மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஆக 2021

கடல் கடந்து வந்த தமிழர்களையும் காக்கும் அரசு : முதல்வர்!

கடல் கடந்து வந்த தமிழர்களையும் காக்கும் அரசு : முதல்வர்!

தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களையும் சலுகைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஆகஸ்ட் 27) விதி எண் 110-ன் கீழ் கடல் கடந்து வந்த இலங்கை தமிழ் மக்களின் கண்ணீரை துடைக்கக் கூடிய வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற தருணங்களில் எல்லாம் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியிலும் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டன.

இலங்கைத் தமிழர்களது முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். இதில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்டுவதற்கு, நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தவிர, ஆண்டுதோறும், இதுபோன்ற வசதிகளை செய்து தர ஏதுவாக, இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பொறியியல் படிப்பு பயிலுவதற்குத் தேர்ச்சிபெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு, அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். மேலும், வேளாண் / வேளாண் பொறியியல் பட்டப் படிப்பிலும் மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 மாணவர்களுக்கும், மேற்சொன்ன கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். அதுமட்டுமின்றி, முதுநிலைப் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம்வாழ் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ளும். இதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களில் ஆண்டொன்றுக்குத் தோராயமாக, 750 மாணவர்கள் அரசு மற்றும் பிற கல்லூரிகளில் கலை, அறிவியல் மற்றும் பட்டயம் உள்ளிட்ட தொழிற்படிப்புகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படக்கூடிய கல்வி உதவித்தொகை போதுமானதாக இல்லை என அறியப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பாலிடெக்னிக் படிப்பிற்கு 2,500 ரூபாய், இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு 3,000 ரூபாய், இளநிலை தொழில்சார்ந்த படிப்புகளுக்கு 5,000 ரூபாய் கல்வி உதவித்தொகையாக ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. இனி, இதை உயர்த்தி, பாலிடெக்னிக் படிப்பிற்கு 10 ஆயிரம் ரூபாய்; இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பிற்கு 12 ஆயிரம் ரூபாய்; இளநிலை தொழில்சார்ந்த படிப்புகளுக்கு 20 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம்வாழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ரூ.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம்களில் உள்ள 300 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக, ஒவ்வொரு சுயஉதவிக் குழுவுக்கும் தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 321 சுயஉதவிக் குழுக்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாயுடன், மேலும் 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக நடப்பு நிதி ஆண்டில் 6 கோடியே 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு, மாதந்தோறும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காகப் பணக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது, குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாயும், இதர பெரியவர்களுக்கு 750 ரூபாயும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணக்கொடை, கடந்த பத்தாண்டு காலமாக உயர்த்தப்படாத நிலையில், இனி குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், இதர பெரியவர்களுக்கு 1,000 ரூபாய் மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாய் என்று உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசிற்கு ஆண்டொன்றுக்குக் கூடுதலாக 21 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவாகும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும். இதற்காக அரசிற்கு ஒருமுறை 7 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். அதைத் தவிர, குடும்பத்திற்கு 5 எரிவாயு உருளைக்குத் தலா 400 ரூபாய் வீதம் மானியத் தொகை வழங்கப்படும். இதற்காக 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும். முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு இனி விலையில்லா அரிசி வழங்கப்படும். இதனின் செலவுத் தொகையான 19 லட்சம் ரூபாயையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ்மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலவச ஆடைகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவசப் போர்வைகளும் வழங்கக்கூடிய திட்டத்தில் ஒன்றிய அரசு நிர்ணயித்த விலையில் ஆடைகள் வாங்கி வழங்க இயலாத நிலையில், நடப்பு ஆண்டிற்கு பெறப்பட்ட விலைப்புள்ளிகளின் அடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு 1,790/- ரூபாயிலிருந்து, குடும்பம் ஒன்றுக்கு, 3,473/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக அரசிற்கு ஆண்டொன்றுக்கு 3 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள 250 ரூபாய் மதிப்பில் 8 வகையான சமையல் பாத்திரங்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக வழங்க இயலாத நிலையில், 1,296/- ரூபாய் மதிப்பில் சேலம் இந்திய உருக்காலை நிறுவனம் மூலம் உயர்த்தப்பட்ட வீதத்தில் பாத்திரங்கள் வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஒரு கோடியே 97 இலட்சம் ரூபாய் கூடுதலாக செலவினம் ஏற்படும்.

இதைத்தவிர, முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளிப்பதிவில் உள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகளை வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகாலத் தீர்வினைக் கண்டறிய ஏதுவாகவும், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுத் துறை செயலாளர், மறுவாழ்வுத் துறை இயக்குநர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுடைய பிரதிநிதி மற்றும் வெளிப்பதிவில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழு நிச்சயமாக விரைவில் அமைக்கப்படும்.

இங்குள்ள தமிழர்களை மட்டுமல்ல; கடல் கடந்து வாழக்கூடிய தமிழர்களையும் காக்கக்கூடிய அரசுதான் இந்த அரசு என்று கூறி முதல்வர் உரையை முடித்தார்.

இதுகுறித்து திமுக எம்.பி.கனிமொழி ட்விட்டரில், ”வாழ்விடமிழந்து, வாழ்விழந்து, நாடு இழந்து, தன் எதிர்காலம், தன் பிள்ளைகளின் எதிர்காலம் என்று எல்லாம் கேள்விக் குறியாக்கப்பட்ட நிலையில், முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் பரிதவித்த இலங்கை தமிழ் மக்களுக்கு எதிர்கால திட்டங்களையும், கௌரவமான வாழ்க்கையையும் அறிவித்திருக்கும் முதல்-அமைச்சர் அவர்களுக்கு நன்றி. கண்ணீர்க் கடலில் திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு" என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

வெள்ளி 27 ஆக 2021