மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

ஆப்கனில் அமெரிக்காவின் அடுத்த ஆட்டம்: ஐஎஸ் கே மீது தாக்குதல்!

ஆப்கனில் அமெரிக்காவின் அடுத்த ஆட்டம்:  ஐஎஸ் கே மீது தாக்குதல்!

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செப்டம்பர் 11க்குள் வெளியேறும் என்று ஒப்பந்தம் இட்டுக் கொண்ட நிலையில் ஆகஸ்டு 15 ஆம் தேதி ஆப்கான் முழுதையும் தலிபான்கள் கைப்பற்றினர்.

இந்நிலையில் ஆகஸ்டு 26 ஆம் தேதி காபூல் விமான நிலைய வாயிலிலும், அருகேயும் இரு தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் அமெரிக்க படையினர், தலிபான் படையினர், பொதுமக்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வந்தன. அந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் கே என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், இன்று (ஆகஸ்டு 28) ஐஎஸ்.கே பயங்கரவாத குழுவினர் மீது ஆப்கன் -பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க வான் வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் காபூல் தற்கொலைத் தாக்குதலைத் திட்டமிட்ட பயங்கரவாதி கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

காபூலுக்கு கிழக்கே மற்றும் பாகிஸ்தானின் எல்லையான நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலைக்குள்ளான நேரத்தில், இரவில் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்காவின் மத்திய ஆசியாவுக்கான ராணுவக் கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

காபூல் விமான நிலைய தாக்குதலில் அமெரிக்க படையினரும், பொதுமக்களும் உயிரிழந்தது அமெரிக்க உள்நாட்டு அரசியலில் அதிபர் ஜோ பிடெனுக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுத்தது. அந்தத் தாக்குதலை நடத்திய ஐஎஸ் கே பயங்கரவாத குழுவினரை தேடிச் சென்று வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் அன்றே எச்சரித்தார்.

இந்த நிலையில் மத்திய கிழக்கில் இருந்து புறப்பட்ட ஆளில்லா ட்ரோன் ஐ.எஸ். கூட்டாளியுடன் காருக்குள் இருந்த பயங்கரவாதியைத் தாக்கியது. இதில் இருவரும் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஜலாலாபாத்தில் வசிக்கும் முதியவரான மாலிக் அடிப், “வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீரென வான் வழியாக குண்டுகள் வெடித்தன, இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காயமடைந்திருக்கிறார்கள். சம்பவத்தை நேரில் பார்த்த எங்களை தலிபான்கள் நேரில் அழைத்து விசாரித்தனர்” என்று ராய்ட்டர்ஸிடம் சொல்லியிருக்கிறார். ”இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் உண்டு. ஆனால் அவர்கள் யார் யார் என்ற தகவல்கள் என்னிடம் இல்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, காபூல் தாக்குதல் தொடர்பாக சில ஐ.எஸ்.கே.உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தலிபான்களும் தெரிவித்துள்ளனர்.

தலிபான்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஆப்கானிஸ்தானில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிக் கொண்டிருக்கும் அமெரிக்க ராணுவம், ஐ.எஸ்.கே. குழுவினரை பழிவாங்குவதற்காக மீண்டும் ஆப்கானிஸ்தானில் தாக்குதலைத் தொடர்வார்கள் என்கிறார்கள் மத்திய ஆசிய அரசியல் பார்வையாளர்கள்.

-வேந்தன்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

சனி 28 ஆக 2021