நாகூருக்கு அருளிய பிள்ளையார்! – சம்பவக் கதை – தொடர்ச்சி…

politics

ஸ்ரீராம் சர்மா

திருவல்லிக்கேணிப் பிள்ளையார் ஊர்வலம் மதப் பிரச்சினையாக மாறத் தொடங்க – ஐஸ்அவுஸ் முனைக்கு போலீஸ் ஃபோர்ஸ் வந்து சேர்வதற்குள் ஏழெட்டு அப்பாவி உயிர்கள் பலியாகிப் போனது. நூற்றுக்கணக்கானவர்கள் ரத்த காயத்தோடு ஓடித் தப்பினார்கள். திருவல்லிக்கேணி ரணகளப்பட்டது.

கண்ணீர்ப் புகை வீச்சுக்குப் பிறகு கலவரம் கட்டுக்குள் வந்துவிட்டாலும் அதற்கிடையில் அந்த மாபாதகம் நடந்தேவிட்டது!

பிள்ளையார் சிலைகள் ஆங்காங்கே மூளியாக சரிந்து கிடப்பதைக் கண்டு கொதித்த வடசென்னை முரட்டு இளைஞர் பட்டாளம் ஒன்று வெறியோடு அலைந்துகொண்டிருந்தது. அந்த கும்பலின் கண்களில் அழுக்கேறி நெளிந்து தொங்கிக்கொண்டிருந்த ‘நாகூர் பாய் கடை’ போர்டு பட்டுவிட்டது.

“தூக்குங்கடா அதை…”

அடுத்த கணம் அந்தக் கும்பல் மொத்தக் கடையையும் பிய்த்து எறிந்து அசுர ஆட்டம் ஆடியது. அரிசி, பருப்பு, சிறுதானிய மூட்டைகள், எண்ணெய் டின்கள், பெருங்காய குப்பிகள், கல்லு உப்பு இருந்த பீங்கான் பீப்பாய், ஊதுவத்திக் கட்டுகள், கவுந்தப்பாடி வெல்ல மூட்டைகள், டால்டா டப்பாக்கள், புளி மூட்டைகள்… மொத்தத்தையும் தூக்கி தெருவில் வீசிக் கொண்டிருந்தது அந்த நாசகாரக் கூட்டம்.

கடைக்கு எதிரே ‘ஹேப்பி கார்னர்’ பில்டிங் மாடியில் நின்றபடி, தன் நாற்பது வருட உழைப்பு சம்ஹாரம் செய்யப்படுவதை இறுகிய முகத்தோடு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் நாகூர் பாய்.

மாரிமுத்து நாடாரும், கோபால் நாயரும் அவர் தோளைப் பற்றி தங்கள் பக்கம் இழுத்தபடி, “வுடு, பாய்… சரி பண்ணிக்கலாம் பாய்..” என ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க…

”அதுக்கென்ன….பாத்துக்கலாம்…” என தைரியமாகச் சொல்லிக்கொண்டே இருந்த நாகூர் பாய்க்கு திடீரென பொல பொலவென வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. மார்பை அழுந்தப் பிடித்தவர் அப்படியே சரிந்தார்… தாங்கிப் பிடித்த கோபால் நாயர் பெருங்குரலெடுத்தழைத்தார்… “படைச்சோனே…”

சமையற்கார நடராஜ ஐயர் நடுச்சாலையில் உருண்டு புரண்டு ரோந்து வந்த போலீஸ் ஜீப்பை மடக்க, அதில் பாயை ஏற்றி ஒருவழியாக பீச் ரோடு சுற்றிப் போய் ‘ஜிஎச்’சில் அட்மிட் செய்தார்கள். மூன்று நாட்கள் அபாயக் கட்டத்தில் இருந்தார் நாகூர் பாய்.

ஒட்டுமொத்த திருவல்லிக்கேணியும் முறை வைத்துக் கொண்டு போய் அவரை பார்த்து வந்தது. நான்காம் நாள் ஜெனரல் வார்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள்.

கிருஷ்ணாம்பேட்டை ஜனங்கள் ஓடோடிப் போய்… “வுடு பாய்… நாங்கெல்லாம் இருக்கோம் பாய் உனுக்கு…” என அவரது கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு விம்மியது.

பிறகென்ன? மருந்தாவது, மாத்திரையாவது. ஒரே வாரத்தில் நிமிர்ந்தார் நாகூர் பாய். ரிக்‌ஷாவில் வந்து தளர்ந்து இறங்கிய பாய், சிதிலமாகிக் கிடந்த தன் கடை வாசலில் ஒரு பாயை விரித்துப் போட்டு அமைதியாய் அமர்ந்து கொண்டார்.

காண வந்த ஏழை ஜனங்களிடம் சிரித்துக்கொண்டே சொன்னார்…

“பெருமாளே அம்படி வாங்கி நின்ன மண்ணில்லையா? இன்னும் இந்த பாய மௌத் ஆக்காம வெச்சிருக்காங்களே… நன்றி சொல்லிக்கலாம். கேட்டீயளா?”

அடுத்த சில நாட்களில் பல விஷயங்கள் சத்தமில்லாமல் நடந்தேறின.

“புடி பாய், பெரிசு குடுத்தம்ச்சுது…” டர்க்கி டவலில் சுருட்டி எடுத்து வரப்பட்ட பணக் கட்டுக்களை ஒப்படைத்து விட்டு ஆட்டோவில் பறந்தார்கள் அயோத்தி குப்பத்து ஆட்கள்.

கான்ட்ராக்டர் சண்முகத்தின் ஆட்கள் வந்து இறங்கி, இரண்டே நாளில் பாய் கடையைப் புத்தம் புதிதாய் செப்பனிட்டுக் கொடுத்தார்கள். பந்தல்கார சேகர் தன் சார்பாக பளபளக்கும் ஷட்டரை ஃபிட் பண்ணிக் கொடுத்தார். லாரியில் புது சரக்குகள் வந்து வந்து இறங்கின.

ஐஓபி பேங்க் கேஷியர் நரசிம்மன் அதிசயமாக அவரே ஷ்யூரிட்டி போட்டு லோனை க்ளியர் செய்து கொடுத்தார். ஆறு மாதங்களுக்கு… ‘கணக்கு நோட்டு’ இல்லாமல் ரொக்கத்துக்குப் பொருள் வாங்க தங்களுக்குள் பேசி முடிவெடுத்தார்கள் ஏரியா மக்கள்.

திருவல்லிக்கேணி சமையற்காரர்கள் அந்த சீசன் முழுவதும் தங்களது மளிகை லிஸ்டை நாகூர் பாய் கடைக்கே திருப்பி விட்டார்கள். சுற்றிவர இருக்கும் மொத்த கோயில் விசேஷங்களுக்கும் ‘நாகூர் பாய்’ கடையிலேயே கொள்முதல் செய்யப்பட்டது. சடசடவென ஒரே வருடத்தில் நாகூர் பாய் கடை முன்னிலும் பொலிவாகிக் களை கட்டி நின்றது.

திருவல்லிக்கேணி ஜனங்கள் தன் மீது வைத்துள்ள பாசத்தை இம்மி இம்மியாக அனுபவித்த நாகூர்பாய் பளபளவெனக் கலர் கூடிப் போனார். இரண்டு உறவுக்காரப் பசங்களை ஊரிலிருந்து தருவித்திருந்தார். முன்பைவிட அதிகமாக இரவு 10 மணிவரை பிஸியாகவே இருந்தது கடை.

உதவி செய்தவர்களைத் தேடித் தேடிச் சென்றார்.

“பாத்தீங்களா, மசூதியில முட்டுன எனக்கு, பிள்ளையார் குடுத்த வாழ்க்கையை…” – கலகலவென சகோதரம் பாராட்டிக் கடன் அடைத்து வந்தார் !

அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வந்தது.

ஐஸ்அவுஸ் கார்னரில் போலீஸ் குவிக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் அசாதாரணமாக இறுக்கப்பட்டிருந்தது. ஸ்பீக்கர் கட்டப்பட்ட ஆட்டோக்கள் பிள்ளையார் பாடலோடு குட்டிச் சந்துகளில் புகுந்து விரைந்தபடியே இருந்தன.

விடிந்தால் பிள்ளையார் ஊர்வலம். வெளியே காட்டிக் கொள்ளாத பதற்றம் அன்றைய திருவல்லிக்கேணி முழுவதும் படர்ந்து இருந்தது.

வழக்கம் போல மதிய தொழுகைக்குச் சென்றிருந்தார் நாகூர்பாய்.

அவரது கடை வாசலுக்குச் சற்றுத் தள்ளி, நீல நிற தார்ப்பாயால் மூடப்பட்ட மீன் பாடி வண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அருகே, முரட்டுத் தாடியோடு வியர்க்க வியர்க்க நின்றிருந்தான் தண்டபாணி. அவனிடம் ஒரு அவசரம் தெரிந்தது. ஒரு முடிவோடு வந்தவன் போல பாயின் வரவுக்காக நகம் கடித்தபடிக் காத்திருந்தான்.

அவன் நிற்பதை தூரத்திலேயே கண்டுவிட்ட நாகூர்பாய் வேக வேகமாக சைக்கிள் மிதித்து வந்திறங்கினார்.

“ஏ… தண்டபாணி…நல்லாயிருக்கியாப்பா?”

“…………….”

“என்னாப்பா தாடியெல்லாம் பெரிசா வளர்த்திருக்கே…”

“…………..”

“சைன் போர்டுன்னாலே தண்டபாணின்னு உன் பேரத்தான் சொல்லுதாங்க… அப்பாவுக்கு மேல தொழில்ல பேரெடுத்துடுவ போலருக்கேப்பா..”

தண்டபாணி நற… நறவென தாடியை சொறிந்துகொண்டான்.

“புள்ளைய பத்தி நாலு பேர் நல்லா சொல்லக் கேட்டா மனசு நெறையுதுல்லா. சரி, சொல்லு…என்னா விஷயம்?”

அருகில் வந்த பாயை நெஞ்சில் கை வைத்து பின்னால் தள்ளிய தண்டபாணி… தடாலென்று மீன் பாடி வண்டி மேல் தாவி ஏறி, நீலத் தார்ப்பாயை சரேலென உருவினான். உள்ளே…

’20’க்கு ‘6’ சைஸில், நல்ல உறுதியான மரத்தில் காஸ்ட்லி தகரம் அடிக்கப்பட்ட போர்டு ஒன்று, பெரிய பெரிய எழுத்துக்களோடு…

“நாகூர் பாய்க் கடை” என மின்னியது.

“பாய், உன் கடைக்கு ஒரு போர்டு செஞ்சி எடுத்தாந்திருக்கேன். ஏணி குடு பாய். மாட்டிவுட்டுட்டு கிளம்பறேன்…”

“மாஷா அல்லாஹ்… ஆமாய்யா, கடையை இவ்வளவு ரெடி பண்ணியும், புது போர்டு மாட்டணும்னு யாருக்கும் தோணாமப் போச்சப்பா…” நெற்றியில் தட்டியபடி சிரித்துக் கொண்டார்.

உச்சி வெயிலுக்கு போர்டை சாய்த்து மினுக்கிக் காட்டிக் கேட்டான்… “எப்டியிருக்கு பாய்?”

பாய்க்கு மளுக்கென கண்ணீர் வந்துவிட்டது. உதடுகளை அழுந்தக் கடித்தவர் சட்டென திரும்பிக் குரல் கொடுத்தார்… “யே… அஷ்ரஃபு, அந்த ஏணிய வெளியே எடுத்து போடுப்பா…”

சரசரவென மேலேறியது போர்டு! கண்ணைப் பறிப்பது போல வண்ணம் தீட்டியிருந்தான் தண்டபாணி. பாய்க்கு வாயெல்லாம் பல்லாகிப் போனது. தண்டபாணியைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.

“சரி, பாய்…நான் கிளம்புறேன்…”

“அட, இருப்பா…” தண்டபாணியைத் தோள் அணைத்துக்கொண்டு கடைக்கு வந்த நாகூர் பாய் தாவி ஏறி கல்லாவில் அமர்ந்து கொண்டு நன்றியோடு அவனைப் பார்த்தார்…

“அப்டியே உங்கப்பா குணம்பா உனுக்கு. சொல்லு தண்டபாணி, எவ்ளோ செலவாச்சு, நான் என்னா தரணும்?”

“அட, ஒண்ணும் வேணாம் வுடு பாய்… பிள்ளையார் ஊர்வல வேலை பாக்கி கெடக்கு. உனுக்காகத்தான் இம்மா நேரம் வெயிட் பண்ணேன். கிளம்புறேன் பாய்…”

“யே… இதப் பாரப்பா, நீ வளர்ற புள்ள. கைக்காசப் போட்டா பண்ணுவ… அதெல்லாம் தப்பு கேட்டியா…?”

“அட, கம்முன்னு இரு பாய். அதெல்லாம் ஒண்ணும் வேணாம்…”

தண்டபாணி ஓடிப் போய் மீன் பாடி வண்டியில் தாவி ஏறி பெடலை மிதிக்க ஆரம்பிக்க…

நாகூர் பாய் அடித்தொண்டையில் இறைந்தார்.

“ஏ…தண்டபாணி, இங்க பாரு. நீ மட்டும் இப்பம் ஏதும் வாங்காம போனேன்னு வையி… நான் போர்டை அவுத்துருவேன் கேட்டுக்க…”

குறுக்குப் பிரேக்கை சடாரென்று இழுத்து நிறுத்திய தண்டபாணி சிரித்தபடியே இறங்கி வந்தான்.

“சரி, எதுனா குடு பாய்…”

“நீ என்னா கேட்டாலும் தருவேன் இந்த பாய் … சும்மா கேளுப்பா..”

அரிசி மூட்டையில் வாகாக சாய்ந்து கொண்ட தண்டபாணி உரிமையோடு கை நீட்டிக் கேட்டான்…

**“கொஞ்சம் வெல்லம் தான் குடு பாய்…”**

**[முந்தைய பகுதி – நாகூருக்கு அருளிய பிள்ளையார்! – சம்பவக் கதை! ](https://www.minnambalam.com/politics/2021/09/03/7/Ganapthys-blessingd-to-Nagoor)**

**கட்டுரையாளர் குறிப்பு**

**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *