மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

பொருளாதாரம்- பயங்கரவாதம்: தலிபானுக்குள் இருந்து குதித்த சீன பூனைக்குட்டி!

பொருளாதாரம்- பயங்கரவாதம்: தலிபானுக்குள் இருந்து குதித்த சீன பூனைக்குட்டி!

ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து அமெரிக்கா அகன்ற ஒரு சில நாட்களுக்குள்ளாகவே, சீனப் பூனைக் குட்டி வெளியே வந்திருக்கிறது.

இவ்வளவு சீக்கிரம் தலிபான் போராளிகள் எப்படி ஆப்கனை முழுக்க கைப்பற்றினார்கள் என்று பலரும் அமெரிக்க உளவுத்துறையைக் குற்றம் கூறிக் கொண்டிருந்த நிலையில், தலிபான்கள் சீனாவிடம் சிக்கியிருக்கிறார்கள் என்ற தகவல்களும் வந்துகொண்டிருந்தன.

இந்த நிலையில் அமெரிக்காவின் கடைசி விமானம் காபூலில் இருந்து ஆகஸ்டு 30 இரவு பறந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட அநேக நாடுகளின் தூதரகங்கள் காபூலில் இருந்து காலி செய்யப்பட்ட நிலையில் முதல் நாடாக சீனாவின் தூதரகம் மட்டும் அங்கே இன்னும் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணத்தை செப்டம்பர் 3 ஆம் தேதி தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வெளிப்படுத்திவிட்டார்.

“ சீனா எங்களின் மிக முக்கியமான பங்குதாரர். ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்பவும், அதன் செழிப்பான தாமிர சுரங்கங்களை கையாளவும் சீனா முன் வந்திருக்கிறது. சீனா எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை அளிக்கிறது. ஏனெனில் அது நம் நாட்டில் முதலீடு செய்து மீண்டும் கட்டியெழுப்பத் தயாராக உள்ளது" என இத்தாலிய செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் முஜாஹித் கூறினார்.

" ஆப்கன் நாட்டில் விலைமதிக்க முடியாத தாமிர சுரங்கங்கள் இருக்கின்றன. இவற்றை சீனாவின் உதவியுடன் மீண்டும் செயல்பட வைக்கலாம் மற்றும் நவீனமயமாக்கலாம். கூடுதலாக, உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு சீனா மூலமாக இதை நாங்கள் விற்கலாம்." என்று ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார். சீனாவை ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்க முயற்சிக்கும் சீனாவின் ‘ஒன் பெல்ட், ஒன் ரோடு' முயற்சிக்கு தலிபான்கள் ஆதரவாக இருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

செப்டம்பர் 1 ஆம் தேதி, “ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை சீனா மதிக்கிறது” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் செவ்வாய்க்கிழமை கூறினார்.

ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்கள் தங்கள் புதிய அரசைத் தயாரித்து சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதில் பணியாற்றி வரும் நிலையில் காபூலில் உள்ள தனது தூதரகத்தை திறந்து வைத்து உறவுகளை வலுப்படுத்தவும் சீனா உறுதி அளித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெரிய சீன உள்கட்டமைப்பு மற்றும் மெகா முதலீடுகளுக்கு வழி வகுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர், போரால் நாசம் செய்யப்பட்டுக் கிடக்கும் ஆப்கனின் வளம் வாய்ந்த தாமிரம், லித்தியம் சுரங்கங்களின் மீதுதான் சீனாவின் பார்வை இருக்கிறது. நாசம் செய்யப்பட்ட நாட்டின் பெரிய தாமிரம் மற்றும் லித்தியம் சுரங்கங்கள் உட்பட மற்றவர்கள் இலாபகரமான கனிம திட்டங்களுக்கான சாத்தியம் மிகைப்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர்.

தலிபான்கள் அரசே அமைக்காத நிலையிலும் அவர்களுடன் டிப்ளமேட்டிக் எனப்படும் ராஜதந்திர உறவை முதலில் சீனா ஏற்படுத்திக் கொள்ள என்ன பின்னணி?

சர்வதேச பாதுகாப்பு குறித்த சீன இராணுவ உத்தி வகுப்பு நிபுணரான ஷவ் போ நியூயார்க் டைம்ஸ் இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில், “தாலிபான்களுடன் நெருங்கிய உறவை வளர்ப்பதில் பெய்ஜிங்கிற்கு ஆப்கனின் சுரங்கங்களைத் தாண்டிய சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன” என்பதை விளக்கியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் 3 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள கனிம வைப்புகள் இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் சுரங்க அமைச்சர் சொல்லியிருக்கிறார். உலகம் இப்போது பெட்ரோல் டீசல் பயன்பாட்டில் இருந்து புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பெரிய திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரிகளின் முக்கிய மூலப்பொருள் லித்தியம். அது ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. உலகளவில் லித்தியம்-அயன் பேட்டரி உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்துவதால், ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத லித்தியம் இருப்புக்களை கையாள்வதற்கு தோதான நேரத்தை எதிர்பார்த்திருந்து பல்வேறு காய்களை நகர்த்தி வந்தது சீனா. அந்த காய்கள் இப்போது கனிந்திருக்கின்றன சீனாவுக்கு.

லித்தியம் மட்டுமல்ல... தங்கம், எண்ணெய், பாக்சைட், குரோமியம், தாமிரம், இயற்கை எரிவாயு, யுரேனியம், நிலக்கரி, இரும்பு தாது, ஈயம், துத்தநாகம், ரத்தினக் கற்கள், டால்க், சல்பர், டிராவர்டைன், ஜிப்சம் மற்றும் பளிங்கு போன்ற பல வளங்களைக் கொண்ட மிக அரிய நாடாக திகழ்கிறது ஆப்கன். அதுவும் சீனாவுக்கு முக்கியமான கண்.

இது சீனாவின் பொருளாதாரக் கண். இதைத் தாண்டி இன்னொரு பார்வையும் ஆப்கன் மீது சீனாவுக்கு இருக்கிறது.

சீனாவில் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (ETIM) தீவிரமாக இருக்கிறது. இது கிழக்கு துர்கிஸ்தான் என்ற ஒரு சுயாதீன அரசை நிறுவும் நோக்கத்துடன் மேற்கு சீனாவில் நிறுவப்பட்ட உய்குர் இன இஸ்லாமிய தீவிரவாத அமைப்பாகும். 2002 இல் இருந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் சர்வதேச பயங்கரவாத அமைப்பாக பட்டியலிப்பட்டது இந்த அமைப்பு. சீனா தனக்குள்ள செல்வாக்கால் இதை செய்தது. ஆனால் சீனாவுக்கு உள்ளே இருந்துகொண்டே தொந்தரவு கொடுக்கும் இந்த கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற அமைப்பை ஊக்குவிக்க நினைத்த அமெரிக்கா, 2020 ஆம் ஆண்டு அதை சர்வதே பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் இருந்து நீக்கியது.

இந்த பயங்கரவாத அமைப்பை எதிர்ப்பதாக கூறி சீன அரசாங்கம் அங்கே பல்வேறு மனித உரிமை மீறல்களை நிகழ்த்தி பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்ததாக பிரிட்டன் போன்ற மேற்கு நாடுகள் குற்றம் சாட்டின. ஆனால் சீனா இதை மறுக்கிறது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கூற்றுப்படி, 2000 களில் தலிபான் மற்றும் அல்கொய்தாவின் ஆதரவைப் பெற்று ஆப்கானிஸ்தானிலும் இந்த கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய அமைப்பு வேர்களைக் கொண்டிருந்தது. இன்னும் கூட இந்த சீன இஸ்லாமிய அமைப்புக்கு ஆப்கானில் ரகசிய தளங்கள் இருக்கலாம் என்பதுதான் சீனாவின் சந்தேகம். உய்குர் தீவிரவாத இயக்கத்துக்கு தலிபான்களின் கைக்கு வந்துவிட்ட ஆப்கான் புகலிடமாக மாறிவிடக் கூடுமோ என்ற கவலையும் சீனாவுக்கு இருக்கிறது. இதனால்தான் ஆப்கனை தன் கைக்குள் கொண்டுவந்து, ஒருவேளை ஆப்கானிஸ்தானிலும் கிழக்கு துர்கிஸ்தான் உய்குர் தீவிரவாத இயக்கம் இருந்தால் அதை அழிப்பதுதான் சீனாவின் இன்னொரு அஜெண்டா.

ஒருபக்கம் தன் பொருளாதார வல்லாதிக்கத்துக்கு ஆப்கனின் வளங்களைப் பயன்படுத்த வேண்டும், இன்னொரு பக்கம் சீனாவுக்குள் இருக்கும் தீவிரவாத முஸ்லிம் அமைப்பு ஆப்கனை தளமாக பயன்படுத்திவிடக் கூடாது என்ற இரண்டு காரணங்களால்தான் தலிபான் கூட உறவு கொள்ள துணிந்துவிட்டது சீனா.

அமெரிக்கா கிட்டத்தட்ட ஆப்கனில் இருந்து வெளியேறுவதையும், தலிபான்கள் அதிகாரத்தை நோக்கி முன்னேறுவதையும் உணர்ந்த சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, கடந்த ஜூலையில் தலிபானின் துணைத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதரை சந்தித்தார். அப்போது அவர், “ETIM அமைப்பு சீனாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது. தலிபான்கள் ETIM உட்பட அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் உறுதியாக எதிர்த்து அவற்றிற்கும் தமக்குமான இடைவெளியை ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறோம் " என்று கூறினார் அவர்.

ஆக ஆப்கன் இப்போது அமெரிக்க கைப்பொருள் என்கிற நிலையில் இருந்து சீன கைப்பொருள் ஆகிவிட்டது. இது இந்தியாவுக்கு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ?

-ஆரா

இனி யார் கைப்பொருள் ஆப்கன்?

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 4 செப் 2021