மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு: மசோதா தாக்கல்!

தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு: மசோதா தாக்கல்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவைச் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 26) தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று, அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் தொடர்பான சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தி முதலமைச்சர் உரையாற்றினார்.

அவர் பேசுகையில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நகர்ப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை விட, கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மிகுந்த குறைந்த எண்ணிக்கையில் சேர்வதைக் கருத்தில்கொண்டு 1997ல் கிராமப்புற பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 15 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் கல்விக் கட்டண சலுகை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கிராமப்புற மாணவர்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டு தொழிற்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

எனினும் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடன் போட்டியிட்டு அவர்கள் விரும்பக்கூடிய உயர்கல்வியைப் பெறுவதும் தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் மிகவும் கடினமாக இருக்கிறது.

எனவே அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் தேசிய தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதுபோன்று, கால்நடை மருத்துவம் வேளாண் கல்வி பொறியியல் சட்டம் போன்ற இதர தொழிற்கல்விகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணங்களை ஆராயவும் தீர்வுகளைப் பரிந்துரைக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

தமிழக பள்ளிகளில் 1.3 கோடி பேர் பயின்று வருகின்றனர். 2019-20 ஆண்டு கல்வி ஆண்டில் 8.5 லட்சம் பேர் பிளஸ் டூ மாணவர்கள் பயின்றனர். அவர்களில் 3.45 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆவர்.

இவர்களில் 2020-21 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் 0.83 சதவிகிதம் ஆகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் முறையே 6.31%, 0.44% மட்டுமே சேர்ந்துள்ளனர்.

கால்நடை படிப்பில் 3 சதவிகிதம், வேளாண்மை தொழிற்கல்வி படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை 8.9 சதவிகிதமாக உள்ளது. எனவே, தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10%க்குக் குறைவாக இல்லாமல் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என ஆணையம் பரிந்துரைத்தது.

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கியதுபோல, தொழிற்கல்வி படிப்புகளின் மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் 7.5% ஒதுக்கீடு இடங்கள், முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு அதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இதனை ஆதரித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவை ஒரு மனதாக ஆதரிக்கிறோம்” என்றார்.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

வியாழன் 26 ஆக 2021