மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

மீண்டும் ராகவன்? பாஜக சலசலப்பு!

மீண்டும் ராகவன்? பாஜக சலசலப்பு!

தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன், கடந்த ஆகஸ்டு 24 அன்று காலை 7.30க்கு அவரைப் பற்றி வெளியான ஆபாச பாலியல் வீடியோவைத் தொடர்ந்து, அன்று பகல் 11.30 மணிக்கு தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

யூ ட்யூபரான மதன் ரவிச்சந்திரன் என்பவர் தனது யு ட்யூப் பக்கத்தில் வெளியிட்ட அந்த வீடியோ பாஜகவுக்குள் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.அண்ணாமலையின் ஒப்புதல் பெற்றுத்தான் ராகவனின் வீடியோ வெளியிடப்பட்டதாக மதன் தெரிவித்திருந்தது சர்ச்சையையும் கிளப்பியது.

இதுகுறித்து அன்றே விளக்க அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ’கேடி.ராகவனின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டேன். இந்தப் பிரச்சினையை சந்தித்து சட்ட ரீதியாக தன்னை நிரூபிப்பார்’என்று கூறியிருந்தார். மறுநாள் ஆகஸ்டு 25 ஆம் தேதி மதன் ரவிச்சந்திரனையும், அவரது குழுவில் இடம்பெற்றிருந்த வெண்பாவையும் பாஜகவில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், “தவறு செய்தவரை நீக்காமல் அதை சுட்டிக் காட்டியவர்களை நீக்கலாமா?” என்று சில சலசலப்புகளும் பாஜகவுக்குள் எழுந்தன.

பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததாக கே.டி.ராகவன் அறிவித்து, அதை ஏற்றுக் கொள்வதாக அண்ணாமலை அறிவித்தபோதும் ராகவனின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் இன்னும் பாஜகவின் பொதுச் செயலாளர் என்றே இருக்கிறது.

மேலும், 24 ஆம் தேதி தன்னைப் பற்றிய சர்ச்சை வெளியானதற்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்ட ராகவன் அதன் பின் அமைதியாகிவிட்டார். இரு நாட்கள் கழித்து ஆகஸ்டு 27 ஆம் தேதி இல. கணேசன் மணிப்பூர் ஆளுநராக பதவியேற்ற பொழுது, “ மணிப்பூரில் நம் மரியாதைக்குரிய தலைவர் திரு .இல. கணேசன் அவர்கள் மாநில ஆளுநராக வந்தடைந்தார்....இறைவனுக்கு நன்றி”என்று ஃபேஸ்புக், ட்விட்டரில் பதிவிட்டார். இந்தப் பதிவுக்கே ராகவனை கண்டித்தும் வாழ்த்தியும் ஏராளமானோர் கருத்துகளை இட்டனர்.

ஆனாலும் சற்றும் தளராத ராகவன் மீண்டும் சமூக தளங்களில் இயங்கத் தொடங்கிவிட்டார். ஆகஸ்டு 28ஆம் தேதி, “ஓரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தி மோடி அரசு சாதனை” என்று பதிவிட்ட ராகவன், இன்று பாரா ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பவினா பென் பட்டேலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று (ஆகஸ்டு 29) தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியின் மன்கி பாத் பற்றிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ட்விட்டை ரீ ட்விட் செய்துள்ளார்.

நிர்மலா சீதாராமனின் தமிழக முகமாக பாஜகவுக்குள் பேசப்பட்டு வந்த கே.டி.ராகவன் தன் மீதான பாலியல் சர்ச்சைக்குப் பிறகு சமூக தளங்களில் மெல்ல மெல்ல மீண்டு வந்து இன்று நிர்மலா சீதாராமனின் ட்விட்டை ரீ ட்விட் செய்தது பாஜகவுக்குள் பேசுபொருளாகியிருக்கிறது.

ராகவன் இந்த பாலியல் சர்ச்சையில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வருவார் என்றும், அதற்கு பாஜகவில் சிலரே உதவியாக இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். கே.டி.ராகவனுக்கு நெருக்கமான பாஜகவினர் சிலர், “அந்த வீடியோவில் பல சந்தேகங்கள் உள்ளன. பூஜையறை என்று பலராலும் மிகைப்படுத்தப்பட்ட அந்த அறை அவரது ஹால் பகுதிதான். இது போன்ற பல ஜோடிப்புகள் அந்த வீடியோவில் இருக்கின்றன. ராகவனுக்கு டெல்லியில் வலுவான லாபி இருக்கிறது. அதன் மூலம் மீண்டும் பொதுச் செயலாளர் பதவியைப் பிடித்துவிடுவார்” என்று அடித்துச் சொல்கிறார்கள்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 29 ஆக 2021