மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஆக 2021

கொடநாடு வழக்கு: உயர் நீதிமன்ற தீர்ப்பு- எடப்பாடிக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

கொடநாடு வழக்கு: உயர் நீதிமன்ற தீர்ப்பு- எடப்பாடிக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தமிழக அரசு மேல் விசாரணை நடத்தத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்டு 27) தீர்ப்பளித்திருக்கிறது. இதன் மூலம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுவெளியில் வைத்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தத் தீர்ப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விளங்குகிறது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படும் ஜெ.வின் டிரைவர் கனகராஜ் உள்ளிட்ட சிலர் இந்த கொலை சம்பவத்துக்குப் பிறகு மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் இந்த வழக்கின் விசாரணையில் பல குறைபாடுகள் இருப்பதால் இதை மேல் விசாரணை செய்ய வேண்டும் என்று அனுமதி கோரி நீலகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆகஸ்டு 18 ஆம் தேதி திடீரென சட்டமன்றத்தில், “கொடநாடு கொலை வழக்கில் என்னை தொடர்புபடுத்த சதி நடக்கிறது” என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். பின் வெளிநடப்பு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த வழக்கில் மேல் விசாரணை தேவையில்லை. வழக்கை விரைவாக முடிக்கச் சொல்லி நீதிபதிகளே உத்தரவிட்டு அதன் பேரில் வழக்கு விரைவாக நடந்து குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இப்போது மேலும் விசாரணை நடப்பது தேவையற்றது” என்று பேசினார். இதையடுத்து இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தையும் அவர் சந்தித்தார்.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷயங்களையே கோரிக்கையாக வைத்து இவ்வழக்கில் சாட்சியாக இருக்கும் அனுபவ் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். “ சாட்சிகள் யாரிடமும் சொல்லாமல் குற்றம் சாட்டப்பட்ட சிலரிடம் சொல்லிவிட்டு மேல் விசாரணை நடந்து வருகிறது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில் இந்த வழக்கை மேல் விசாரணை செய்யக் கூடாது” என்று அவர் கோரிக்கை வைத்தார்.

இவ்வழக்கில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் மேல் விசாரணக்கான காரணங்களை விசாரணையின்போது முன் வைத்தனர்.

“இந்த வழக்கின் விசாரணையில் பல குறைபாடுகள் இருப்பதால் மேல் விசாரணை வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்ட சிலரே நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஒரு குற்ற வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் இந்த வழக்கில் மேல் விசாரணை தேவைப்படுகிறது. மேலும் இந்த மனுவை தாக்கல் செய்தவர் சாட்சி மட்டுமல்ல, குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு நெருக்கமாக இருப்பவர். மறுவிசாரணை தேவை என்று போலீஸ் தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனு நிராகரிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. மேலும் இதனால் காலதாமதம் ஆகாது. விசாரணை அறிக்கையை எட்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிடுவோம்” என்று வாதாடினார்கள்.

இந்த வழக்கு விசாரணை நடந்து தீர்ப்பு இன்றைக்கு (ஆகஸ்டு 27) ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் இன்று பிற்பகல் 2 மணிக்கு இவ்வழக்கின் தீர்ப்பை அளித்தார்.

அதில், “ இந்த வழக்கைத் தொடர்ந்தவர் குற்றம் சாட்டப்பட்டவரோ புகார் தாரரோ இல்லை. இவர் வெறும் சாட்சி மட்டுமே. கொடநாடு கொலை வழக்கில் மர்மங்கள் இருப்பதாக காவல்துறை கூறுகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் மேல் விசாரணைக்குத் தடை இல்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும் நீதிபதி, “ வழக்கின் எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும். தாமதமானாலும் கூட மேல் விசாரணை என்பது உண்மையைக் கண்டறிய உதவியாக இருக்கும். தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களையும் விவரங்களையும் வைத்து பாரபட்சமற்ற நியாயமான நேர்மையான விசாரணையை தொடர எவ்விதத் தடையும் இல்லை. காவல்துறை தாக்கல் செய்யும் மேல் விசாரணை அறிக்கையை நீலகிரி நீதிமன்றம் ஆராய்ந்துகொள்ளும்” என்று நீதிபதி நிர்மல் குமார் தனது உத்தரவில் குறிப்பிட்டு அபினவ் ரவியின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.

பெயருக்கு இது அபினவ் ரவியின் மனுவாக இருந்தாலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையாகவே இது இருப்பதால், உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு சட்ட ரீதியான, அரசியல் ரீதியான பின்னடவையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி விசாரணை நீதிமன்றத்தில் கொடநாடு கொலை வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்த்து, செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் உயர் நீதிமன்றம் மேல் விசாரணைக்கு அனுமதி அளித்துவிட்டதால் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் கொடநாடு கொலை வழக்கு மேல் விசாரணை விவரங்களோடு சூடுபிடிக்கத் தொடங்கும் இந்த வழக்கு மட்டுமல்ல... . ஊட்டியை மையமாக வைத்து தமிழ்நாட்டு அரசியலே சூடாகும்.

தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில் சாட்சி அபினவ் ரவியின் அடுத்த கட்டம் என்பது பற்றி அவரது தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

-வேந்தன்

கொடநாடு கொலை வழக்கு:உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குக் காத்திருக்கும் உதகை நீதிமன்றம்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 27 ஆக 2021