மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

மீண்டும் புதிய சட்டமன்றம்: ஸ்டாலின் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ. கோரிக்கை!

மீண்டும் புதிய சட்டமன்றம்: ஸ்டாலின் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ. கோரிக்கை!

கலைஞர் உருவாக்கிய புதிய சட்டமன்றத்தை மீண்டும் நாம் பயன்படுத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் கோரிக்கை வைத்திருக்கிறார். அதுவும் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அவரது சொந்தத் தொகுதியான மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலுதான் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

நேற்று (செப்டம்பர் 4) சட்டமன்றத்தில் தனது முதல் பேச்சை பதிவு செய்த மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு தனது வாக்காளர்களான முதல்வர் ஸ்டாலின், திமுக மக்களவை குழு துணைத் தலைவரும் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துவிட்டு பேசினார். மேலும் தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த காலஞ்சென்ற மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகனையும் தனது முதல் பேச்சில் நினைவுகூர்ந்து உருக்கமாக நன்றி கூறினார். அவரது உரையில் முன்வைத்த ஒரு கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலு பேசும்போது, “எதிரே உள்ளவர்கள் வருத்தப்படக் கூடாது. மனசாட்சியுடன் சிந்திக்க வேண்டுகிறேன். இந்த மன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க மன்றம். பல சிறப்புமிக்க சட்டங்களை இயற்றியிருக்கிறது. சமுதாயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்படிப்பட்ட சட்டமன்றத்தை இன்று ஒரு சினிமா செட்டிங் போல அமைத்து அதிலே உட்கார்ந்திருக்கிறோம். இதற்கு காரணம் யார்? இங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும்.

மறைந்த முதல்வர் கலைஞர் எதை செய்தாலும் அதில் தொலைநோக்கு சிந்தனை இருக்கும். இன்னும் என் மனக்கண்ணிலே நிழலாக இருக்கிறது. கலைஞர் கம்பீரமாக அமர்ந்து மாலை நேரங்களில் அப்போது துணை முதல்வராக இருந்த முதல்வரும், அவை முன்னவர் அமைச்சர்களும் உடன் இருக்க ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து ரசித்து உருவாக்கிய சட்டமன்றம், அது அவருக்காக உருவாக்கவில்லை. அவர் அனுபவிக்க உருவாக்கவில்லை.

என்னைப் போன்றோர், உங்களைப் போன்றோர் ஏன் தலைமுறை தலைமுறையாக இந்தத் தமிழினத்தை வழிநடத்துவோர் பயன்படுத்துவதற்காகத்தான் உருவாக்கினார்.

முதல்வர் அவர்களே அங்கே மருத்துவமனை இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம். எங்கள் தொகுதியில் நந்தனத்திலும், பட்டினப்பாக்கத்திலும் இடம் இருக்கிறது. அதைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமல்ல மனசாட்சியுள்ள எவரிடம் இருந்தும் எதிர்ப்புகள் வராது. எனவே முதல்வர் அவர்களே... முத்தமிழறிஞர் கலைஞர் நினைவாக அவர் கட்டிய அந்த சட்டமன்றம் இயங்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.

இதற்கும் முன் திமுகவிலேயே சிலர் புதிய சட்டமன்றக் கட்டடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தார்கள். ஆனால் புதிய சட்டமன்றத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தற்போது அங்கே இருக்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு புதிய இடம் வேண்டுமென்றால் அதற்கும் தன் தொகுதியிலேயே இடம் இருக்கிறது என்று இடத்தையும் குறிப்பிட்டு மயிலை வேலு பேசியிருப்பதால் இதன் முக்கியத்துவம் மேலும் கூடுகிறது.

-ஆரா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

ஞாயிறு 5 செப் 2021