மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

‘குற்றமே நடக்காத சூழல்’: காவல் துறைக்கு முதல்வர் அறிவுரை!

‘குற்றமே நடக்காத சூழல்’: காவல் துறைக்கு முதல்வர் அறிவுரை!

குற்றமே நடைபெறாத சூழலை உருவாக்குங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்.

வண்டலூர் ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், 941 உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டு பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டிஜிபி செ.சைலேந்திரபாபு, காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் அ.அமல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “தமிழ்நாடு அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் இன்னொரு கை காவல் துறை. இந்த இரண்டும் முறையாக, சரியாகச் செயல்பட்டால் அந்த அரசாங்கம் தலைசிறந்த அரசாங்கமாக இருக்கும். அந்த வகையில் காவல் துறையின் செயல்பாடு மிக மிக முக்கியமானது. காவல் துறையில் எத்தனையோ உயர் பதவிகள் இருந்தாலும், மக்களோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளக் கூடியவர்களாக உதவி ஆய்வாளர்களாகிய நீங்கள்தான் இருக்கப்போகிறீர்கள்.

காவல் துறை என்றாலே குற்றங்களைத் தடுக்கும் துறையாக, தண்டனை வாங்கி தரும் துறையாக மட்டும் அனைவரும் நினைக்கிறார்கள். காவல் துறை என்பது குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கித் தரும் துறையாக மாற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதைவிட, குற்றமே நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக அது மாற வேண்டும். மக்களுக்கு அமைதியான சூழலை உருவாக்கித் தர வேண்டும்.

இந்தியாவிலேயே முதன்முதலாக காவல் துறையில் மகளிரைப் பங்கெடுக்க வைத்தவர் கலைஞர்தான் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். காவல் துறையில் உங்களைப் போன்ற பெண் வீராங்கனைகள் அதிகமாகப் பங்கெடுக்க வேண்டும்.

‘காவல் துறை உங்கள் நண்பன்’ என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக நீங்கள் செயல்பட வேண்டும். அநியாயத்தைத் தடுக்க எப்போதும் தயங்காதீர்கள். நியாயத்துக்காக எப்போதும் நில்லுங்கள். உங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியைக் குற்றம் நடக்காத பகுதியாக மாற்றுங்கள். உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள். சூழ்நிலை காரணமாகக் குற்றம் செய்தவர்களைத் திருத்த முயற்சி செய்யுங்கள். சட்டத்தை மதிப்போருக்கு இன்முகம் காட்டியும், மீறுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கியும் செயல்பட வேண்டும் என்று கலைஞர் கூறுவார். இதுதான் உங்களது இலக்காக அமைய வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 2 செப் 2021