மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

அயோத்திதாசர் மணிமண்டபம்: இடம் மாற்ற திருமாவளவன் கோரிக்கை!

அயோத்திதாசர் மணிமண்டபம்: இடம் மாற்ற திருமாவளவன் கோரிக்கை!

தமிழக சட்டமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 2) வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேருக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 3) ஆதிதிராவிட பேராளுமையான அயோத்தி தாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

110 விதியின் கீழ் இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரையில் தமிழன், திராவிடம் என்ற இரு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது. இந்த இரு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொல்லாக மாற்றியவர். அறிவாயுதம் ஏந்தியவர் அயோத்தி தாச பண்டிதர்.

இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு சாதியும் மதமுமே தடை என்று சொன்ன அயோத்தி தாசர், ‘மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவர் எவரோ அவரே மனிதர்’ என்று முழங்கினார். அயோத்தி தாசர் அவர்களுடைய 175 ஆவது ஆண்டுவிழாவின் நினைவாகவும், அவரது அறிவை வணங்கும் விதமாகவும் வட சென்னை பகுதியில் மணி மண்டபம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

இது தொடர்பாக, ”விசிக கோரிக்கையை ஏற்று பண்டிதர் அயோத்திதாசர் மணிமண்டபம் நிறுவப்படுமென அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மணிமண்டபம் தொடர்பாக முதல்வருக்கு ஒரு முக்கியமான கோரிக்கையையும் வைத்துள்ளார்.

இன்று (செப்டம்பர் 3) திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பண்டிதர் ஆயிரம் விளக்குப் பகுதி மக்கீஸ் கார்டனில் பிறந்து வளர்ந்தவர். உதகையில் கல்வி பயின்றவர். பார்ப்பனிய எதிர்ப்பை முதன்முதலில் தமழகத்தில் முன்னெடுத்தவர். வேதங்கள், புராணங்கள், மூடநம்பிக்கைகளை மூர்க்கமாக எதிர்த்தவர். திராவிட அரசியலை ஆரியத்துக்கு எதிராக உயர்த்திப் பிடித்தவர்.

பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தே தமிழ் பௌத்தத்தை மீட்டெடுத்தவர். இந்துப் பண்டிகைகளில் பெரும்பாலனவை பௌத்த பண்பாட்டுத் திரிபுகளே என்பதை அம்பலப்படுத்தியவர். தமிழகத்தில் சமூகநீதி கோட்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவர். ஆதிக்குடியினருக்குப் பஞ்சமி நிலங்கள் மற்றும் கல்வி பெறவும் வழிவகுத்தவர்.

ஆதிக்குடியினர் அனைவரையும் சாதியற்ற அடையாளமாக ஆதிதிராவிடர் என அழைத்திட ஆங்கிலேயராட்சியில் அரசாணை பிறப்பிக்கச் செய்தவர். சாதி ஒழிப்பை முன்னிறுத்தி பௌத்தம் தழுவியவர். மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதியைக் குறிப்பிடாமல் இந்து என பதியாமல் தமிழர் என பதிவுசெய்ய அறைகூவல் விடுத்தவர்.

திராவிட அரசியலுக்கும் சமூகநீதிக் கருத்தியலுக்கும் பார்ப்பனிய எதிர்ப்புக்கும் சாதிஒழிப்புக்கும் தமிழ் பௌத்த மீட்சிக்கும் வித்திட்ட பண்டிதர் காத்தவராயன் என்னும் அயோத்திதாசருக்கு அம்பேத்கர் மணிமண்டபம் அருகில் அல்லது ரெட்டமலையார் மணிமண்டபம் அருகில் மணிமண்டபம் அமைத்திட வேண்டுகிறோம்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அம்பேத்கர் மணிமண்டபம் சென்னை அடையாறில் அமைந்துள்ளது. இரட்டை மலை சீனிவாசன் மணிமண்டபம் கிண்டியில் உள்ள காந்தியடிகள் நினைவக வளாகத்தில் உள்ளது. வட சென்னையில் அயோத்தி தாசருக்கு மணிமண்டபம் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில், மேற்கண்ட இரு இடங்களில் ஒன்றில் அவருக்கு மணிமண்டபம் அமையுமாறு திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

-வேந்தன்

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

வெள்ளி 3 செப் 2021