மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

அண்ணா சாலையில் கலைஞருக்குச் சிலை!

அண்ணா சாலையில் கலைஞருக்குச் சிலை!

சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில், கலைஞருடைய சிலையை அண்ணா சாலையில் அமைப்பது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் கோரிக்கை வைத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் , தன்னுடைய உரையை முடிப்பதற்கு முன்பு ஒரு கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். தந்தை பெரியார் எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை, அண்ணா சாலையில், கலைஞருடைய திருவுருவச் சிலையை அமைக்க வேண்டுமென்று, அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதற்காக முறையாக அனுமதியும் பெற்று, அந்தச் சிலை வைக்கப்பட்டது. ஆனால், அந்தச் சிலை ஏன் அங்கிருந்து அகற்றப்பட்டது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நான் அந்த விஷயத்திற்குள் சென்று, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்புகூட, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி என்னைச் சந்தித்து, அவரும் இந்தக் கோரிக்கையை என்னிடம் எடுத்து வைத்தார். இது பெரியார் நினைத்தது; பெரியார் எங்களுக்குக் கட்டளையிட்டு, நாங்கள் அதை வைத்தது. எனவே, மீண்டும் அந்த இடத்திலே சிலை வைக்க வேண்டுமென்று அவரும் வற்புறுத்தினார். நான் அப்போது சொன்னேன்... பொது இடங்களில், போக்குவரத்திற்கு இடையூறாக இதுபோன்று சிலைகள் வைக்கப்படக்கூடாது என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவரிடம் அந்தச் சட்டச் சிக்கல்களையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ‘நாங்கள் ஏற்கெனவே அனுமதி வாங்கியதுதான், எனவே, புதிதாக அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை’ என்று அவர் சொன்னார்.

அதுமட்டுமல்ல.. அண்ணா சாலையிலே பெரியார் சிலை இருக்கிறது, பேரறிஞர் அண்ணா சிலை இருக்கிறது. எம்.ஜி.ஆர். சிலை இருக்கிறது. ஏற்கெனவே, கலைஞர் அவர்களுடைய சிலையும் இருந்தது. எனவே, அந்த இடத்திலே நீங்கள் அதை வைக்க வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார்.

அண்ணா சாலையில் அதை வைப்பது குறித்து நான் சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செய்வது உகந்ததாக இருக்கும். நீதிமன்றம் பிறப்பித்திருக்கிற உத்தரவிற்கும் நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். நிச்சயமாகக் கலைஞர் சிலை அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைக்கப்படும்” என்று கூறினார்.

-பிரியா

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

புதன் 1 செப் 2021