மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 31 ஆக 2021

ஜெ. பல்கலை: ஓ.பன்னீர்-அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது!

ஜெ. பல்கலை:  ஓ.பன்னீர்-அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது!

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் சட்ட முன் வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி (ஆகஸ்டு 31) சட்டமன்றத்தில் கொண்டுவந்தார்.

அதாவது 2021ம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்த மற்றும் நீக்கறவு சட்ட முன்வடிவு என்று இதற்கு பெயர். இதன்படி விழுப்புரம்,கடலூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. இதனால், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த வகையிலிருந்து இணைக்கப்பட்ட வகையாக மாற்றம். விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக் கழகமும் நீக்கப்பட்டு அண்ணாமலைப் பழகத்தோடு இணைக்கப்படுகிறது.

இந்த சட்டமுன்வடிவுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சபாநாயகர், ‘இந்த சட்ட முன் வடிவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும்போது நீங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்’ என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

ஆனாலும், இதை எதிர்த்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து, ‘இந்த சட்ட முன்வடிவை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கிறோம்’ என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தார். அதிமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த அதிமுகவினர் ஓ.பன்னீர் தலைமையில் வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சனிக்கிழமையே இது தொடர்பான வாக்குவாதம் சட்டமன்றத்தில் வந்தது. உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, “ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை தொடங்கினார்களே தவிர அதற்கான நிதியோ, பல்கலைக் கழகம் கட்டுவதற்கான இடமோ ஒதுக்கப்படவில்லை. எனவே இப்போது அந்த பல்கலைக் கழகம் செயல்படுவதற்கான தேவை இல்லை” என்று தெரிவித்தார். இதற்கு அதிமுக சார்பில், “தேர்தல் காரணமாக அன்று நிதி ஒதுக்கமுடியவில்லை’ என்று மறுப்பு தெரிவித்தனர்.

இந்தப் பின்னணியில்தான் இன்று (ஆகஸ்டு 31) ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் சட்ட முன்வடிவைக் கொண்டுவந்தார். இதை எதிர்த்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர் சிறிது நேர ஆலோசனைக்குப் பின் சட்டமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறி வாலாஜா சாலை பக்கம் நடந்தனர்.

வாலாஜா சாலையில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். ‘கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் காழ்ப்புணர்ச்சியை கண்டிக்கிறோம்’, ‘ஜெயலலிதா பல்கலைக் கழகம் மீண்டும் செயல்படவேண்டும்’ ’இணைக்காதே இணைக்காதே ஜெ. பல்கலையை அண்ணா பல்கலையோடு இணைக்காதே’ என்று கோஷங்களை முன் வைத்தனர். சில நிமிடங்களிலேயே போலீஸ் வாகனங்கள் வந்துவிட்டன.

இதைத் தொடர்ந்து போலீசார் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை கைது செய்தனர். இதேநேரம் விழுப்புரத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் முடிவை எதிர்த்து தான் ஒருவர் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரையும் போலீசார் கைது செய்தனர். காவல்துறை வேனில் ஏற்றி அதிமுக எம்.எல்.ஏ.க்களை கொண்டு சென்றனர்.

-வேந்தன்

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

செவ்வாய் 31 ஆக 2021