மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ஒன்றிய செயலாளர்களை சந்திக்கும் ஸ்டாலின்

ஊரக  உள்ளாட்சித் தேர்தல்: ஒன்றிய செயலாளர்களை சந்திக்கும் ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில், “செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும்” என்று கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது. இதைத் தொடர்ந்து படிப்படியாக ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

வாக்காளர் பட்டியல், வாக்களிக்கும் நேரம் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வந்த மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பர் 6 ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை (செப்டம்பர் 5) ஞாயிற்றுக் கிழமை சென்னையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்களை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த ஒன்பது மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களோடு ஒன்றிய செயலாளர்களையும் சந்தித்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் பற்றி விரிவாக விவாதிக்கிறார் ஸ்டாலின்.

“பல ஊராட்சிகளில் அதிகாரிகள், கிளர்க்குகள் அதிமுகவினரால் நியமிக்கப்பட்டவர்கள். நூறு நாள் வேலை திட்டம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை இவர்கள் தான் கவனித்து வருகிறார்கள். அவர்கள் திமுகவினர் சொல்லும் மக்கள் நல விஷயங்களை செய்ய மறுத்து வருகிறார்கள். அவர்களை மாற்ற வேண்டும் என்று முறையிட்டும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நாளை ஒன்றிய செயலாளர்களை தலைவர் சந்திக்கும்போது இதை தெரிவிக்கப் போகிறோம்” என்கிறார்கள் திமுக நிர்வாகிகள். ஒன்பது மாவட்டங்களில் பெரும்பாலான ஒன்றியங்களில் கிட்டத்தட்ட நேர்காணலைக் கூட முடித்து வேட்பாளர் பட்டியலையும் தயாராக வைத்திருக்கிறது திமுக.

இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த இன்னும் ஆறு மாத காலம் அவகாசம் கேட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து விசாரித்தபோது, “உச்ச நீதிமன்றம் கொடுத்த காலக்கெடு செப்டம்பர் 15 ஆம் தேதியோடு முடிகிறது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தடுப்புப் பணிகள் உள்ளிட்டவற்றால் உள்ளாட்சித் தேர்தல் தயாரிப்புப் பணிகளை உடனடியாக தொடங்கமுடியவில்லை. இப்போது முழுமையாக தயாராகிவிட்டாலும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தி முடிக்க இயலாது. தேர்தலை அக்டோபரில் நடத்துவது என்ற உறுதியோடு இருக்கிறது ஆணையம். எனினும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பின் தேர்தலை நடத்த இருப்பதால் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்பதால் நிர்வாக ரீதியாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனேகமாக சட்டமன்றக் கூட்டத் தொடர் முடியும் நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கை வரலாம். இன்னும் ஆறு மாதங்களுக்குள் மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களையும் நடத்தத் தயாராக உள்ளது தேர்தல் ஆணையம்” என்கிறார்கள் ஆளுங்கட்சிப் புள்ளிகள்.

-ஆரா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

சனி 4 செப் 2021