மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

21 பேருக்கு மணிமண்டபம்: ஸ்டாலினுக்கு ராமதாஸ், வேல்முருகன் நன்றி!

21  பேருக்கு மணிமண்டபம்: ஸ்டாலினுக்கு ராமதாஸ், வேல்முருகன் நன்றி!

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு 1987 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான 21 பேருக்கு 4 கோடி ரூபாய் செலவில் விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 2) அறிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர்,

“தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 21 மாவீரர்களுக்கு ரூ.4 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும்; அவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதிக்கேற்ப அரசு வேலைவாய்ப்பு வழங்கப் படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இந்தியா சந்தித்த மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டம் என்றால் அது வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி எனது தலைமையில் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் தான். ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து முன்னேறுவதற்காக உரிமை கேட்டுப் போராடிய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு, கொடூரமானத் தாக்குதல் உள்ளிட்ட பல வழிகளில் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர். இந்தத் தாக்குதலில் சமூக நீதிப் போராட்டத்தில் ஈடுபட்ட 21 மாவீரர்கள் கொல்லப்பட்டனர்” என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ்,

“பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன், பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 சமூகநீதிப் போராட்டக்காரர்களும் துப்பாக்கியால் சுட்டும், அடித்தும் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம் எனது தலைமையில் வன்னிய மக்கள் நடத்திய போராட்டத்தை சமூகநீதிப் போராட்டமாக தமிழக அரசு அங்கீகரித்திருக்கிறது. அத்தகைய சமூகநீதிப் போராட்டத்திலிருந்து உருவானது தான் பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பமும், நோக்கமும் ஆகும். அந்த இலக்கை அடைவதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் சமூகநீதிப் பயணம் தடையின்றி தொடரும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“1987- இல் நடைபெற்ற வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு விழுப்புரத்தில் 4 கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், அவர்களின் வாரிசுகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் அறிவித்த மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

1987ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையிலான அரசு, இட ஒதுக்கீடு போராட்டகாரர்களின் கோரிக்கையை ஏற்பதற்கு பதிலாக, அவர்களை அடக்குவதற்கு காவல் துறையினரை ஏவி துப்பாக்கிச்சூட்டை அரங்கேற்றியது. இதில், 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, 1989-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை வன்னியர் சங்கம் புறக்கணித்தது. வட மாவட்டங்களில் பல வாக்குச் சாவடிகளில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. அத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் அவர்கள், வன்னியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் வன்னியர் சமூகம் உள்பட 108 சமூகத்தினர், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு பெற்றனர்.

ஆனாலும், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர். அதனால், அவர்களுக்கு மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும் அது தான் உண்மையான சமூகநீதி எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட வன்னியர் அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தன.

அதன் பயனாக, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சூழலில், இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கு, விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது.

இந்த நிலையில், எனது கோரிக்கையை ஏற்று, 1987- இல் நடைபெற்ற வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு விழுப்புரத்தில் 4 கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், அவர்களின் வாரிசுகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதன் மூலம், திமுக என்பது சமூக நீதிக்கான அரசு என்பதை மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அவருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 3 செப் 2021