மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 28) தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஒன்றிய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநில விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் எட்டு மாதங்களாக டெல்லியில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் வரிசையில் 7ஆவது மாநிலமாகத் தமிழக சட்டப்பேரவையில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "வேளாண் தொழில் பெருகவும் விவசாயிகள் வாழ்வு செழிக்கவும், இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, தமிழக வரலாற்றில் முதன் முறையாக வேளாண்மைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஒன்றிய அரசு விவசாயிகள் நலனுக்கு எதிராகக் கொண்டு வந்த சட்டங்களான,

விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வாணிபம் சட்டம் 2020

விவசாயிகள் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த சட்டம் 2020

அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகிய மூன்றும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்பதால் அவை ஒன்றிய அரசினால் ரத்து செய்யப்பட வேண்டுமென இந்த சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது” என்று கூறினார்.

"தன்னிச்சையாக ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அதனால் தான் இந்த சட்டங்களை நிராகரிக்க வேண்டியுள்ளது. விவசாயிகள் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். நெற்றி வியர்வை சிந்தி உழைக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை” என்று குறிப்பிட்டார்.

மேலும் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார்.

இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கூறுகையில் ஒன்றிய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் சட்டங்கள். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். அதுபோன்று அதிமுகவும் வெளிநடப்பு செய்தது.

எனினும் அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ள பாமக மற்றும் காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட், உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.

இந்த தீர்மானம் கண் துடைப்பு நாடகம் என விமர்சித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழக விவசாயிகள் எவரும் இந்தச் சட்டங்களை எதிர்க்காதபோது, உண்மையில் மகிழ்ச்சியுடன் வரவேற்கும்போது, ​​தமிழக மக்களுக்கு இது அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என்று தெரியும்” என குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 28 ஆக 2021