திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு: செப்-15 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

politics

தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை பள்ளி – கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுபோன்று வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு தொடர்பாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,

கொரோனா நோய் பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகள் 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் (5-9-2021 முதல்) அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, அறிவித்தவாறு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் திருவிழாக்கள் நடத்துவதற்கான தடையும் தொடரும்.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய்ப் பரவலின் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

** பள்ளிகள் திறப்பு**

மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே அறிவித்தவாறு, 1-9-2021 முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

**விடுதிகளுக்கு அனுமதி**

இதைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான அனைத்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் (School and College Hostels) ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல, பணிபுரிபவர்களுக்கான தனியார் தங்கும் விடுதிகள் (Working Men/Women Hostel) கொரோனா நோய்த்தொற்று தடுப்புக்கான நிலையான வழிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மேற்படி விடுதிகளில் பணியாற்றும் விடுதி காப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

**ஆர்டிபிசிஆர் கட்டாயம்**

தற்போது கேரள மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று பரவல் நிலையினைக் கருத்தில்கொண்டு அம்மாநிலத்திலிருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ, மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதைச் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

**பொது**

செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களும், தடுப்பூசி செலுத்தியிருப்பதைத் தொடர்புடைய நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், தொழில் வர்த்தக நிறுவனத்தினர், சிறு வியாபாரிகள், வங்கி மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு சமூக பொருளாதார நடைமுறைகள் தடையின்றி நடைபெற முன்னுரிமை அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் / உள்ளாட்சி பொறுப்பாளர்கள் / மருத்துவத் துறையினர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் இந்தப் பகுதியில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், பின்வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

மாணவச் செல்வங்களின் கல்வி மற்றும் உளவியல் நலனுக்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து, அனைவரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும், இதர பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *