற்ற மதத்தினரையும் உங்கள் வழிபாட்டிற்கு அழையுங்கள். மரியாதையுடன் அவர்களுக்கும் நம் மனக்காயங்களை சொல்லுங்கள். விநாயகர் சிலைகளை மரபுப்படி நீங்களே சென்று நீர் நிலைகளில் கரையுங்கள். ஆகம முறைப்படி நீரில் கரைக்க வேண்டிய விநாயகரை அள்ளும் குப்பைகள் போல அரசு கரைக்க முற்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ள அண்ணாமலை மேலும்

“தமிழக மக்களுக்கும் பாஜக தொண்டர்களும் இன்னும் ஒரு வேண்டுகோள். மாற்றுமத பண்டிகைகளுக்கு மனமார வாழ்த்து சொல்லும் நம் மாநில முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்களை நாம் அனைவரும் ஓர் அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி வைப்போம். பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தமிழக முதல்வருக்கு ஒரு அஞ்சல் அட்டையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 6) சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு,

“வீட்டிலிருந்தே விநாயகரை வழிபட்டால் அவர்களின் கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார். அரசியல் நடத்துவதற்குப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அண்ணாமலைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

-வேந்தன்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

திங்கள் 6 செப் 2021