மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

கவுண்டர்-வன்னியர் கெமிஸ்ட்ரி: மணிமண்டப அறிவிப்பில் உடைக்கும் ஸ்டாலின்

கவுண்டர்-வன்னியர் கெமிஸ்ட்ரி:  மணிமண்டப அறிவிப்பில் உடைக்கும் ஸ்டாலின்

இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பலியான 21 பேர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 2) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இன்று அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர், “இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் சமூக நீதிக்கான முன்னோடி மாநிலம். 100 ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதி பற்றி பேசிய கட்சி நீதிக் கட்சி. அரசியலமைப்பு சட்டத்தில் சமூக நீதிக்காக திருத்தம் கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு.

இந்த நிலையில் 1987 ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20% தனி ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடைபெற்றது. அந்தப்போராட்டத்தில் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர் துப்பாக்கிச் சூட்டால் பலியானார்கள். அந்த இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும்” என்று அறிவித்திருக்கிறார்.

மேலும், “1987 போராட்டத்துக்குப் பின்னால் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற கலைஞர் ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 20% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது வன்னியர்களுக்கு 10.5% உள் ஒட இதுக்கீடும் கொண்டுவரப்பட்டது” என்பதையும் சுட்டிக் காட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த அறிவிப்புக்கு சட்டமன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்த அந்தப் போராட்டம் வன்னியர் சங்கத்தாலேயே முன்னெடுக்கப்பட்டது. தமிழகத்தை உலுக்கிய அந்தப் போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு வன்னியர் வாக்குகளை நோக்கிய திமுகவின் அரசியல் ரீதியான தூண்டில் என்பது மட்டுமல்ல, தற்போது வரை அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவை அங்கிருந்து அகற்றி திமுக கூட்டணிக்குள் கொண்டுவரும் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.

இதுபற்றி திமுக வட மாவட்டப் புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.

“1987 போராட்டத்துக்குப் பின் 91,2001, 2011, 2016 என்று அதிமுக நான்குமுறை ஆட்சியில் இருந்துள்ளது. 96, 2006 என இருமுறை திமுக ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் யாரும் இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போதே திமுக தலைவர் ஸ்டாலின் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் என்று வாக்குறுதிகள் வழங்கினார். ஆனால் பாமக இதை அப்போது விமர்சித்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இருந்தது. தேர்தல் முடிவில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் திமுக மோசமாக தோல்வி அடைந்தது. இதன் காரணம் பற்றி அந்தந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களிடமும் ஸ்டாலின் பேசினார். அப்போது அவருக்கு கிடைத்த விடை முக்கியமானது.

‘கவுண்டர்கள், வன்னியர்கள் இணைந்து அடர்த்தியாக இருக்கும் மாவட்டங்களில் திமுக தோற்றிருக்கிறது. நடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருந்ததால் கவுண்டர்கள் ஆதரவு அவருக்கு இயல்பாக இருந்தது. வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டு சட்டத்தை அவர் அவசரமாக நிறைவேற்றியதாலும் அதை வன்னியர்கள் வரவேற்றார்கள். இந்த மாவட்டங்களில் கவுண்டர்கள், வன்னியர்கள் ஆகியோர் இணைந்து அதிமுகவை ஆதரித்ததால் அங்கே திமுக தோல்வி அடைந்தது. இதற்கு பாமக ஒரு காரணம், பாமகவைத் தாண்டி பிற கட்சிகளில் குறிப்பாக திமுகவில் இருந்த வன்னியர்கள் கூட அதிமுக அணியை ரகசியமாக ஆதரித்தது இன்னொரு முக்கிய காரணம் என்பதுதான் ஸ்டாலினுக்கு கிடைத்த விடை.

இதன் அடிப்படையில் பாமகவை கூட்டணிக்குக் கொண்டுவருகிறோமோ இல்லையோ பாமகவைத் தாண்டியிருக்கும் வன்னியர்களிடமும் திமுக மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஸ்டாலினுக்கு உண்டானது. அதன் அடிப்படையில்தான் வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை அரசாணை வெளியிட்டு உறுதி செய்தார். மேலும் இப்போது இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு மணிமண்டபம் அறிவித்துள்ளார். இதன் மூலம் கவுண்டர்கள்- வன்னியர்கள் அடர்த்தியாக இணைந்திருக்கும் பகுதிகளில் திமுகவின் பலவீனத்தை பலமாக்க முடியும் என்பது ஸ்டாலினின் கணக்கு.

இதுமட்டுமல்ல... அடுத்தடுத்து வன்னியர் சமுதாயத்துக்கு ஸ்டாலின் செய்து வரும் அறிவிப்புகளால் பாமக வெளிப்படையாக திமுகவை எதிர்க்க முடியாது. களத்தில் அவர்களுக்கு திமுகவுக்கு எதிராக செயல்படக் கூடிய வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. சட்டமன்றத்திலேயே கலைஞர் படத் திறப்பு விழாவில் அதிமுக கலந்துகொள்ளாத நிலையில் பாமக கலந்துகொண்டது. 10.5% உள் இட ஒதுக்கீடு,21 தியாகிகளுக்கு மணிமண்டபம் ஆகிய இரண்டும் பாமகவின் மிக முக்கியமான கோரிக்கைகள். இவை இரண்டையும் திமுக நிறைவேற்றிவிட்ட நிலையில் பாமக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணிக்கு வந்துவிடும் வாய்ப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது” என்கிறார்கள்.

-வேந்தன்

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

வியாழன் 2 செப் 2021