மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

தடுமாறும் ஆப்கன்- அரசு அமைக்கும் தலிபான்!

தடுமாறும் ஆப்கன்- அரசு அமைக்கும் தலிபான்!

கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி காபூலில் நுழைந்ததோடு ஆப்கானிஸ்தானை முழுதாகக் கைப்பற்றிய தலிபான்கள், நாளை (செப்டம்பர் 3) வெள்ளிக் கிழமையன்று முறைப்படியான புதிய அரசை அமைக்க தயாராகிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் அரசியல், சமூக பொருளாதார ஸ்திரத் தன்மை தற்போது தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி தலிபான்கள் காபூலுக்குள் நுழையும்போதே நாட்டை விட்டு விமானத்தில் தப்பியோடினார். அவர் பெருமளவிலான கரன்சியை தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டதாக புகார்கள் கிளம்பின. அவர் அதை மறுத்தார். அரசில் பங்கேற்ற அதிகாரிகள், அமைச்சர்கள் பலரும் ஆப்கனை விட்டுவிட்டுக் கிளம்பிவிட்டனர். கடந்த ஆகஸ்டு 30 ஆம் தேதி நள்ளிரவு அமெரிக்காவின் கடைசி விமானம் காபூலை விட்டுப் புறப்பட்டதையடுத்து, காபூல் விமான நிலையத்தை தலிபான்கள் கைப்பற்றி வானை நோக்கிசுட்டுக் கொண்டாடினார்கள்.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானைவிட்டு ராணுவ ரீதியாக சென்றுவிட்டாலும் அரசியல் ரீதியாக பொருளாதார ரீதியாக ஆப்கன் மீது அமெரிக்காவின் கட்டுப்பாடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆப்கன் மத்திய வங்கியில் அமெரிக்காவின் ஆதிக்கம் இன்னும் இருக்கிறது. பத்து பில்லியன் டாலர்களுக்கும் மேலான ஆப்கனின் செல்வம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. சர்வதேச நாடுகளின் மனிதாபிமான உதவிகள் ஆப்கானிஸ்தானுக்கு தலிபான் ஆட்சியில் தொடர்ந்து கிடைக்குமா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதிலும் அமெரிக்காவின் கை இருக்கிறது. இந்த நிலையில் கடந்த இருவாரங்களாக அரசு என்ற ஒன்றே இல்லாத நிலையில் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் தடுமாறி வருகிறது.

இப்படிப்பட்ட சவாலான நிலையில்தான் நாளை (செப்டம்பர் 2) வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பிறகு அதிபர் மாளிகையில் புதிய அரசை தலிபான்கள் அமைக்கிறார்கள். அரசு அமைத்த பிறகுதான் சர்வதே நன்கொடையாளர்கள், முதலீட்டாளர்களை முறைப்படி அணுக முடியும்.

அமெரிக்காவின் வெளியேறுதலுக்குப் பின் காபூல் விமான நிலையம் இரு நாட்களாக மூடிக் கிடக்கிறது. இதனால் பல ஆப்கானியர்களும், வெளிநாட்டினரும் சாலை வழியாக ஆப்கானின் அண்டை நாடுகளுக்கு பயணப்பட ஆரம்பித்துவிட்டனர். தற்போது தலிபான்களுக்கு இணக்கமாக இருக்கும் கத்தார் நாடு, அரசு அமைப்பதிலும் காபூல் விமான நிலையத்தை மீண்டும் இயக்குவதிலும் தலிபான்களுக்கு உதவி வருகின்றது.

கத்தார் தலைநகர் தோகாவில்தான் இந்திய பிரதிநிதிக்கும் தலிபான் பிரதிநிதிக்கும் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை சில நாட்களுக்கு முன் நடந்தது. அதேபோல இன்று (செப்டம்பர் 2) பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தோஹாவில் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து கத்தார் அதிகாரிகளுடன் பேசினார்.

அதன் பின் தோஹாவில் கத்தார் அமைச்சருடன் ஒரு கூட்டு செய்தி மாநாட்டில் பேசிய பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், “ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் மக்களுக்கு மூன்றாம் நாடுகள் மூலம் பாதுகாப்பான பாதையை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பிராந்திய நாடுகளுடன் பேசி வருகிறோம்”என்றார்.

இந்த பின்னணியில்தான், தலிபானின் உச்ச தலைவர் ஹைபதுல்லா அகுந்த்ஸடா, ஒரு புதிய ஆட்சியின் இறுதி அதிகாரம் கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவருக்கு கீழே அதிபர் இருப்பார் என்று தலிபான் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார். கத்தாரில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் துணைத் தலைவர் அப்பாஸ், ஆப்கனில் புதிய அரசு பற்றிய அறிவிப்பு ஓரிரு நாட்களில் வரும் என்று கூறியுள்ளார்.

"புதிய அரசாங்கம் குறித்து ஆலோசனைகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளன, மேலும் அமைச்சரவை பற்றி தேவையான விவாதங்களும் நடத்தப்பட்டுள்ளன. நாங்கள் அறிவிக்கும் இஸ்லாமிய அரசாங்கம் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கும். எங்கள் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்ஸ்டா அரசாங்கத்தின் தலைவராக இருப்பார், இதில் எந்த கேள்வியும் இல்லை.”என்று தாலிபானின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அனாமுல்லா சமங்கனி டோலோ நியூஸிடம் கூறினார்.

இஸ்லாமிய அரசின் முதல் சவால் ஆப்கன் மக்களின் வேலை வாய்ப்பு, பசியாகத்தான் இருக்கும் என்பதே சர்வதேச சமூகத்தின் கணிப்பு.

வேந்தன்

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

வியாழன் 2 செப் 2021