ராஜாதி ராஜ முதல் மிஸ்டர் மேடம் வரை…

politics

அ. குமரேசன்

கம்பம் ஊன்றுவது போல மேலிருந்து கீழே புகுத்தப்படுவது அதிகாரம். விதை முளைப்பது போலக் கீழிருந்து மேலே விரிவது நாகரிகம். நவீனங்களின் குடியிருப்பு நகரங்கள் என்றாலும், முற்போக்கான மாற்றங்கள் கிராமங்களில் வேர் பிடித்தால்தான் தழைத்து ஓங்கும். அரசியல், பொருளாதாரம், சமூகம் என எல்லாத் தளங்களுக்கும் இது பொருந்துமானாலும், பண்பாட்டுத் தளத்தில் இவ்வாறு வேர் பிடித்து வளர்வது மிகமிகத் தேவையானது.

அப்படியொரு மாற்றத்துக்கான முயற்சியை விதைத்திருக்கிறது மாத்தூர் என்ற கிராமம். கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கிறது இந்தக் கிராமம். பொதுவாகவே அரசு நிர்வாகக் கட்டமைப்பில் கிராம ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் அதிகாரங்களை உறுதிப்படுத்தி வலிமையளித்திருப்பது மலையாள மாநிலம். அத்தகைய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டுள்ள மாத்தூர் கிராம ஊராட்சி மன்றம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு தீர்மானத்தை கடந்த ஆகஸ்ட் 31 அன்று ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது. எந்த மாநிலத்தையும் விட்டுவைக்காமல் தொற்றிப் படர்கிற கொரோனா விரைவில் பட்டுப்போய் ஒழிய வேண்டும். இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கமோ எல்லா மாநிலங்களையும் காலப்போக்கில் பற்றிப் பரவ வேண்டும்.

**இப்படியொரு தீர்மானம்!**

ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வருகிற பொதுமக்கள் இனிமேல் அங்குள்ள யாரையும் “சார்” என்றோ ”மேடம்” என்றோ அழைக்கத் தேவையில்லை! தங்களது கடிதங்களிலும் மனுக்களிலும் அவ்வாறு குறிப்பிட வேண்டியதில்லை! மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள் எவரானாலும் பெயர் சொல்லியே விளிக்கலாம்!

எத்தனையோ தலைமுறைகளாகத் தொடரும் பழக்கம், எளிதில் கைவிடப்படுமா? அலுவலகத்துக்கு வருகிற மக்கள், மரபாகத் தொடரும் பண்பாட்டின் காரணமாக, வயதில் மூத்தவர்களையாவது மரியாதையாக அழைக்க விரும்புவார்களே? அது குறித்தும் ஆலோசித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒரு மாற்று வழியையும் காட்டுகிறது. வேண்டுமானால் மூத்தவர்களை “சேட்டா” என்றோ, “சேச்சி” என்றோ அழைத்துக்கொள்ளலாம், கட்டாயமில்லை.

மன்ற அலுவலகத்துக்குக் கடிதம் அல்லது கோரிக்கை மனு கொடுக்கிறவர்கள், “தயைகூர்ந்து நிறைவேற்றித் தருமாறு தாழ்மையோடு வேண்டுகிறேன்” என்றோ, “பணிவுடன்” என்றோ முடிக்க வேண்டியதில்லை. கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொள்வதாக மட்டும் எழுதினால் போதுமானது.

தீர்மானத்தை நிறைவேற்றிய கையோடு, ஊராட்சி மன்ற வாயிலில் ஒரு பொது அறிவிப்பையும் வைத்துவிட்டார்கள்: அலுவலகத்தில் யாரேனும் தங்களை மரியாதையோடு அழைக்காததால் அல்லது மனுவில் குறிப்பிடாததால், மக்கள் நாடி வந்த பணியைச் செய்துகொடுக்க மறுப்பார்களானால், அது குறித்துப் புகார் செய்யலாம்! புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!

**ஜனநாயக நாகரிகம்**

அந்த ஊராட்சியில் 16 உறுப்பினர்களுடன் ஆளுங்கட்சியாக இருப்பது காங்கிரஸ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழு உறுப்பினர்களும், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக அனைவரும், மன்றத் துணைத்தலைவர் முன்மொழிந்த தீர்மானத்துக்கு ஒரு மனதாக ஆதரவளித்து நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆக, இப்படியொரு தீர்மானமே சிறந்ததொரு முன்னுதாரணமாகிறது என்றால், கட்சி வேறுபாடின்றி எல்லோருமாகச் சேர்ந்து அதை நிறைவேற்றியிருப்பது மற்றொரு நல்ல முன்னுதாரணமாகிறது. பாராட்டுக்குரியவர்கள் அவர்கள் மட்டுமல்லர், அவர்களைப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்த மாத்தூர் மக்களும்தான்.

“தங்களுடைய தேவைகளுக்காக ஊராட்சி அலுவலகத்துக்கு வருகிற பொதுமக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகள், அலுவலர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை இணைப்பதுதான் இந்த நடவடிக்கையின் மையமான நோக்கம். அலுவலகத்தில் ஒரு நட்பான, இணக்கமான சூழலை ஏற்படுத்துவதில் எங்கள் ஊராட்சியில் எல்லோருமே, கட்சி மாறுபாடுகளுக்கு அப்பால் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்கள். சார், மேடம் போன்ற மரியாதைச் சொற்களைப் பயன்படுத்துவது, எங்களுக்கும் தங்கள் பிரச்சினைகளுக்காக எங்களை நாடிவருகிற மக்களுக்கும் நடுவே ஓர் இடைவெளியை ஏற்படுத்துகிறது என்ற உணர்வு எங்கள் எல்லோருக்குமே இருந்தது” என்றார் தீர்மானத்தை முன்மொழிந்தவரும் துணைத்தலைவருமான பி.ஆர்.பிரசாத்.

இந்த கௌரவச் சொற்கள் கடந்தகால காலனியாட்சியின் மிச்சசொச்சங்கள் என்ற உணர்வும் உறுப்பினர்களுக்கு இருந்தது. “ஜனநாயகத்தில் மக்கள்தான் எசமானர்கள். மக்களின் பிரதிநிதிகளும் அலுவலர்களும் அவர்களுக்கு சேவை செய்வதற்கே இருக்கிறார்கள். தங்களுடைய தேவைகளுக்காக அவர்கள் எங்களை வேண்டிக்கொள்ள வேண்டியதில்லை, மாறாக எங்களது பணியை வலியுறுத்த முடியும். ஏனென்றால் அது அவர்களுடைய உரிமை” என்றும் அவர் கூறினார்.

**விமர்சனத்தில் வெளிப்படும் மனசு**

“சார், மேடம் என்று சொன்னால் என்ன, சொல்லாவிட்டால் என்ன? முறைகேடுகள் இல்லாமல் நிர்வாகத்தை நடத்துவதுதான் முக்கியம். இதெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய மக்களைத் திசை திருப்புகிற உத்திதான்” என்று இதைச் சுண்டித் தள்ளிவிட முயன்றார் ஒரு விமர்சகர். பெரியவர்களையும் பொறுப்பில் உள்ளவர்களையும் மரியாதையாக அழைப்பது நம் கலாச்சாரம். சார், மேடம் போன்ற காலனியாட்சி வார்த்தைகளை நீக்குவது சரி, அவற்றுக்கு மாற்றாக நமது மொழிகளில் உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தலாமே” என்றார் மற்றொரு நண்பர். இவ்வாறு வாதிடுகிறவர்களின் வாய்மொழிகளைத் தாண்டித் தோண்டிப் பார்த்தால், கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது எந்தவொரு முற்போக்கான மாற்றமும் நிகழ்வதை ஏற்க மறுக்கிற மனம் வெளிப்படும்.

அதிகார பீடத்தில் இருக்கிறவர்களை அண்ணாந்து பார்க்கிறவர்களாகவே எளிய மக்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தியல் கட்டமைப்போடு தொடர்புள்ள அடிமைக் கலாச்சாரமே இவ்வாறு கௌரவமாக விளிக்க வேண்டும் என்பது. காலனியாட்சிக் காலத்தில் படிநிலைகளுக்கான சொற்களும் கட்டாயப்படுத்தப்பட்டன. “ஹிஸ் எக்ஸலன்சி”, “யுவர் ஹைனஸ்” என்பன உள்ளிட்ட சொற்கள் பதவியோடு பதிக்கப்பட்டன. உயரதிகாரிகளைக் கீழ்நிலை அலுவலர்களும் பொதுமக்களும் அந்தச் சொற்களாலேயே குறிப்பிட வேண்டும், இல்லாவிட்டால் காரியம் நடக்காது. சில நேரங்களில் மரியாதைச் சொல்லைத் தவறவிட்டுவிட்டால், வேண்டுகோள் நிராகரிக்கப்படும், வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, காவல்துறையில் இதன் தாக்கம், நாட்டின் விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்தது. காவல்துறை உயரதிகாரியைக் காவலர்கள் “துரை” என்று அழைக்கிற பழக்கம் நீடித்தது. மிகப் பிற்காலத்தில்தான் சார், மேடம் என்று குறிப்பிடுவது நடைமுறைக்கு வந்தது. அந்தக் கோணத்தில் பார்த்தால் எல்லா மட்டத்திலுமான அதிகாரிகளையும் இவ்வாறு குறிப்பிடலாம் என்பதால், ஒப்பீட்டளவில் சார், மேடம் கூட ஓரளவுக்குப் பொதுத்தன்மையோடு இருக்கின்றன எனலாம்.

**அலுவலகக் கையேட்டிலேயே… **

ஒன்றிய – மாநில அரசுகளின் வழிகாட்டல் நெறிமுறைகளிலேயே கீழ்நிலை அலுவலர்கள் மேல்நிலையர்களை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்பதற்கான விதிகள் இருக்கின்றன என்று தெரிவிக்கிறார் ஒரு மூத்த வழக்குரைஞர். மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் இதற்கான கையேடுகள் பராமரிக்கப்படுகின்றன. மேலதிகாரிகளுக்கு அனுப்பும் கடிதங்களில், “ஐ சப்மிட்” – அதாவது “கீழ்ப்படிதலுடன் சமர்ப்பிக்கிறேன்” என்றே கீழ்நிலை அலுவலர்கள் குறிப்பிட வேண்டும். இப்படிக் கீழ்ப்படிதலுடன் சமர்ப்பிக்கிற ஒருவர் பதவி உயர்வு பெற்று மேலதிகாரியாக அமர்வாரானால், அவர் தனக்கு மேலே அமர்ந்துள்ள அதிகாரிக்கு அனுப்பும் ஆவணங்களைக் கீழ்ப்படிதலுடன்தான் “சப்மிட்” செய்தாக வேண்டும். “இது கூட பிற்காலத்து மாற்றம்தான். முன்பு ‘ஐ பெக் டு சப்மிட்’ (தங்களிடம் இறைஞ்சிக் கேட்டு சமர்ப்பிக்கிறேன்) என்று எழுதிய பிறகுதான் கையெழுத்துப் போட வேண்டிய நிலைமை இருந்தது” என்றார் வழக்குரைஞர்.

வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் வாதாடும்போது, நீதிபதிகளை “யுவர் ஹானர்” என்றோ, “மை லார்ட்” என்றோ விளிப்பது இப்போது மாறியிருக்கிறதா? “பெரிதாக மாறிவிடவில்லை. பல நீதிபதிகளே நொந்துபோய், ‘இதெல்லாம் வேண்டாமே, எங்களை சார் அல்லது மேடம் என்றே சொல்லுங்கள், இல்லையேல் மிஸ்டர் அல்லது மிஸ் என்பதோடு பெயரைச் சேர்த்துப் பேசுங்களேன்’ என்று கேட்டுக்கொண்டதுண்டு. ஆனால் இப்படியே பழகிப்போன வழக்குரைஞர்களால் இதை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அவர்களைப் பார்த்து வாதாடப் பழகுகிற இளைய தலைமுறையினரும், எதற்கு வம்பு என்று “மை லார்ட்” என்றே அழைக்கத் தொடங்குகிறார்கள். மாற்றம் அவ்வளவு எளிதல்ல என்றும் அந்த மூத்தவர் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் “கனம் மினிஸ்டர்” “கனம் ஸ்பீக்கர்”, நீதிமன்றத்தில் “கனம் கோர்ட்டார்” என்று குறிப்பிடுகிற பழக்கம் சில காலத்துக்கு இருந்தது. திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் அண்ணா மேற்கொண்ட நடவடிக்கையால் இது வெளியேற்றப்பட்டு, தமிழில் “மாண்புமிகு”, “மாண்பமை” என்று குறிப்பிடுகிற நடைமுறை கொண்டுவரப்பட்டது. இன்றளவும் தொடர்கிற இந்தப் பழக்கம் பண்பாட்டுத் தளத்தில் ஒரு முக்கிய நகர்வுதான். இந்த “மாண்புமிகு”, “மாண்பமை” போன்ற சடங்குப்பூர்வமான மரியாதைச் சொற்கள் இனிமேலும் தொடரத்தான் வேண்டுமா? இந்தக் கேள்வி உடனடிக் கவனத்துக்கான பிரச்சினையாக உரக்க ஒலிக்காவிட்டாலும், வருங்காலப் பரிசீலனைக்கான கேள்வியாக ஒலி குறைந்தாவது கேட்கப்படுகிறது.

** “ராஜ கம்பீர…” **

காலனியாட்சி பரவியிருந்த நாடுகளில் எல்லாம் இந்தப் பழக்கங்கள் ஒட்டியிருக்கக்கூடும். மேற்குலக நாடுகளில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்காவில் நாடாளுமன்றத்திலும் வெளி நிகழ்வுகளிலும் “மிஸ்டர் பிரசிடென்ட்” என்று பதவியை, “மிஸ்டர் பைடன்” என்று பெயரைச் சொல்லி அழைத்துப் பேசலாம். சிங்கப்பூரில் அரசு அலுவலர்கள் சார்/மேடம் என்ற ஒட்டுகள் இல்லாமல் பெயர் சொல்லியே அழைக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கிறார் இங்கிருந்து அங்கே சென்று ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிற நண்பர்.

வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், மேலே இருப்பவர்களுக்குக் கீழே இருப்பவர்கள் தாழ்ந்து பணிந்து மரியாதை செலுத்த வேண்டும் என்பது மன்னராட்சிக் காலத்திலேயே இறுகிப் போயிருந்ததைப் பார்க்கலாம். அரசனைத் தலைமையமைச்சரும், தலைமையமைச்சரை மற்ற அமைச்சர்களும், அமைச்சர்களை மற்றவர்களும் புகழ்ந்தோதிவிட்டுப் பேச்சைத் தொடங்குகிற காட்சிகளை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பார்த்திருக்கிறோம். அந்தப் புகழ்ச்சிகள் வசனகர்த்தாக்களின் கற்பனை என்று சொல்லிவிட முடியுமா?

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் அரண்மனைக் கொலுமண்டபத்துக்கு மன்னர் வருவதை அறிவிக்கும் சேவகன், “ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜகுல திலக…. பராக் பராக் பராக்” என்று சொல்வான். வேகமாக நடந்து வந்துகொண்டிருந்த மன்னன் வரவேற்பு முழக்கத்தில் ஒரு அடைமொழி விட்டுப்போனதைக் கண்டுபிடித்துத் தண்டனையளிப்பான். வடிவேலுவின் அட்டகாச நடிப்பில் அந்தக் காட்சி சிரிப்போடு சிரிப்பாக மன்னராட்சி மனநிலையைக் காட்டியது. நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு உருவானதோடு வளர்ந்த மனநிலை அது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் இப்படியே நடந்திருக்கிறது. அதிகாரத்தில், செல்வக்குவிப்பில் மேல்தட்டுக்காரர்களை கீழ்த்தட்டுக்காரர்கள் வணங்கி நிற்கவைக்கிற விதிகளில் ஒன்றாகக் கட்டப்பட்ட மனநிலை. இந்தியச் சமுதாய அமைப்பில் கூடவே சாதியப் படிநிலையும் சேர்க்கப்பட்டுவிட்டது. உயர்மேடைகளில் உட்கார்ந்துகொண்டவர்களுக்கு தாழ்தளங்களிலும் தரையிலும் நிற்பவர்கள் மரியாதை செலுத்தியாக வேண்டும்.

**திரு… திருமதி… திருமிகு… **

நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தின் இன்னொரு பரிமாணமாக, ஆணுக்குப் பெண் மரியாதை கொடுத்தாக வேண்டும் என்ற ஆணாதிக்க நியதி சேர்ந்துகொண்டது. பெண்ணைப் பொறுத்தவரையில் தாய் என்ற தகுதி வந்தால்தான் மரியாதை. ஆணைவிடவும் பல ஆண்டுகள் வயதில் இளையவளான பெண்ணைத் திருமணம் செய்துவைத்து, கணவன் என்பதற்காக மட்டுமல்லாமல், வயதில் மூத்தவன் என்பதற்காகவும் அவனுக்கு மரியாதையோடு பணிவிடை செய்ய வேண்டிய கட்டாயம் மனைவிக்கு ஏற்படுத்தப்பட்டது. ஆணோ, பெண்ணோ அவர்களது அனுபவ முதிர்ச்சிக்காக, வழிகாட்டும் திறனுக்காக மதிக்கப்படுவது என்றில்லாமல், வயது மூப்புக்காக மரியாதை கொடுப்பது ஒரு மரபாக்கப்பட்டது. வாய்மொழி மரியாதையோடு நிற்காமல், உடல்மொழியாகவும் – காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறுகிற மரியாதைப் பழக்கம் ஒரு கிளையாக உருவானது. அது முற்றிப்போய் காலில் விழுந்து பதவி பெறுகிற அரசியல் சரிவுக் கலாச்சாரமாகவும் மாறியது.

பெயருக்கு முன்னால் மிஸ்டருக்கு மாற்றாக “ஸ்ரீ” என்றும், அதற்கு மாற்றாக “திரு” என்றும் குறிப்பிடுகிற மாற்றங்கள் நிகழ்ந்தன. இதிலேயும் கூட, பெண்ணுக்குத் தனி மரியாதைச் சொல் இல்லாமல் ஸ்ரீமதி என்றும் திருமதி என்றும் குறிப்பிடப்பட்டது. அதிலும், திருமணம் ஆகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆணுக்கு “திரு” என்ற முன்னொட்டு உறுதி. பெண்ணுக்கோ, திருமணமாகியிராவிட்டால் “செல்வி”, ஆகியிருந்தால் “திருமதி” என்ற முன்னொட்டுகள். மேற்குலகில், நெடுங்கால பாலின சமத்துவப் போராட்டத்தின் ஒரு வெற்றியாக, திருமணமாகாத பெண்ணை “மிஸ்” (Miss) என்றும் திருமணமான பெண்ணை மிஸ்டரோடு சேர்த்து “மிஸஸ்” (Mrs) என்றும் குறிப்பிட்டுவந்த பழக்கம் மறுக்கப்பட்டு, திருமணம் ஆகியிருந்தாலும் ஆகாவிட்டாலும் பெண்ணை ‘ம்(மி)ஸ்” (Ms) என்று எழுதுவது நடைமுறைக்கு வந்து பரவிக்கொண்டிருக்கிறது. தமிழில் “செல்வி”, “குமாரி”, “திருமதி” ஆகியவற்றுக்கு மாற்றாக எந்தப் பெண்ணையும் “திருமிகு” என்று குறிப்பிடுவது சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. பாலின சமத்துவம் முழுமையாக நிலைநாட்டப்படும் வரையில் இது தொடரும். ஆயினும், இப்படி திரு, திருமிகு என்ற முன்னொட்டுகளும், அவர்களே, ஜீ என்ற பின்னொட்டுகளும் கூட எதிர்காலத்தில் பின்பற்றப்பட வேண்டுமா என்ற சிந்தனையை ஏற்படுத்துகிறது மாத்தூர் தீர்மானம்.

இப்படியொரு தீர்மானமே அதிரடிப் புரட்சியாகிவிடாதுதான். ஆனால், நாடு முழுக்க, சமுதாயம் முழுக்க, பண்பாட்டுத்தளத்தில் அடிவைத்து அடிவைத்துப் படிப்படியாகப் பரவ வேண்டிய அடிப்படையான நகர்வு இது. வேர் பிடித்து விரியட்டும்.

வயது மூப்பு, ஏற்றுக்கொண்ட பொறுப்பு என்ற அடிப்படையில் கௌரவப்படுத்தி மரியாதை கொடுப்பது நல்ல பண்புதானே என்று கேட்கலாம். ஒருவரது அனுபவ முதிர்ச்சியும் கடமைப் பங்களிப்பும் நிச்சயமாக மதிப்புக்கு உரியவைதான். மதிப்பு வேறு, மரியாதை வேறு. சுயநலமும் அதிகார ஆணவமும் அடிமைப் புத்தியும் ஒட்டுகிறபோது அந்தப் போலித்தனம் செயற்கையான மரியாதைச் சொற்களுக்குள் பதுங்குகிறது. கௌரவ ஒட்டுச் சொற்கள் இல்லாமலே, அனுபவ வழிகாட்டல்களையும் கடமை நேர்மைகளையும் ஏற்கிறபோது அந்த மதிப்பு இயற்கையாக வெளிப்படும்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *