மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 31 ஆக 2021

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டுமென்ற கட்டாயமில்லை!

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டுமென்ற கட்டாயமில்லை!

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

நாளை முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு பள்ளிகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளி ஒன்றில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பிறகு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில், “நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் தலா இரு மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவர். பெற்றோர்கள் அச்சமின்றி தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

மாணவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலோ பள்ளியில் முக கவசம் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஐந்து வகுப்புகள் மட்டுமே நடைபெறும். காலை 9.30 மணியிலிருந்து மாலை மூன்று 3.30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும்.

பள்ளிகள் திறக்கப்பட்டு தொடக்கம் முதலே பாடம் நடத்த வேண்டாம் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பிறகு வகுப்பெடுக்க வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கவில்லை . எனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த வகுப்பறைகளை பயன்படுத்தலாம். அதுபோன்று கல்வி தொலைக்காட்சி வழக்கம்போல் இயங்கும். இதை தொடங்கினால் அது நிறுத்தப்படும் அது தொடங்கினால் இதன் நிறுததப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறினார்.

அதுபோன்று நாளை முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ‘கொரோனா தடுப்பூசியை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்துவது தொடர்பாக இதுவரை தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. தடுப்பூசிகள் செலுத்தப்படாமல் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது நோய்தொற்று பரவலை அதிகரிக்க செய்ய வாய்ப்புள்ளது. சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்றால் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இடையேயான கற்றலில் வேறுபாடுகள் எழ வாய்ப்பு உள்ளது. ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமையாகவும் அமையும்.

அனைத்து மாணவர்களும் நேரடியாக பள்ளிக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தாமல் ஆன்லைன் வழியாக வகுப்புகளை கவனிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 31) விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், பள்ளிகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். பலதுறை நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவெடுத்து அறிவித்தது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டது. அதே சமயத்தில் மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டார்கள். ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கப்படும். இணைய வழியில் பாடங்கள் பகிரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தடை இல்லை. மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தடை இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கானாவில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்க தெலங்கானா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நேரடி வகுப்புகள் கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ள தெலங்கானா உயர் நீதிமன்றம், அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 31 ஆக 2021