மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

தலைவர் மாற்றமா? தமிழ்நாடு காங்கிரசில் என்ன நடக்கிறது?

தலைவர் மாற்றமா? தமிழ்நாடு காங்கிரசில் என்ன நடக்கிறது?

தமிழ்நாடு காங்கிரஸில் தலைவர் மாற்றப்படுகிறார் என்று அவ்வப்போது பூச்சாண்டி கிளம்புவதும் பிறகு அது புஸ்வாணம் ஆகுவதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக மீண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் என்ற செய்திக்கு லேசான உயிர் கொடுக்கப்பட்டு ஆங்காங்கே காங்கிரஸ் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது சில நாட்களாகவே கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி காங்கிரஸ் தமிழக தலைவராக நியமிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல்கள் அலையடிக்க ஆரம்பித்துள்ளன.

என்ன நடக்கிறது காங்கிரஸில்?

தமிழக காங்கிரஸ் தலைவராக 2019 பிப்ரவரி 2 ஆம் தேதி முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினரான கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.எஸ். அழகிரியை நியமித்தார் ராகுல் காந்தி. அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைய இருந்த நிலையில்தான் அவரால் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளையே நியமிக்க முடிந்தது. அதிலும் கோஷ்டித் தலைவர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.

முகுல் வாஸ்னிக் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருந்த வரை நிர்வாகிகள் பட்டியலில் மாற்றம் செய்ய முடியாதவராக இருந்தார் அழகிரி. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்ட பிறகே, ஓரிரு முறை பெங்களூருக்கு படையெடுத்த கே.எஸ். அழகிரி அவரை சந்தித்து மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தனது ஆதரவாக இருக்கும் பட்சத்தில்தான் தன்னால் இன்னும் வேகமாக செயல்பட முடியும் என்றும் அழுத்தம் கொடுத்தார். அதையடுத்துதான் 2019 இல் அழகிரி டெல்லியில் கொடுத்த பட்டியல் 2021 ஜனவரியில் ஓகே செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

மாவட்ட தலைவர்கள் கணிசமானோர் அழகிரியால் நியமிக்கப்பட்டிருந்ததாலும், மாநில பொதுச் செயலாளர் பட்டியலில் திருச்சி எம்பி திருநாவுக்கரசரின் மகன் எஸ். டி. ராமச் சந்திரன், தங்கபாலுவின் மகன் கார்த்தி தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா உள்ளிட்ட வாரிசுகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டனர். ஆனால் நியமிக்கப்பட்டது முதல் அவர்கள் களத்தில் இறங்கியதாகவோ தீவிரமாக செயல்பட்டதாகவோ தெரியவில்லை. இதுவும் டெல்லி மேலிடத்துக்குத் தெரியாமல் இல்லை.

இந்த நிலையில்தான் தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே எஸ் அழகிரி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஒரு பெண் தலைவராக நியமிக்கப்படுவார் என்று கடந்த ஜூலை மாதத்திலிருந்து காங்கிரசுக்குள் சில குரல்கள் ஒலித்து வருகின்றன. பெண் தலைவர் என்றால் அது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயதாரணியா அல்லது கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினரான ஜோதிமணியா என்றெல்லாம் விவாதங்கள் காங்கிரசுக்குள் தொடங்கின.

தத்தமது ஆதரவாளர்கள் வட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்டவர்களே இதுபோன்ற கருத்துருவாக்கங்கள் செய்வதற்கு சாத்தியங்கள் இருப்பினும் காங்கிரசுக்குள் தற்போது என்ன நடக்கிறது என்று விசாரித்தோம். அழகிரிக்கு ஆதரவு எதிர்ப்பு என இரு தரப்பிலும் விசாரித்தோம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கேட்ட அளவுக்கு தொகுதிகளை திமுக கொடுக்கவில்லை என்ற அதிருப்தி கே எஸ் அழகிரி மீது தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை ராகுல் காந்திக்கே இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகளில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸின் ஸ்ட்ரைக்கிங் ரேட் அதிகமானதால் அழகிரி மீதான அதிருப்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

ஆனால் கோஷ்டித் தலைவர்கள் தங்களுக்கே உரிய டெல்லி தொடர்புகள் மூலம் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை மாற்றுவது என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிதம்பரத்தின் சீடராக இருந்த அழகிரி காங்கிரஸ் தலைவரான பிறகு சிதம்பரத்துடனான இடைவெளியை அதிகரித்துக் கொண்டார். அதேநேரம் தற்போது மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் தினேஷ் குண்டுராவ் அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆகிவிட்டார். அவசியம் ஏற்பட்டால் தினேஷ் குண்டுராவை பெங்களூருக்கு சென்று நேரில் சந்தித்து சில முக்கியமான விஷயங்களில் தனக்கான ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்கிறார்.

இந்த நிலையில் தற்போது தமிழக பாஜகவில் நடக்கும் குழப்பங்களை பயன்படுத்தி காங்கிரசுக்குள் மீன்பிடிக்கப் பார்க்கிறார் ஜோதிமணி என்ற ஒரு பேச்சும் எழுந்துள்ளது. பாஜகவின் பொதுச்செயலாளராக இருந்த கே டி ராகவன் ஆபாச பாலியல் வீடியோ சர்ச்சையில் சிக்கியதை அடுத்து இந்த பிரச்சனையை கையில் எடுத்தார் ஜோதிமணி.

’அதிமுக ஆட்சியில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பாஜகவினர் மீது அந்த ஆட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் இப்போது கேடி ராகவன் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்த ஜோதிமணி, பாஜகவுக்கு எதிராக காரசாரமான பேட்டியும் கொடுத்தார். ஆனால் ஜோதிமணியின் மனுவுக்கு தமிழக போலீஸ் தலைமையிடத்தில் இருந்து சாதகமான எதிர்வினைகள் ஏதும் வராத நிலையில், தற்போது மகளிர் காங்கிரஸ் தலைவராக இருக்கும் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணனும் ஜோதிமணியும் இணைந்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கிய பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினார்கள். இது எல்லாமே உணர்வுடனும் துடிப்புடனும் கூடிய போராட்டங்கள்தான் என்றாலும், தமிழகத்திலும் டெல்லியிலும் கவன ஈர்ப்புக்கான ஜோதிமணியின் உத்தியாகவும் இது கவனிக்கப்படுகிறது. இதையெல்லாம் வைத்து ராகுல் காந்தியோடு நேரடி தொடர்பில் இருக்கும் ஜோதிமணி எம்பி விரைவில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று ஒரு தகவலும் கிளம்பிவிட்டது

ஜோதிமணி கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தற்போதைய தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விரைவில் தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களையும் கரூரே கொடுக்கும் என்ற பேச்சும் கரூரில் இருக்கிறது,

இன்னொரு பக்கம் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் தலைவராக்க விரும்புகிறார் என்றும் அதற்காக அவர் சில முயற்சிகளை டெல்லியில் மேற்கொண்டு இருக்கிறார்.

டெல்லியில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பலர் தங்களுக்கு விருப்பமானதையும் தங்களுக்குத் தேவையானதையும் நடக்கப் போவதாக பரப்பிக் கொண்டிருப்பது சகஜம்தான்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியில் இடம் பெற்றுள்ள கிருஷ்ணகிரி எம்பியும் மூத்த காங்கிரஸ் தலைவருமான செல்லகுமாருக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது,

“தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்றால் அதில் சிதம்பரமும், செல்லகுமாரும்தான் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இருவரும்தான் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியில் இடம்பெற்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். செல்லகுமாரும் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான பட்டியலில் முக்கியமான இடத்தில் இருப்பவர்தான்.

அதேநேரம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பெரிய கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது டெல்லி தலைமை. அதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பத்துக்கு 9 இடங்கள், சட்டப்பேரவைத் தேர்தலில் 25 க்கு 18 இடங்கள் என்ற வகையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலும் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பெற திட்டமிட்டுள்ளது. அழகிரி தலைமையில் கோஷ்டி உணர்வு குறைந்திருக்கிறது என்றே தினேஷ் குண்டுராவ் டெல்லிக்கு ரிப்போர்ட் அளித்துள்ளார். எனவே தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றம் என்பது இங்கிருந்தே சிலர் கிளப்பிவிடுவதாகவே தெரிகிறது” என்கிறார்கள்.

அதேநேரம் அழகிரியைப் பற்றி வெளியாகும் பத்திரிகை செய்திகள், தேர்தல் பேரங்கள் போன்றவற்றைப் புகார்களாக்கி டெல்லிக்கு அனுப்பும் பணிகளும் அழகிரிக்கு எதிரானவர்களால் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

ஆனால் கே.எஸ். அழகிரி தமிழக மேலிடப் பொறுப்பாளரிடம், “என்னை குறைந்தது ஐந்து வருடங்களுக்கு தலைவராக இருக்க விடுங்கள். நான் என்று இல்லை, யாரை தலைவராக நியமித்தாலும் இதைத்தான் சொல்வேன். அப்போதுதான் கட்சியில் நீடித்த நிலையான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியும். ஒருவருடம், இருவருடம் என்று தலைவரை மாற்றிக் கொண்டே இருந்தால் கட்சியின் வளர்ச்சி கேள்விக்குறியாகும்” என்று சொல்லியிருக்கிறார் என்கிறார்கள் அழகிரியைச் சுற்றியுள்ளவர்கள். ஆனால் இதே கோரிக்கையைதான் திருநாவுக்கரசர் தலைவராக இருந்தபோதும் வலியுறுத்தி வந்தார் என்பதும் இங்கே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதாகிறது.

-ராகவேந்திரா ஆரா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

சனி 28 ஆக 2021