மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

பத்திரிகை என்னும் கனகம்பீரம் !

பத்திரிகை என்னும் கனகம்பீரம் !

- ஸ்ரீராம் சர்மா

இந்தியாவின் முதல் பத்திரிக்கை பதினெட்டாம் நூற்றாண்டில் எழுந்தது !

கல்கத்தா மண்ணில் ஜேம்ஸ் அகஸ்டஸ் என்பார் முதல் பத்திரிக்கையை தோற்றுவித்த ஆண்டு 1780. அது, மிகச்சரியாக மருதிருவரின் துணையோடு சிவகங்கை சமூகத்தை மீட்டெடுத்த வேலுநாச்சியாரின் ஆட்சிக் காலம். இயற்கையாய் அமைந்து கண்சிமிட்டும் காலப் பொருத்தம் !

அதன்பின், பத்தொன்பதாம் நூற்றாண்டில் எல்லையில் எழுந்து விடுதலை வேட்கையில் குமுறிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் தங்கள் கூக்குரலை எதிரொலிக்கும் கூடாரங்களைத் தேடி அலையாய் அலைந்தார்கள்.

அத்துனை எழுத்துக்களையும் தாங்கிச் சுமக்கும் கருவறைகளாகத் தோன்றி விளங்கின இந்த மண்ணின் பத்திரிக்கைகள்! அதனோடு தங்கள் வாழ்வைப் பொருத்திக் கொண்டவர்கள் பத்திரிக்கையாளர்கள் ஆனார்கள்.

பத்திரிக்கை என்பதும் பத்திரிக்கையாளர் என்பதும் வெறும் வார்த்தைகளல்ல. தீராத உணர்வை தன்னுள்ளடக்கிக்கொண்டதோர் பெரும் வாழ்வு அது !

சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, கர்மயோகி, சூரியோதயம், தர்மம், பாலபாரதா, போன்ற பத்திரிக்கைகளில் வறுமை வாழ்வை புறந்தள்ளிப் பணியாற்றியவர் பாரதியார் எனினும் தன்னை ஓர் பத்திரிக்கையாளன் என எங்கும் அவர் இறுமாந்து கொண்டதில்லை. எமக்குத் தொழில் கவிதை என்றார் !

போலவே, தனது பதின் வயதில் முரசொலி என்னும் பத்திரிக்கையை துவங்கி அதை இன்று வரையிலும் உலகார்ந்த தமிழுலகின் உயர் சங்கநாதமாக நிகரற்று நின்று ஒளிவீசச் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவரும்கூட எந்த நிலையிலும் தன்னை ஓர் பத்திரிக்கையாளன் என முன்னிருத்தி புகழ் கேட்டதில்லை.

ஆம், சகல வல்லமை படைத்தவர்களெனினும் பத்திரிக்கையாளர்கள் என்னும் அடையாளம் தனித்த அர்ப்பணிப்புக்குரியது எனக்கருதிதான் தங்களை தனித்து வைத்துக் கொண்டும் - பத்திரிக்கையாளர்களை உயர்த்தி வாழ்த்தியும் மறைந்தார்கள்.

அப்படியான தனித்துவப் பெரியோர்கள் நிறைந்து வாழ்ந்த இந்த உயர்ந்த சமூகத்தில் பத்திரிக்கையாளர்கள் என்னும் பெரும் பதம் இன்று குன்றிச் சீரழிந்து வருவது கவலை அளிக்கிறது.

பரதேசி – சம்சாரி !

எழுத்தாளர்களும் பத்திரிக்கையாளர்களும் ஒன்றா என்றால் அல்ல ! எழுத்தாளன் என்பவன் பரதேசி ! பத்திரிக்கையாளன் என்பவன் சம்சாரி !

எழுத்தாளனுக்கு தன் சித்தாந்தமே பிரதானம். அவன், சமூக எல்லை கடந்து தன்னியல்பில் சுற்றுவான்.

ஆனால், பத்திரிக்கையாளனுக்கு பத்திரிக்கை தர்மம் தவிர வேறு எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள விரும்பவும் மாட்டான். சமூகப் பிரக்ஞை என்பது அவனுக்கான எழுதப்படாத விதி !

ஆம், பத்திரிக்கையாளன் என்பது கட்டுரைக்காரன் என்பதைக் காட்டிலும் உயர்ந்ததொரு வாழ்வு !

பத்திரிக்கையாளர் என்பது வாழ்வைப் பணயம் வைத்துப் பெறக் கூடியதோர் உயர்ந்த பட்டம் ! அதைக் கண்டவரெல்லாம் சூட்டிக் கொண்டுவிட முடியாது. அதற்கென்று பரந்துபட்டதோர் உழைப்பும், வாழ்க்கை அர்ப்பணிப்பும், தியாகமும், தெரிவும் தேவைப்படுகிறது.

தாங்கள் சுவீகரித்துக் கொண்ட பத்திரிக்கை உலகை ஒட்டுமொத்த வாழ்நாள் வெளிப்பாடாகக் கொண்டு அதனை நோக்கி ஓயாது உழன்று, சுழன்று, சர்வபரி தியாகங்களை செய்பவர்களே பத்திரிக்கையாளர்கள் என்னும் அந்தஸ்தை கொண்டாக முடியும்.

குறித்துக் கொள்ளுங்கள், பள்ளி, கல்லூரி கடந்த படிப்பாளன் என்றாலும் கூட ஒருவன் பத்திரிக்கையாளனாக பரிணாமம் பெற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் பத்தாண்டுக்காலப் பயிற்சி அவசியப்படும் !

பத்திரிக்கையாளர் என்னும் தகவைக் கொள்ள விரும்புபவர்கள் தங்களை மெல்ல மெல்ல தயார்படுத்திக் கொண்டாக வேண்டும். அந்த நோக்கில்தான் விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டம் அன்று உண்டாக்கப்பட்டது.

முழுமையான பத்திரிக்கையாளனாக தங்களை அன்று நிலை நிறுத்திக் கொண்ட மறைந்த திருப்பதிசாமி முதல் பற்பல சகோதர நண்பர்கள் இன்றும் எனக்கு உண்டு.

அவர்களுக்கு கால நேரம் கிடையாது. நாள் கிழமை பார்க்க முடியாது. சதா சர்வ காலமும் செய்தி குறித்த நினைப்பிலேயே பொழுதாண்டு கொண்டிருப்பார்கள். குடும்பம் மறந்து , கொண்டாட்டம் மறந்து, உடல் நலம் மறந்து, ஊணுறக்கம் மறந்து கவர் ஸ்டோரிகளின் பின்னால் கவலை மறந்து சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

நல்ல உடைகளை வாங்கவோ, அதை அணியவோ அவர்களுக்கு அவகாசம் கிடைக்காது. செய்தியாகப்பட்டது காட்டிலும் கிடைக்கும். கலவர பூமியிலும் கிடைக்கும். பற்றி எரியும் சேரிகளுக்குள்ளும் போக வைக்கும். பகட்டான ரிசார்ட்டுகளுக்குள்ளும் வரவழைக்கும். ஓடுவார்கள். தேடுவார்கள். அவர்களுக்கு அனைத்தும் ஒன்றுதான். அவர்களுக்கான ஒரே குறி செய்தி !

வீரப்பன் வாழ்ந்த கொடுங்காட்டில் உயிர்பணயம் வைத்து செய்தி சேகரித்து, இரு மாநில போலீஸிடம் சிக்கிச் சிறை கண்டு, வழக்காடி வாழ்க்கையைத் தொலைத்த பத்திரிக்கையாளர் சிவசுப்பிரமணியனின் இன்றைய வாக்குமூலங்கள் மனம் பதறச் செய்கின்றன.

அப்படியாக பத்திரிக்கை உலகே நித்திய வாழ்வு எனக் கொண்டவர்களின் பெருமையை களவாட எண்ணுவது கேவலம். சொல்லப்போனால் குற்றம் !

இன்றைய அவல நிலை !

தொழில்நுட்ப மைதுனங்களால் கிளர்ந்துவிட்ட சோஷியல் மீடியாக்கள் இன்று தங்களது அவசர ஆர்பாட்டக் குரல் கொண்டு தங்களையும் பத்திரிக்கையாளர்கள் என ஏற்றுக் கொண்டாக வேண்டும் என அடம் பிடிக்கின்றன !

‘லகர’, ‘ளகரம்’ வராது ! மொழியின் லாவகம் தெரியாது ! சமூக அக்கறை பற்றிய புரிதலையும் அதற்கான பயிற்சியையும் கொள்ளும் பொறுமையும் கிடையாது. ஆனால், எங்களை பத்திரிக்கையாளர்கள் என அங்கீகரித்தே ஆக வேண்டும் என்கிறது இன்றைய அவசரத் தலைமுறை.

இதன் ஆரம்பம் புற்றீசலாய்ப் பெருகிய சேனல்கள். அதில் மைக் பிடித்தவர்களெல்லாம் பத்திரிக்கைக்காரர்கள் ஆனார்கள். நான்கு பேரை வைத்து நாட்டு நடப்பை விசாரித்தவர்களெல்லாம் விற்பன்னர்கள் ஆனார்கள். அந்தப் பொழுது போக்கு அரங்கத்தில் கருத்து சொன்ன சிலருக்கு முகாந்திரமே இல்லாமல் மூத்த பத்திரிக்கையாளர் பட்டம் கொடுத்தார்கள்.

இன்றைய தலைமுறை ஆழ உழைக்க மனமின்றி அவசரப்படுகின்றது. ப்ளாக்கர்ஸ் என்றும் யூ ட்யூபர் என்றும் பெயர் சொல்லிக் கொண்டு எந்தவிதமான முன் அனுபவமுமின்றி சில்லறைக் கேமிராக்களைக் கொண்டு போய் நிறுத்தி பத்திரிக்கையாளர்களின் வரிசையில் தங்களுக்கும் இடம் கேட்கின்றது.

பேட்டி கொடுக்கும் விளம்பர விரும்பிகள் அப்படியான வரிசைக்கும் சலாம் போட்டு வைக்க அந்தக் கருமத்தையே அங்கீகாரமாகக் கொண்டு நம்பி நலமிழக்கிறது விவரமற்ற இன்றைய தலைமுறை.

பத்திரிக்கையாளர்கள் என்பவர்களுக்குண்டான நீண்ட, நெடிய பயிற்சி முறைகளைக் கொஞ்சமும் கொள்ளாத, தான்தோன்றித்தனமான இந்த சோஷியல் மீடீயாக்களின் சிறுபிள்ளைத்தனம் அவசர அங்கீகாரம் நோக்கி ஆங்காரம் கொள்கிறது

அந்த ஆவலாட்டங்களின் கேவலங்கள்தான் கமலாலயத்தை சந்திக்கிழுத்த ரணகள ஆட்டங்கள். அந்த ஆபாசத்தை விரித்துப் பேச நம்மால் ஆகாது

பத்திரிக்கை உலகம் மற்றும் பத்திரிக்கையாள சமூகம் குறித்த தனித்துவம் மட்டுமே இந்தக் கட்டுரையின் கவலை !

ஆம், ஜனநாயகத்தின் நான்காம் தூண் இன்று நலமிழந்து நிற்கின்றது. அதனை சீர்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

பத்திரிக்கை என்பது கடுந்தவம். பத்திரிக்கையாளர்கள் அதற்கான யாக குண்டம். எத்தனை நெய் ஊறினாலும் மேல் நோக்கியே செல்வது குண்டத் தீயின் குணம்.

சின்னக்குத்தூசி போன்ற ஜாம்பவான்கள் பத்திரிக்கையாளராக வலம்வந்த இந்த மண்ணில் அதில் கால் சதவிகிதம் கூட எட்டாமல் காலர் பட்டையில் அமெச்சூர் அட்டையைத் தொங்கவிட்டுக் கொண்டு திரிய நாணம் கொள்ள வேண்டும்.

குறித்துக் கொள்ளுங்கள்… பத்திரிகைகள், ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்பது அதற்குண்டான இறையாண்மையை காப்பாற்றி வைக்கும் வரையில்தான் ! அதை வரையறுத்து வைக்காமல் இப்படியாக நீர்த்துப் போக விட்டுக் கொண்டேயிருந்தால் ஒரு கட்டத்தில் பத்திரிக்கைத் தூணை ஜனநாயக மண்டபம் மறுத்துவிடக் கூடும் !

தியாகம் செய்து வாழ்ந்த நிஜமானப் பத்திரிக்கையாளர்களுக்கும் நியாயம் கிடைக்காமல் போய்விடும் ! பத்திரிக்கையாளர்களுக்கான சங்கங்கள் ஒன்றுபட்டு இதில் தீர்வு காண முயல்வது அவசியம் ! அவசரம் !

வாழிய பத்திரிக்கை உலகின் கனகம்பீரம் !

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

சனி 28 ஆக 2021