மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

உத்தரவுகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை: தலைமை நீதிபதி!

உத்தரவுகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை: தலைமை நீதிபதி!

உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் உத்தரவுகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை என்று தலைமை நீதிபதி காட்டமாகத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதற்காகப் பல முறை கால அவகாசமும் வழங்கியது.

இதுதொடர்பான வழக்கு இன்று (செப்டம்பர் 6) தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடும் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.

ஒன்றிய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளை மதிப்பதே இல்லை என்று தெரிவித்த தலைமை நீதிபதி, அரசுடன் மோதல் போக்கை நாங்கள் விரும்பவில்லை. எங்களது பொறுமையைச் சோதிக்காதீர்கள் என்று தெரிவித்தார்.

அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசாங்கமும் மோதல் போக்கை விரும்பவில்லை என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், தேசிய நிறுவன சட்டம் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் ஆகியவை பொருளாதாரத்திற்கு முக்கியமானவை. ஆயுதப் படைகள் மற்றும் நுகர்வோர் தீர்ப்பாயங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளதால் வழக்குகளை விசாரித்துத் தீர்வு காணத் தாமதம் ஏற்படுகிறது என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து ஒன்றிய அரசு தரப்பில் இந்த பணி நியமனங்கள் தொடர்பாக இரண்டு மாதங்களில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இரண்டு ஆண்டுகளாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ளது. நீங்கள் ஏன் இன்னும் நியமனம் செய்யவில்லை? நீதிபதிகளை நியமனம் செய்யாமல் தீர்ப்பாயங்களை ஏன் பலவீனப்படுத்துகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினர்.

செப்டம்பர் 13ஆம் தேதி தான் இறுதிக் கால அவகாசம், இல்லை என்றால் அந்த பணிகளை நாங்களே செய்ய நேரிடும் அல்லது தீர்ப்பாயங்களை மூடி உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

திங்கள் 6 செப் 2021