மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஆக 2021

தாலிபான் எப்படி உருவாகிறது?

தாலிபான் எப்படி உருவாகிறது?

ராஜன் குறை

அமெரிக்கா இருபதாண்டுக் காலம் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை நிலைநிறுத்தி “மக்களாட்சியை வளர்த்தெடுக்க” பெரும் முயற்சி செய்த பிறகு, நிரந்தரமாக அந்த நாட்டில் தங்கள் படைகள் தங்குவது வியாபாரத்துக்குக் கட்டுப்படியாகாது என்ற நிதர்சன உண்மையால் படைகளைத் திரும்பப் பெற முடிவு செய்தது. உடனே எந்த தாலிபானின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து ஆப்கானிஸ்தானை மீட்க அமெரிக்கா இருபதாண்டுகளுக்கு முன் படையெடுத்ததோ, அதே தாலிபான் “போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட” என்று உடனே மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. அமெரிக்கா நிறுவிய பொம்மை அரசின் தலைவர்கள் தப்பித்து ஓடிவிட்டார்கள். அமெரிக்கா முன்மொழிந்த மக்களாட்சி ஆதரவாளர்களாக இருந்த மக்கள் தாலிபான் கையில் சிக்க பயந்து அமெரிக்க விமானத்தில் தொங்கியபடி தப்பிக்க முயன்று விழுந்து இறந்த காட்சிகள் உலகின் சமகால காணொலி வரலாற்றுத் தொகுப்பில் தவறாது இடம் பெறும். விமானத்துக்கு வெளியே தொங்கிக்கொண்டே பயணித்தாவது தாலிபானிடமிருந்து தப்ப வேண்டும் என்று ஒருவர், ஒரு ஆப்கன் இஸ்லாமியர், நினைப்பதை எப்படிப் புரிந்துகொள்வது என்பது கேள்வி.

தாலிபான் என்பது அடிப்படைவாத அமைப்பு. அதுதான் இஸ்லாம் என்று நம்பும் சட்டத் திட்டங்களை அனைவர் மீதும் திணிப்பது. எத்தனை மார்க்க அறிஞர்கள் இஸ்லாமுக்கு புதிய விளக்கங்கள் சொன்னாலும் ஏற்க மாட்டார்கள். குறிப்பாக பெண் ஒடுக்குமுறையில் தீவிர முனைப்புக் கொண்டவர்கள். கடந்த இரு வாரங்களில் தொலைக்காட்சியில் ஆப்கன் காட்சிகளைப் பார்த்தவர்கள் ஒன்றை கவனித்திருக்கலாம். தாலிபான் உறுப்பினர்கள் அனைவர் கைகளிலும் பலவகையான துப்பாக்கிகள் இருக்கின்றன. அதி நவீன ரக துப்பாக்கிகளும் இருக்கின்றன. இருபதாண்டுக் காலம் ஆப்கானிஸ்தானின் தெற்கே, பாகிஸ்தானை ஒட்டிய மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்ததாக கருதப்பட்டது தாலிபான். துப்பாக்கிகளை அவர்கள் மலைச்சரிவுகளில் பயிர் செய்து வளர்த்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் பேசுவது இஸ்லாமிய அடிப்படைவாதம். ஆனால் அவர்கள் அரசியல் என்பது துப்பாக்கிகளின் ஆதிக்கம். அது எப்படி வல்லரசு நாடுகளின் கெடுபிடிகளை மீறி அவர்கள் கைகளுக்கு துப்பாக்கிகள் போய் சேருகின்றன?

இந்தக் கேள்விக்கான விடை தாலிபான் எப்படி உருவாகியது என்பதில் இருக்கிறது. மேற்கத்திய உலகம் இதை ஒரு இஸ்லாமிய பிரச்சினையாக கட்டமைக்கிறது.

இஸ்லாம் மதத்தில் இருக்கும் அடிப்படைவாத கூறுகள்தான் தாலிபான் உருவாக காரணம் என்பதும், முஸ்லிம்களை நல்ல முஸ்லிம்கள், கெட்ட முஸ்லிம்கள் என்று பிரிப்பதுதான் அமெரிக்காவின், ஐரோப்பாவின் அல்லது பொதுவாக மேற்குலக மனோவியலின் போக்கு. அதனால்தான் பேராசிரியர் மஹ்மூத் மம்தானி தனது ஆப்கானிஸ்தான் பிரச்சினையை ஆராயும் நூலுக்கு “Good Muslim, Bad Muslim: America, Cold War and the Roots of Terror” என்று பெயரிட்டார். இந்த நூல் தமிழிலும் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் எப்படி ரஷ்ய, அமெரிக்க பனிப்போரில் சிக்கி சின்னாபின்னமானது என்பதை ஆதாரபூர்வமாக, தெளிவாக இந்த நூலில் படித்தறியலாம். ஆனால், இந்திய இஸ்லாமிய வெறுப்பாளர்களும் தாலிபான் போன்றவர்கள்தான். அறிவுபூர்வமாக சிந்திப்பதை, வாசிப்பதைவிட மூடத்தனமாக இஸ்லாமிய மார்க்கம்தான் பிரச்சினை என்று நம்புவதையே விரும்புவார்கள். அதனால் சமூகத்தில் மேலும் வெறுப்பையும், வன்முறையையும் விதைப்பார்கள். இருக்கவே இருக்கிறது இந்துத்துவ பிரசாரம்.

ஆப்கானிஸ்தான் வரலாறு

ஆப்கானிஸ்தான் இப்போதுள்ள எல்லைகளுடன் தனி அரசாக உருவானது 1880ஆம் ஆண்டில்தான். பெரும்பாலும் பாரசீக பேரரசின், வேறு பல பேரரசுகளின் பகுதியாக இருந்தது. நவீன ஆப்கன் தேசம் உருவான பிறகும் அங்கே மன்னராட்சி நிலவியது. சமீபத்தில் 1973ஆம் ஆண்டுதான் மன்னராட்சி முடிந்து குடியரசு உருவாகியது. ஆப்கனின் மக்கள் தொகை, தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதிதான், நாலு கோடிதான் என்றாலும், அந்த மக்கள் தொகையும் பல மொழி பேசும் பல இனக்குழுக்களைக் கொண்டது. அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட மக்களாக உருவாக போதுமான அவகாசம் வாய்க்கப் பெறாத நாடு ஆப்கானிஸ்தான்; காரணம் அது எப்போதுமே வல்லரசுகளின் விளையாட்டு மைதானமாக விளங்கியதுதான்.

ஆப்கானிஸ்தானில் சமகால அரசியல் உருவாகும்போது அதன் அண்டை நாடான சோவியத் யூனியன் தாக்கத்தினால் இடது சாரி இயக்கங்களும் உருவாயின. அமெரிக்கா இடது சாரி இயக்கங்கள் வலுப்பெறுவதை மறைமுகமாகத் தடுக்கும். அதனால் சோவியத் யூனியன் நேரடியாகவே 1980ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நுழைந்தது. அதன் ராணுவத்தை அங்கே நிலைபெறச் செய்தது. அமெரிக்காவுக்கு நெருக்கடியான காலம் அது. எழுபதுகளின் துவக்கத்தில் வியட்நாமில் தோல்வியடைந்தபின் எழுபதுகளின் இறுதியில் அவர்கள் ஆதரித்து வந்த இரானின் எதேச்சதிகார மன்னராட்சி கொமெனியின் தலைமையிலான இஸ்லாமிய புரட்சியால் வீழ்ந்தது. இரானுக்கு எதிராக இராக்கின் சதாம் ஹுசைனை தூண்டியது அமெரிக்கா. ரசாயன ஆயுதங்களை சதாமுக்கு அளித்து அவற்றை பயன்படுத்தவும் சொல்லிக்கொடுத்தது. மிகக் கொடூரமான இரான்-இராக் யுத்தத்தால் சதாம் ஹுசைன் ஒரு சர்வாதிகாரியாக உருவானதும், பின்னாளில் அமெரிக்கா சதாம் ஹுசைனுக்கு எதிராகப் போர் தொடுத்ததும் வரலாறு. சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்கா யாரையெல்லாம் சோவியத் யூனியனை எதிர்ப்பதற்காக ஆதரித்தார்களோ, அவர்கள் எல்லோரும் அமெரிக்காவின் எதிரிகளாக மாறினார்கள். அதாவது தன்னுடைய எதிரிகளை, இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அமெரிக்காவே ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கியது. ஆப்கானிஸ்தானத்தில் பல மதவாத நோக்குகொண்ட ராணுவங்களை அமெரிக்கா உருவாக்கி ஆதரித்தது. அந்த இனக்குழு ராணுவ தலைவர்களுக்கு 1985ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் விருந்து வைத்த ரொனால்டு ரீகன் அவர்கள்தான் அமெரிக்காவை உருவாக்கிய ஜெஃபர்சன் போன்ற தலைவர்களைப் போல நவீன ஆப்கானிஸ்தானத்தை உருவாக்கப் போகிறார்கள் என்றார். இறுதியில் அங்கே உருவானது தாலிபான்.

தாலிபானுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடியாக பிரச்சினை எதுவும் கிடையாது. தாலிபான் அல்-கொய்தாவுக்கும், ஒசாமா-பின்-லேடனுக்கும் அடைக்கலம் கொடுத்ததால்தான் அமெரிக்கா 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. ஒசாமா-பின்-லேடன் அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமான சவுதி அரேபியாவின் கோடீஸ்வரர் குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பில் ஈடுபட்டவர்கள் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். சவுதி அரேபியா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு. எண்ணெய் வளம் மிகுந்த அந்த நாட்டின் செல்வந்தர்கள் எல்லாம் அவர்கள் பணத்தை அமெரிக்காவில்தான் முதலீடு செய்துள்ளார்கள். அதனால் சவுதி அரேபியா எத்தகைய அடிப்படைவாத இஸ்லாமை ஊட்டி வளர்த்தாலும் அமெரிக்கா கண்டு கொள்ளாது என்பது மட்டுமல்ல; அதனால் ஒன்றும் செய்யவும் முடியாது. அதேபோல தன்னுடைய ராணுவ வர்த்தக நலன்களுக்காக பாகிஸ்தானின் சக்திக்கு மீறிய ராணுவத்தை வளர்த்து அந்த நாட்டில் மக்களாட்சி உருவாவதைச் சீர்குலைக்கும் அமெரிக்கா. பாகிஸ்தான் ராணுவம் தாலிபானுக்கு ஆதரவளித்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் அதில் தலையிட்டால் பாகிஸ்தான் சீனாவுடன் சென்றுவிடும்.

சரி, இதெல்லாம் பனிப்போரின் விளைவுகள். ரஷ்யா, சீனா போன்ற பொதுவுடமை அரசுகளுக்கும், அமெரிக்காவின் தனியுடமை சந்தை பொருளாதார சுதந்திரவாதத்துக்குமான முரண் என்று வைத்துக்கொள்வோம். அந்த முரண் எப்படி தோன்றியது? அதற்கும் அடிப்படைவாதத்துக்கும் என்ன தொடர்பு?

நவீன அரசியல் சிந்தனையின் பிளவுண்ட சுயம்

அரசர்களையும், பிரபுகளையும் கொன்று குவித்து குடிமக்களின் ஆட்சியை பிரகடனம் செய்த ஃபிரெஞ்சு புரட்சி (1789) உலக வரலாற்றில் நவீன அரசியலின் முக்கியமான துவக்கப்புள்ளிகளில் ஒன்று. சுதந்திரம், சமத்துவம் என்ற முழக்கங்களுடன் சேர்த்து சகோதரத்துவம் என்று ஆண்பால் லட்சியத்தையும் கூறியது ஃபிரெஞ்சுப் புரட்சி. சகோதரிகள் மட்டும் தனி நபர்கள் இல்லையா என்று கேட்டு அடுத்த இருநூறு ஆண்டுகள் பெண்கள் போராட வேண்டியிருந்தது.

ஆனால் சுதந்திரமும், சமத்துவமும் மறுக்கப்பட்டவர்கள் பெண்கள் மட்டுமல்லர். ஆப்பிரிக்காவிலிருந்து பெரும் எண்ணிக்கையில் அமெரிக்க கண்டங்களுக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட கறுப்பின மக்கள் வியர்வையும், ரத்தமும் சிந்தி தோண்டிய சுரங்கங்களும், விளைவித்த தோட்டப் பயிர்களும், உருவாக்கிய கட்டுமானங்களும்தான் வெள்ளை ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் சுதந்திர சிந்தனையை வளர்த்தெடுக்க வழி வகுத்தது. அதாவது அடிமைகளை இரக்கமின்றி சுரண்டி வளர்ந்ததுதான் நவீன சுதந்திரவாத அரசியல் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பிரச்சினை அத்துடன் நிற்கவில்லை. பல்கிப் பெருகிய தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தப்பட்ட தொழிலாளர்களையும் ஆடு மாடுகள் போல நடத்தி, அவர்கள் உழைப்பையும் சுரண்டித்தான் நவீன நாகரிகம் வளர்ந்தது. இந்தியா போன்ற காலனீய நாடுகளிலோ மக்கள் ஒட்டுமொத்தமாக பலவகை வரிகளால் சுரண்டப் பட்டார்கள். தங்கள் வர்த்தகத்துக்குப் பணிய மறுத்த சீனாவுக்குள் இந்தியாவில் பயிர் செய்த ஓபியம் என்ற போதைப்பொருளைக் கொண்டு சென்று ஒட்டுமொத்த சீன சமூகத்தையும் போதைக்கு அடிமையாக்கியது பிரிட்டிஷ்காரர்களின் கிழக்கிந்திய கம்பெனி. இன்று கள்ளக்கடத்தல் மாஃபியா கும்பல்கள் செய்வதைத்தான் அன்று இங்கிலாந்து செய்தது. இப்படி உலகம் முழுவதும் ஐரோப்பிய அரசுகள் சுரண்டி கொழுத்தபோதுதான் ஐரோப்பாவில் அரசியல் தத்துவம் செழித்து வளர்ந்தது. மக்களின் உரிமைகளும், சமூக நீதியும் அரசியல் சிந்தனையின் அங்கமாக வளர்ந்தன. நவீன சுயம் அடிப்படையில் பிளவுண்டிருப்பதை எப்படித் தவிர்க்க முடியும்?

மக்களாட்சி, அடிப்படை உரிமைகள், சமத்துவ நோக்கு, எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே பணக்காரர்கள் ஏழைகளைச் சுரண்டுவதும், முதலாளிகள் தொழிலாளிகளைச் சுரண்டுவதும், வலுத்தவர் இளைத்தவர்களை ஒடுக்குவதும் எங்கெங்கும் நடந்தது. இதற்கு எதிராகத்தான் பொதுவுடமை சமூகம் என்ற ஒரு புரட்சிகர சிந்தனை உருவானது. அது தொழிலாளர் வர்க்கமே அரசதிகாரத்தைக் கைப்பற்றி அனைத்து சொத்துகளையும் பொதுவுடமையாக்கினால் உண்மையான சமத்துவம் கைகூடும் என்று எதிர்பார்த்தது. பொருளாதார வளங்களை பகிர்ந்தளிப்பதில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட பொதுவுடமை சமூகங்கள் வெற்றிபெற்றன. ஆனால், அரசியல் அதிகாரம் ஒரு புள்ளியில் குவிவதையும், சர்வாதிகாரப் போக்கு நிலவுவதையும் தவிர்க்க முடியவில்லை. அதனால் தன்னுடைய போலி சுதந்திரவாதம் எவ்வளவு உயர்ந்தது என்று முதலீட்டிய சமூகங்களால் கொக்கரிக்க முடிந்தது. உண்மையில் ஜெர்மானிய எழுத்தாளர் ஹென்ரிக் ப்யேல் கூறியது போல முழுமையான சிறகுகளுடன் கூண்டில் இருப்பதா (பொதுவுடமை சமூகம்), அல்லது பறக்கமுடியாமல் கத்திரிக்கப்பட்ட சிறகுகளுடன் வெட்ட வெளியில் இருப்பதா (முதலீட்டிய தனியுடமை சமூகம்) என்பதே பெரும்பாலான எளிய உழைக்கும் மனிதர்கள் சந்தித்த தேர்வாக இருந்தது.

அடிப்படைவாதங்களும், சனாதன மதவாதமும்

இப்படியாக வலதாகவும், இடதாகவும் பிளவுபட்ட நவீன அரசியல் இருவிதமான பிற்போக்கு எதிர்வினைகளை உருவாக்கியது. ஒருபுறம் தங்கள் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதே என்பதால் ஆணாதிக்க சனாதன சக்திகள் அடிப்படைவாத சிந்தனையை ஊக்குவித்தன. சனாதன மதவாதத்தைப் பின்பற்ற விரும்பின. மற்றொருபுறம் தங்கள் அரசியல் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் வெறுப்புற்ற ஒடுக்கப்பட்ட மக்களும் அடிப்படைவாத அணிசேர்க்கையில் அதிகாரத்தைப் பெறலாம் என எண்ணத்தலைபட்டார்கள். இந்தப் பிற்போக்குவாத அணிசேர்க்கையில்தான் அரசியல்ரீதியாக மத அடையாளங்கள் இயங்கத் தொடங்குகின்றன. இது ஏதோ இஸ்லாமுக்கு மட்டும் உரிய பிரச்சினையில்லை.

அமெரிக்காவில் அடிப்படைவாத கிறிஸ்துவர்கள் பேசுவதெல்லாம் கேட்டால் பயங்கரமாக இருக்கும். அமெரிக்காவின் ஆழ்மனதில் நிறவெறி இன்னம் கொழுந்துவிட்டு எரிவதைத்தான் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக செனட் கூட்டத்தில் புகுந்தவர்களின் செயல்கள் நமக்கு உணர்த்தின. இந்தியாவிலோ கேட்கவே தேவையில்லை. ஒரு நூறாண்டு காலம் நவீன அரசியல் உணர்வின் எழுச்சியில் சற்றே பதுங்கியிருந்த பார்ப்பனீய சனாதனம் அரசியல் இந்துத்துவத்தின் எழுச்சியில் மீண்டும் பகிரங்கமாக தன் ஆணாதிக்க, ஜாதீய முகத்தை வெளிக்காட்ட தொடங்கியுள்ளது. உலக அளவிலான இஸ்லாமிய வெறுப்பில் குளிர் காயும் இந்த இந்துத்துவர்களுக்கும் தாலிபானுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இவர்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் பெண்களை அடுப்படியை விட்டு வரக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்க தயங்க மாட்டார்கள் (உழைக்கும் வர்க்க பெண்களை மட்டும் சுரண்டுவதற்காக அனுமதிப்பார்கள்). சபரிமலைக்குப் பெண்கள் போகலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியதும் இவர்கள் உமிழ்ந்த வெறுப்பு எந்த விதத்திலும் தாலிபானுக்கு குறைந்ததல்ல. அதேபோல அனைத்து ஜாதியினரும், பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற முன்னெடுப்பும் இவர்களைக் கொதிப்படையச் செய்கிறது. ஆணவக் கொலைகளும், ஜாதீய வன்கொடுமைகளும் சமூகத்தின் வேர்மட்டத்தில் புரையோடியுள்ளன. தாலிபானை குறித்து பேசும்போது நாம் இவற்றை மறந்துவிடக் கூடாது.

முதலீட்டிய சுதந்திரவாதமும், மொத்தத்துவ பொதுவுடமை சிந்தனையும் தங்கள் போதாமைகளை மறைத்துக்கொண்டு ஒன்றையொன்று அழிக்க முற்பட்டதில்தான் ஒட்டுமொத்தமாக நவீன அரசியல் சிந்தனையின் வளர்ச்சி தேக்கமுற்று சனாதன மீட்புவாதமும், அடிப்படைவாதமும், மத அடையாள அரசியலும் எழுச்சி பெருகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான அரசியல் முதிர்ச்சியும், சமூக அறமும் வளராவிட்டால் உலகெங்கும் பல்வேறு வடிவங்களில் தாலிபான் தோன்றவே செய்யும். முதலீட்டிய சமூக தந்த கோபுரங்களில் அமர்ந்து இஸ்லாமிய வெறுப்பை பேணுவதால் நாம் உலகைக் காப்பாற்ற முடியாது.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

.

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

திங்கள் 30 ஆக 2021