மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

ஆடி விபத்து: கொண்டாட்டம் முதல் கொடூரம் வரை - இரவில் நடந்தது என்ன?

ஆடி விபத்து: கொண்டாட்டம் முதல் கொடூரம் வரை - இரவில் நடந்தது என்ன?

ஆகஸ்டு 30 பின்னிரவு, 31 ஆம் தேதி முன்னிரவு 1.30 மணிக்கு பெங்களூருவில் கோர விபத்தில் சிக்கிய ஆடி காரில் இருந்த ஏழு பேர் இறந்தது சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏவுமான பிரகாஷ், மனைவி சிவம்மா. இவர்களுக்கு ஒரு மகன் -ஒரு மகள். மகளுக்குத் திருமணமாகி பெங்களூரில் வசித்து வருகிறார். மகன் கருணாசாகர் பி இ, எம்.எஸ் லண்டனில் படித்துவிட்டு, பெங்களூரு பேளகொண்டபள்ளியில் சொந்த இடத்தில் அட்டைப் பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறார். பெங்களூருவில் கோரமங்களா பகுதியிலுள்ள zolo stays pg என்ற புகழ்பெற்ற பேயிங் கெஸ்ட் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் தங்கியிருக்கிறார், அவருக்குத் திருமணம் செய்யப் பெண் தேடிவந்த நிலையில் இரண்டு மாதம் முன்புதான் சிவம்மா புற்றுநோய் நோயால் இறந்துவிட்டார். மனைவி இறந்த துயரம் மறைவதற்குள் மகன் கருணாசாகர் இறந்த துயரம்தான் தாங்கமுடியாமல் துடிதுடித்துக் கொண்டிருக்கிறார் எம்.எல்.ஏ பிரகாஷ்.

விபத்து எப்படி நடந்தது, காரில் வந்தவர்கள் யார், எப்படி ஒன்று கூடினார்கள் என்ற விசாரணையில் இறங்கினோம்.

ஆடி க்யூ 3 டாப் மாடல் கார், ஆறு ஏர் பேக், ஐந்து சீட் உள்ளது, 1660 கிலோ எடையுள்ளது 2015 நவம்பர் 23ஆம் தேதி சஞ்சீவினி புளு மெட்டல் நிறுவனம் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. , பதிவு எண் கே.ஏ.03 எம்.ஓய் 6666 என்ற எண் கொண்ட இந்த ஆடி கார் வாங்கி கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிறது.

பிரகாஷ் ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னையிலிருந்து ஓசூர் சென்றவர் 30ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்துக்காக சென்னைக்குப் புறப்பட்டார். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி அவரது மகளுக்கு வளைகாப்பு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். கொரோனா பதற்றம் காரணமாக மிக நெருக்கமான உறவினர்கள் சிற்சிலருக்கு மட்டுமே அழைத்திருந்தார்கள். அந்த விழாவுக்கு தேவையான பொருட்களை அக்காவுக்கு வாங்கிக் கொடுக்குமாறு தனது டெபிட் கார்டை மகன் கருணாசாகரிடம் கொடுத்துவிட்டு சென்னை புறப்பட்டார் எம்.எல்.ஏ. பிரகாஷ்.

அதன்படியே 30 ஆம் தேதி ஓசூரிலிருந்து பெங்களூர் புறப்பட்ட கருணாசாகர் பெங்களூருவில் தனது அக்காவை அழைத்துக் கொண்டு, 45 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பர்ச்சஸ் செய்துட்டு அக்காவை வீட்டில் கொண்டுவிட்டிருக்கிறார். அன்று இரவு 9.35 மணிக்கு வெளியில் புறப்படுகிறார். ’டிபன் சாப்பிட்டுட்டு போடா’ என்கிறார் அக்கா. ஆனால் கருணாசாகரோ, ‘வேண்டாங்க்கா... ஃப்ரண்ட்ஸோட வெளியில சாப்பிட்டுக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு தனது ஆடி காரில் புறப்படுகிறார். அப்போது செல்போனில் வந்த அப்பாவிடமும், ‘பர்ச்சேஸ் முடித்துவிட்டு அக்காவை வீட்டில் விட்டுவிட்டதை சொல்கிறார் கருணாசாகர்.

தூரத்து உறவுப் பெண்ணான பிந்துவும் கருணாசாகரும் நண்பர்கள். பெங்களூருவைச் சேர்ந்த பிந்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். பிந்துவின் பெற்றோர்கள் பெங்களூருவில்தான் வசித்து வருகிறார்கள். ஆகஸ்ட் 28,29,30 மூன்று நாள் விடுமுறை என்பதால், பெங்களூர் முருகேசபாளையத்திலுள்ள தனது வீட்டுக்கு வந்திருக்கிறார் பிந்து கருணாசகருக்கு தான் பெங்களூரு வந்திருக்கும் தகவலை ஏற்கனவே தெரிவித்திருந்தார் பிந்து. .

குடும்பத்துடன் இருந்துவிட்டு, 30ஆம் தேதி சென்னை ஆபீஸுக்கு புறப்படுகிறேன் என்று பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு சினேகிதி ஹசிதாவின் அப்பார்ட்மென்ட்டுக்கு சென்றுவிடுகிறார் பிந்து. ஹசீதாவும் கருணாசகர் தங்கியிருக்கும் அதே பேயிங் கெஸ்ட் குடியிருப்பில்தான் தங்கியிருக்கிறார். ஆடம்பரமான பிளாட்டுகள் கொண்ட அழகான குடியிருப்பு அது.

ஹசிதா மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் மட்டுமல்ல பிந்துவின் மேலும் பல நண்பர்களும் அதே குடியிருப்பில்தான் பிஜி (பேயிங் கெஸ்ட்) யாக தங்கியிருக்கிறார்கள். பல் டாக்டர் தனுஷா, , ஹுப்ளி பகுதியைச் சேர்ந்த பிசினஸ் அண்ட டெவலப்மெண்ட் ஆபீசராக இருக்கும் ரோகித், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆடிட்டர் உத்சவ், சீனியர் சேல்ஸ் அசோசியேட் அக்ஷய் கோவில் ஆகிய ஐந்து பேரும் பிந்துவுடைய நண்பர்கள்.

30 ஆம் தேதி இரவு 8.20 மணிக்கு பிந்து, ஹசிதா ஆகியோர் ஒரு ஒயின்ஷாப்புக்கு சென்று மது வாங்கிக் கொண்டு புறப்படுகிறார்கள். அதன் பிறகு டாக்டர் தனுஷா, ரோகித், உத்சவ், அக்சய் ஆகியோர் சேர்ந்துகொள்ள அனைவரும் பஃப் ஒன்றுக்கு செல்கிறார்கள். ஆனால் பராமரிப்பு பணி காரணமாக அந்த பஃப் இயங்கவில்லை. அதனால் வெளியில் வந்து ஒரு கெஸ்ட் ஹவுஸுக்கு செல்கிறார்கள். பிந்து நண்பர்களுடன் காத்திருந்த ஹெஸ்ட் ஹவுஸ்க்கு இரவு 10 மணிக்குச் செல்கிறார் கருணாசாகர். நண்பர்கள் அனைவரும் மது அருந்தி உற்சாகமாக பேசிக் கொண்டிருக்க அங்கேயே டிபனும் சாப்பிடுகிறார்கள். இரவு 1.30 மணி ஆகிவிட்டது.

பிறகு கருணாசாகர் தனது ஆடி காரில் அனைவரையும் டிராப் செய்ய திட்டமிட்டு, தனது ஆடி காரை ஸ்டார்ட் செய்கிறார். டிரைவர் சீட்டில் கருணாசகர் இருக்க, முன்பக்கமுள்ள ஒரு சீட்டில் பிந்துவும் ஹசிதாவும் உட்கார்ந்துகொள்கிறார்கள். பின் சீட்டில் தனுஷா, உத்சவ், ரோகித், அக்ஷய் கோயில் ஆகிய நான்குபேர் உட்காந்துக்கொள்கிறார்கள்.

பெங்களூருவின் இரவுக் காற்று, நண்பர்கள் தந்த உற்சாகம், ஆடம்பரமான ஆடி எல்லாம் சேர்ந்து கருணாசாகரின் டிரைவிங் வேகம் எகிறுகிறது. கார் எடுத்த எடுப்பிலேயே பத்து வினாடிக்குள் 100 கிலோ மீட்டர் வேகத்தைத் தாண்டிப்போகிறது. டிரைவிங் செய்யும் கருணாசகர் உள்ளிட்ட யாரும் சீட் பெல்ட் போடவில்லை.

ஆடுகோடி போக்குவரத்து சரகத்திற்கு உட்பட்ட கோரமங்கலா பகுதியில் மங்களா திருமணம் மண்டபம் அருகில் ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவில் 1.41 மணிக்கு மிக வேகமாகச் சென்ற அந்த ஆடி கார், ஒரு நொடியில் தடுமாறி நடை பாதையில் இடித்த வேகத்தில் திசை மாறி அருகில் உள்ள கட்டிடத்தின் மீது பலமாக மோதியது. அங்கேயே ஏழுபேரும் துடிதுடித்து உயிரை விட்டனர்.

ஆடுகோடி போக்குவரத்து காவல்துறையினர், ஆர் டி ஒ மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸார் விபத்துக்குள்ளான காரணங்களை ஆராய்ந்து வருகிறார்கள். பெங்களூரு போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“ஆடி கார் மிக மிக சேப்டியான கார், சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் அவர்கள் வந்திருக்கலாம். காரில் இருந்தவர்களிடம் பேசிக்கொண்டு வரும்போது கவனச் சிதறல் ஏற்பட்டதால் கன்ட்ரோல் பண்ணமுடியாமல் போயிருக்கலாம். 100 கிலோ மீட்டர் வேகத்தில் போகும்போது ஒரு வினாடி பின் சீட்டில் இருப்பவர்களைத் திரும்பி பார்க்கும்போது ஸ்டேரிங் இலேசாக அசைந்தால் போதும் 10 அடி போய்விடும். அந்த வேகத்தில் ஸ்டேரிங் வேறு திசையில் மாற்றும்போது நிச்சயம் விபத்து நடக்கும்.

கார் ஓட்டுநர் கால் பகுதியில் பார்த்தோம். அதில் அவரது வலது கால் பிரேக் பெடலை மிதித்தபடி இருக்கிறது. அதன் கீழ் வாட்டர் பாட்டில் நசுங்கிப்போய் இருக்கிறது. அதிவேகத்தில் கவன சிதறலால் கார் தடுமாறியபோது பிரேக் அடிக்க முயற்சித்திருக்கலாம். போதையிலிருந்தவர்கள் வாட்டர் பாட்டில்களை சரியான இடத்தில் வைக்காமல் அது சீட்டின் கீழே விழுந்திருக்கும். பிரேக் அடிக்கும்போது பிரேக் பெடல் கீழே வாட்டர் பாட்டில் சிக்கித் தடையேற்பட்டு விபத்து நடந்திருக்கலாம்” என்கிறார்கள்.

அன்று இரவு அந்த ஆடி கார் பெங்களூருவில் பயணித்த தடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.

“அதில் நான்கு முக்கியமான பதிவுகள் கிடைத்துள்ளது. விபத்து நடந்த இடம், ஒரு பப், ஒரு ஹெஸ்ட் ஹவுஸ் உள்ளிட்ட இடங்கள் பதிவாகியுள்ளன. இரு பெண்கள் மது வாங்கிச் சென்ற காட்சியும் பதிவாகியுள்ளது. நாங்கள் வேறு ஏதாவது சதியாக இருக்குமா என்ற கோணத்தில் ஆராய்ந்தோம் ஆனால் அது விபத்துதான் என தெரிய வந்துள்ளது” என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

ஆடி கார் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சீனியர் மெக்கானிக் ஒருவரிடம் இந்த விபத்து குறித்துப் பேசினோம்.

“ பாதுகாப்பில் நெம்பர் 1 கார் வோல்க்ஸ் வேகன்தான். வோல்க்ஸ் வேகன், ஸ்கோடா, ஆடி மூன்றும் ஒரே நிறுவனம்தான். இது ஜெர்மனை தலைமையிடமாகச் செயல்பட்டுவருகிறது. ஆடி காரைப் பொறுத்தவரையில் அதிக பாதுகாப்பு வசதிகளுடன் உள்ளது, சீட் பெல்ட் போடவில்லை என்றால் ஏர் பேக் ஓப்பன் ஆகாது என்பது தவறான கருத்து, சீட் பெல்ட் போட்டாலும் போடாவிட்டாலும் ஏதாவது ஒரு இடத்தில் மோதியதும் ஏர் பேக் ஓப்பனாகிவிடும். விபத்துக்கு ஒரே காரணம் காரை சரியாக மெயின்டனன்ஸ் செய்திருக்கமாட்டார்கள் அல்லது உரிய இடத்தில் சர்வீஸ் செய்யாமல் வெளியே சர்வீஸ் செய்திருக்கலாம். மேலும் ஏர்பேக் சென்சார் பிராப்ளம் ஏற்பட்டிருந்தால் டிஸ்பிளேவில் காண்பித்திருக்கும். இவர்கள் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்திருப்பார்கள். பெங்களூரில் ஏற்பட்டுள்ள விபத்துக்குள்ளான காரை எங்கள் நிறுவனத்தில் இஞ்சினியர்கள் ஆய்வுசெய்திருப்பார்கள். அதன் பிறகுதான் முழு விவரம் தெரியும்” என்றார்.

அக்காவின் வளைகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துவிட்டு புறப்பட்ட தம்பி கருணாசகர் நண்பர்களுடனான விருந்துக்குப் பிறகு அதே கெஸ்ட் ஹவுஸில் கொஞ்ச நேரம் தூங்கியிருந்தால் அவருடன் சேர்ந்து ஏழு பேரும் இன்று தத்தமது வேலைகளைப் பார்த்துக் கொண்டு உயிரோடு இருந்திருப்பார்கள்.

அதற்கு மேலே... ‘டிபன் சாப்பிட்டுட்டு போடா’ என்று சொன்ன அக்காவின் வார்த்தைகளைக் கேட்டு டிபன் சாப்பிட்டிருந்தால்... ஏழு பேரின் உயிரையும் மது சாப்பிட்டிருக்காது!

-வணங்காமுடி

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

வெள்ளி 3 செப் 2021