மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீடு: கமல் வலியுறுத்தல்!

மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீடு: கமல் வலியுறுத்தல்!

மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த கோரிக்கை மீதான விவாதத்தின் போது மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3,000/- கடுமையான மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5,000/- உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் இது நடைமுறைக்கு வரவேண்டும்.

அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தனியார் வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.

பார்வைக் குறைபாடு உடையவர்களுக்குக் கல்வி கற்கத் தஞ்சாவூர், திருச்சி, சென்னை போன்ற மாவட்டங்களில் உயர்நிலை, மேல்நிலை என சுமார் 10 சிறப்புப் பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இவர்களின் கல்வி தடைப்படாமல் இருக்க மாவட்டங்கள் தோறும் சிறப்புப் பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும்.

அரசு அலுவலகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் படியான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் பயணம் செய்யும் உதவியாளர்களும் அரசின் சாதாரணப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற சலுகையானது, நகரப்பேருந்துகளில் மட்டுமல்லாது அனைத்துப் பேருந்துகளுக்கும் விரிவாக்கப்படவேண்டும்.

தொழில்முனைவோராக விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உதவி எண் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட வேண்டும்.

கடுமையான மாற்றுத்திறனாளிகளின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவும் வகையில் முதல்வர் மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்பட வேண்டும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகக் கொள்கைகளை உருவாக்கவும். செயல்படுத்தவும் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது, ஸ்மார்ட் கார்டு வழங்குவது, மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்குவது, அரசு வேலைவாய்ப்புகளில் உள்ள இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவது ஆகியவற்றை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ன் படி மாற்றுத் திறனாளிகளுக்கு உரியவற்றைச் செய்து கொடுக்க ஆவன செய்யும்படி தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

ஞாயிறு 29 ஆக 2021