மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

மம்தாவுக்காக தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம்!

மம்தாவுக்காக தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம்!

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ள பவானிபூர் தொகுதி உள்ளிட்ட சில தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (செப்டம்பர் 4) அறிவித்திருக்கிறது. அதன்படி செப்டம்பர் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த மார்ச் ஏப்ரலில் நடைபெற்ற மேற்கு வங்காள மாநில சட்டமன்றத் தேர்தலில் திருணமூல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் வெற்றிவாய்ப்பை இழந்தார். தனது சொந்த தொகுதியான பவானிபூர் தொகுதியில் போட்டியிடாமல், தனது கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்ற சுனந்து அதிகாரியின் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார் மம்தா. ஆனால் சர்ச்சைக்குரிய முறையில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இது தொடர்பாக திருணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் வழக்குத் தொடுத்துள்ளது.

எனினும், முதல்வர் பதவியேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜி அக்டோபர் மாதத்துக்குள் சட்டமன்ற உறுப்பினர் ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பின் பவானிபூர் தொகுதியில் வென்ற மூத்த திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஷோவந்தேவ் சட்டோபாத்யாயா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். எனவே மீண்டும் பவானிபூரில் மம்தா போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களில் இருக்கும் காலி சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடத்துவது பற்றி இரு மாநில தலைமைச் செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியது. இதற்குப் பின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “இந்த ஆணையம் இரு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி அவர்களின் கருத்துகளை கேட்டது. அப்போது மேற்கு வங்காள தலைமைச் செயலாளர், ‘நிர்வாக தேவைகள் மற்றும் பொது நலன் கருதி மாநிலத்தில் வெற்றிடத்தைத் தவிர்ப்பதற்காக, முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட விரும்பும் பவானிபூர் இடைத்தேர்தலை நடத்தலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் பவானிபூர் மற்றும் மேற்கு வங்காளத்தில் வேட்பாளர்கள் இறந்ததால் தேர்தல் நடக்காத ஜங்கிபூர், சம்சர்கஞ்ச், ஒடிசாவில் பிப்லி ஆகிய தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெறும்” என்று அறிவித்துள்ளது. அதாவது இடைத்தேர்தல் என்பது மம்தாவின் தொகுதியில் மட்டும்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

மேற்கு வங்காள மாநிலத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உட்பட நாடு முழுதும் 31 சட்டமன்றத் தொகுதிகள், மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டிய நிலை இருந்தபோதும், தேர்தல் ஆணையம் மம்தா பானர்ஜிக்காக அவரது பவானிபூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு தேர்தலை முதலில் அறிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரம், வாக்குப் பதிவு என அனைத்திலும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் முழுதாக கடைபிடிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

-வேந்தன்

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

சனி 4 செப் 2021