மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

அதிமுக தொண்டர்களுக்கு வலை வீசும் காங்கிரஸ்: புது வியூகம்!

அதிமுக தொண்டர்களுக்கு வலை வீசும் காங்கிரஸ்:  புது வியூகம்!

தமிழ்நாட்டில் அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து அந்த இடத்துக்கு வர பாஜக முயற்சிக்கிறது என்பதுதான் இன்றைய பெரும்பாலான அரசியல் பார்வையாளர்களின், விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. அதை வலுப்படுத்தும் வகையில் பாஜகவின் மேடைகளில், ‘திமுகவுக்கு நாங்கள்தான் வலிமையான எதிர்க்கட்சி’ என்று அண்ணாமலை உள்ளிட்ட பலரும் பேசி வருகின்றனர்.

ஆனால், ‘அதிமுகவின் இன்றைய பலவீனத்தை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டு வளர வேண்டும்’ என்ற புதிய வியூகம் சத்தியமூர்த்தி பவனில் பேசப்பட்டிருக்கிறது.

ஆகஸ்டு 30 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் கலந்துகொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடந்த இந்தக் கூட்டத்தில் இன்னொரு முக்கியப் புள்ளியும் கலந்துகொண்டார். அண்மையில் ஐ.ஏ.எஸ். பணியை உதறிவிட்டு காங்கிரசில் சேர்ந்து தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சசிகாந்த் செந்திலும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.

தேசிய அளவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள் எப்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் மேலிடப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்களோ, அதுபோல மாநிலப் பொதுச் செயலாளர்கள்- செயலாளர்கள் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணி எப்படி இருக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்யவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் 23 துணை அமைப்புகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்களா என்பதை ஆய்வு செய்யவுமே இந்தக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட அளவில் 23 துணை அமைப்புகளுக்கும் பொறுப்பாளர்கள் ஒரு மாதத்துக்குள் நியமிக்கப்பட வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டு அந்த முப்பதாவது நாள்தான் ஆகஸ்டு 30 ஆம் தேதி இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக காங்கிரஸில் மொத்தமுள்ள 72 மாவட்டங்களில் இதுவரை 64 மாவட்டங்கள் அந்த பொறுப்பாளர்களை நியமித்துவிட்டனர். மீதி இருக்கும் 8 மாவட்டங்கள் இன்னும் அந்த வேலையைச் செய்யவில்லை. அந்த 8 மாவட்டங்களின் பெயர்களை அறிவித்தால் அவர்களுக்கு அது அசிங்கமாகப் போய்விடும் என்பதால் மேலும் 15 நாள் கால அவகாசம் கொடுத்திருக்கிறார் சசிகாந்த் செந்தில்.

மாநில மேலிடப் பொறுப்பாளர்களுக்கு மாவட்டத் தலைவர்கள் ஒத்துழைக்கிறார்களா, தேசிய அளவில் வரும் மேலிடப் பொறுப்பாளர்களை மாநிலத் தலைமை மதிப்பது போல... மாநில மேலிடப் பொறுப்பாளர்களை மாவட்டத் தலைவர்கள் மதித்து நடக்கிறார்களா என்பதெல்லாம் ஆகஸ்டு 30 ஆம் தேதி கூட்டத்தில் விரிவாகப் பேசப்பட்டது.

இந்த ஆய்வையெல்லாம் தாண்டி கட்சியை பலப்படுத்துவது பற்றியும் முக்கிய ஆலோசனைகளை தலைவர்கள் வழங்கினார்கள்.

இதில் தமிழக மேலிடப் பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவின் சரளமான தமிழ் பேச்சுதான் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்படி என்ன பேசினார் தினேஷ் குண்டுராவ்?

கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் குண்டுராவின் மகனான தினேஷ் குண்டுராவ் தமிழ்நாட்டு அரசியல் பற்றி தன் தந்தை வாயிலாக நிறையவே அறிந்து வைத்திருப்பவர். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது காவிரி பிரச்சினைக்காக கர்நாடக முதல்வர் குண்டுராவைச் சந்ந்திக்க பெங்களூருவில் இருக்கும் அவரது வீட்டுக்குப் போனார். அப்போது குண்டுராவின் மனைவி எம்.ஜி.ஆரை சாப்பிட அழைத்து உட்கார வைத்து முதலில் தண்ணீர் கொடுத்தார். ஆனால் எம்.ஜி.ஆர். அந்தத் தண்ணீரைக் குடிக்க மறுத்துவிட்டார். குண்டுராவின் மனைவி, ‘ஏண்ணா’ என்று கேட்க, ‘நீ எனக்குத் தண்ணீர் கொடுத்தாய். உன் கணவரை தமிழகத்துக்குத் தண்ணீர் தரச் சொல். இல்லையென்றால் இந்தத் தண்ணீரை நான் குடிக்க மாட்டேன்’ என்று சொன்னார் எம்.ஜி.ஆர். அதன் பிறகே குண்டுராவ் தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டார்.

இப்படிப்பட்ட குண்டுராவின் மகன் தினேஷ் குண்டுராவ் ஆகஸ்டு 30 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படாத கூட்டத்தில் மனம் திறந்து பேசினார்.

“அதிமுக என்கிற அமைப்பு இப்படியே இருக்குமா அல்லது சிதையுமா என்ற கேள்விக்குறியோடுதான் தமிழ்நாட்டு அரசியலில் இருக்கிறது. இன்று திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறது. நம் கூட்டணிக் கட்சியாகவும் இருக்கிறது. அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் கட்சிகளில் காங்கிரஸ் தவிர எந்தக் கட்சியும் அமைப்பு ஸ்திரத் தன்மையோடு இல்லை. அதிமுக வலிமையான கட்சியாக அறியப்பட்டாலும் அதன் முடிவுகள் பாஜகவால் எடுக்கப்படுகின்றன. அது ஒன்றே அக்கட்சி வலிமை இழந்து வருவதற்கு முக்கிய காரணியாக இருக்கும். யார் தலைவர் என்ற போட்டி அங்கே தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பாரம்பரியமான செல்வாக்கும், கணிசமான வாக்கு வங்கியும் கொண்ட காங்கிரஸின் கட்டமைப்பை நாம் பலப்படுத்துவதற்கு இதுதான் சரியான நேரம். ’இப்போ இல்லாட்டி எப்போ?’ (என்ற விஜய் பாட்டைப் பாடுகிறார்)

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைதான் பாஜக பயன்படுத்த முடியும். ஆனால் அதிமுகவின் தொண்டர்களை காங்கிரஸ் கட்சிதான் பயன்படுத்திக் கொள்ள முடியும். எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றியபோது அவரை உடனடியாக அமெரிக்கா அனுப்பி சிகிச்சை ஏற்பாடு செய்தவர் அப்போதைய நமது பிரதமர் அன்னை இந்திரா காந்திதான். எம்.ஜி.ஆர். இறந்தபிறகு இரட்டை இலை சின்னத்துக்கு நெருக்கடி வந்தபோது அந்த சின்னத்தை மீட்டுக் கொடுத்தது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திதான். அப்படிப்பட்ட கட்சியை இன்று பாஜக கையிலெடுக்கப் பார்க்கிறது. நாம் இதையெல்லாம் அதிமுக தொண்டர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அதிமுக தொண்டர்களை காங்கிரஸ் பக்கம் நாம் கொண்டுவரவேண்டும்.

நீங்கள் தனி நபர் கண்ணோட்டத்தை ஒழித்துக்கட்டிவிட்டு கட்சிக்காக என்ற கண்ணோட்டத்துடன் செயல்படுங்கள். பிடித்தவர், பிடிக்காதவர், வேண்டியவர், வேண்டாதவர் என்பதையெல்லாம் எரேஸ் பண்ணிவிடுங்கள். ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்பதை தவிர வேறு எந்த கோஷ்டி மனப்பான்மையும் நமக்கு வேண்டாம்” என்று பேசியிருக்கிறார் தினேஷ் குண்டுராவ்.

தினேஷ் குண்டுராவின் பேச்சை வலுப்படுத்தும் வகையில் அதே கூட்டத்தில் திண்டுக்கல் மாநகர மாவட்டத் தலைவர் மணிகண்டன் அதிமுகவினர், தமாகாவினரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்தார்.

இந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, “கோஷ்டி சிந்தனையை விட்டுவிட்டு மோடியை பிரதமர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு செயல்படுங்கள். வரலாற்றை மாற்ற முயலும் மோடியை நாம் மாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

கூட்டம் முடிந்ததும் மாவட்டத் தலைவர்கள் சிலரிடம் பேசியபோது, “இதுவரைக்கும் காங்கிரஸில் இருந்து பலர் வெளியேறி வேறு கட்சிகளில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுகவினரைக் கொண்டுவரவேண்டும் என்ற தினேஷ் குண்டுராவின் பேச்சு உண்மையிலேயே பூஸ்ட் மாதிரி இருக்கிறது. விரைவில் அந்த காட்சிகள் அரங்கேறும்” என்றார்கள்.

-ஆரா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

புதன் 1 செப் 2021