மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

73% அதிகம் சொத்து சேர்ப்பு: ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கடி!

73%  அதிகம் சொத்து சேர்ப்பு: ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கடி!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73% சொத்து சேர்த்திருப்பதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திரபாலாஜி 2011-13 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கில் அப்போதைய அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை, “ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 10% க்குள்தான் சொத்து சேர்த்துள்ளார். எனவே இந்த வழக்கை கைவிடலாம்” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோரால் அளிக்கப்பட்டது. ராஜேந்திரபாலாஜி மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்குப் பதியலாம் என்று நீதிபதி சத்யநாராயணனும், வழக்குப் பதிவு செய்வதால் பயன் இல்லை என்று நீதிபதி ஹேமலதாவும் வேறு வேறு தீர்ப்பளித்தனர். எனவே இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை ராஜேந்திரபாலாஜி நாடியிருக்கிறார்.

இதற்கிடையே மூன்றாவது நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.அப்போது ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான், “மூன்றாவது நீதிபதி விசாரிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வேறு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இரு நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு அளித்தால்,  அந்த வழக்கைஇரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும். மூன்றாவது நீதிபதி விசாரிக்க முடியாது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 10  சதவீதத்துக்கும் குறைவாக தான் சொத்து சோ்த்து இருப்பதால்,  அந்த வழக்கை கைவிட காவல்துறை  முடிவெடுத்தது” என்று வாதிட்டார்.

இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை இன்று (செப்டம்பர் 3) சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தது. தமிழக அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “புகார் குறித்த ஆரம்ப கட்ட விசாரணையில் ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 10%க்குள் சேர்த்ததாகவும், அதனால் விசாரணையை கைவிடலாம் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை கூறியிருந்தது. ஆனால் அடுத்தடுத்த விசாரணையில் ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73% சொத்து சேர்த்திருக்கிறார் என்று தெரியவந்திருகிறது. எனவே ஆரம்பகட்ட விசாரணையை மட்டும் வைத்து முடிவெடுத்துவிட முடியாது. இதில் மேல் விசாரணை தொடங்கியிருக்கிறது” என்று வாதிட்டார்.

கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி கொடநாடு கொலை வழக்கில், “இறுதி அறிக்கை தாக்கல் செய்த பின்னரும் மேல் விசாரணை நடத்தலாம்” என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக் காட்டிய அசன் முகமது ஜின்னா, “முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்குத் தொடர்ந்து விசாரணை நடத்தலாம்” என்று வாதிட்டார்.

இதில் பதிலளிக்க ராஜேந்திரபாலாஜி தரப்பு அவகாசம் கேட்டதால் செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-வேந்தன்

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

வெள்ளி 3 செப் 2021