மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

மேகதாது அணை: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

மேகதாது அணை: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்த பின் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “ காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்” என்று தெரிவித்தார்.

டெல்லியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் தெரிவித்ததற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “ மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2018ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அனுமதி அளித்ததிலிருந்தே, இந்த விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிப்பதற்கான முயற்சிகளைக் கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது.

03.12.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து பிரச்சினை எழுப்பக் கர்நாடக அரசின் பிரதிநிதிகள் முயன்ற நிலையில், தமிழக அரசு அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால்,மேகதாது குறித்து விவாதிக்கக் காவிரி மேலாண்மை ஆணையம் மறுத்து விட்டது. அதன்பின் ஒவ்வொரு கூட்டத்திலும் மேகதாது அணை குறித்து கர்நாடகம் விவாதிக்க முயல்வதும், தமிழகத்தின் எதிர்ப்பால் அது கைவிடப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இத்தகைய சூழலில் மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்திற்கான விவாதப் பொருளில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைச் சேர்ப்பது நிச்சயமாகக் கர்நாடகத்துக்கு ஆதரவான செயலாகும். இத்தகைய ஒரு சார்பு நடவடிக்கைகளில் ஒன்றிய அரசோ, ஒன்றிய அமைச்சரோ ஒருபோதும் ஈடுபடக்கூடாது.

தமிழகத்தின் இசைவு பெறாமல் தாக்கல் செய்யப்பட்ட மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையையும் ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டதே தவறு என்று ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், திருப்பி அனுப்புவது தான் சரியான செயலாக இருக்க முடியும். அதை விடுத்து முறைகேடான வழியில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையைக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள ஒன்றிய அரசே ஏற்பாடு செய்வது தமிழகத்திற்கு இழைக்கப் படும் துரோகம் ஆகும். மேகதாது அணை விவகாரத்தில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகச் செயல்பட வேண்டிய ஒன்றிய அரசு ஒரு மாநிலத்திற்குச் சாதகமாகச் செயல்படக்கூடாது.

எனவே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்திற்கான விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரத்தை ஒன்றிய அரசு சேர்க்கக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

வியாழன் 26 ஆக 2021