மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஆக 2021

விஜயகாந்த் துபாய் பயணம்!

விஜயகாந்த் துபாய் பயணம்!

தேமுதிக நிறுவன தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் இன்று (ஆகஸ்டு30) காலை தனது மருத்துவ சிகிச்சைக்காக துபாய் புறப்பட்டுச் சென்றார்.

கடந்த ஆகஸ்டு 25 அன்று விஜயகாந்தின் 69 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அன்று தன்னை நேரில் சந்திக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வேண்டுகோள் வைத்திருந்தார் விஜயகாந்த். அதில், “ 2005 ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை “வறுமை ஒழிப்பு தினமாக” கடைப்பிடித்து வருகிறோம். இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறோம்.

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போது தான் குறைந்து வரும் நிலையில், பெருங்கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே அனைவரின் நலன் கருதி எனது பிறந்தநாள் அன்று தொண்டர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம். கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அவரவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்களால் இயன்ற உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து பிறந்தநாளை கொண்டாடுங்கள். மேலும் உடல்நல பரிசோதனைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படியே இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு விமானத்தில் புறப்பட்டார் விஜயகாந்த்.

சில ஆண்டுகளுக்கு முன் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்ட விஜயகாந்த், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டார். ஏற்கெனவே சிங்கப்பூர் போய் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அந்த சமயத்தில் சிங்கப்பூர் மருத்துவர்கள், கிட்னியை மாற்ற தேவை இல்லை என மருந்து மட்டும் கொடுத்தார்கள். அப்போது, இதயத்தில் உள்ள பிரச்சினைக்காக ஆஞ்சியோ பரிசோதனை நடந்தது. கிட்னி பிரச்சினைக்காக விஜயகாந்த் மருந்து எடுத்துக் கொண்டாலும் அது சரியாகவில்லை. சென்னையில் பாஜக முன்னாள் தமிழக தலைவரும் தற்போதைய தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசையின் கணவர், டாக்டர் சௌந்தர்ராஜன் தான் விஜயகாந்துக்கு சிறுநீரக சிகிச்சை செய்து வந்தார். கிட்னி மாற்றியே ஆக வேண்டியது கட்டாயம் என அவர்தான் விஜயகாந்துக்கு அட்வைஸ் கொடுத்தார். விஜயகாந்துக்கு கிட்னி பிரச்னை இருப்பது தெரிந்து அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனையை அவருக்கு பரிந்துரை செய்தவர் ரஜினி.

தமிழ்நாட்டில் சிறுசீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டங்கள் கெடுபிடியாக உள்ளதால் சிகிச்சைக்கு தாமதம் ஆகும் என்பதால் அவரது நண்பரும் நடிகருமான ரஜினிகாந்தின் அறிவுரையின் பேரில் அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர் விஜயகாந்தின் குடும்பத்தினர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு துவக்கத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த், பரிசோதனைகள் முடிந்து திரும்பி வந்தார். பின் மீண்டும் 2018 டிசம்பர் 18 ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா சென்றார். தொடர்ந்து 2019 ஜனவரி 8 ஆம் தேதி விஜயகாந்துக்கு அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதன் பின் விஜயகாந்த் பெரும்பாலும் ஓய்வில்தான் இருந்து வருகிறார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் தைராய்டு உள்ளிட்ட பிரச்சினைகளால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் விஜயகாந்த் அரசியல் பணிகளில் இருந்து பெரும்பாலும் ஓய்விலேயே இருக்கிறார்.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகான சோதனைகளுக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல வேண்டிய நிலையில், அமெரிக்காவில் கொரோனா அதிகமாக இருப்பதால் இன்று துபாய்க்கு சென்றுள்ளார் விஜயகாந்த். அங்கே விஜயகாந்துக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார்கள். விஜயகாந்தோடு அவரது இளைய மகன் சண்முக பாண்டியன், உதவியாளர்கள் ஆகியோர் சென்றுள்ளார்கள்.

விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே பேச முடியாமல் அவதிப்படுகிறார். அவருக்கு பேச்சுப் பயிற்சி உள்ளிட்ட சில சிகிச்சைகளும் துபாயில் மேற்கொள்ளப்படும் என்கிறார்கள் தேமுதிக புள்ளிகள்.

-வேந்தன்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

திங்கள் 30 ஆக 2021