மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து கிராமங்களிலும் காங்கிரஸ் போட்டி - அழகிரி

உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து கிராமங்களிலும் காங்கிரஸ் போட்டி - அழகிரி

திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 25) மன்னார்குடியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்புரையாற்றினார்.

”ஒரு காலத்தில் காமராஜர் இந்தியாவின் பிரதமர்களை தேர்ந்தெடுக்கும் வல்லமை பெற்றவராக இருந்தார். காமராஜர் கால் மேல் கால்போட்டுக் கொண்டிருக்க அவர் அருகே இந்திரா காந்தியும், மொரார்ஜி தேசாயும் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் என்னைக் கவர்ந்தது. காமராஜர்தான் நம் அடையாளம். காமராஜரின் ஆட்சியின் சாதனைகள் பற்றி இன்னமும் நாம் மக்களிடம் அதிகமாக கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த தேசம். வேற்றுமையில் ஒற்றுமை என்பது காந்தியடிகளின் அற்புதமான சொற்றொடர். ஆனால் பாரதியஜனதா இப்போது ஒற்றுமையில் வேற்றுமை காண்பதையே வேலையாக வைத்திருக்கிறது. காங்கிரஸ் ஒற்றுமைக்கானது. பாஜக வேற்றுமைக்கானது. இந்த கொள்கை புரிதலோடு போராடிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. அவரோடு சேர்ந்து நாமும் போராட வேண்டும். யாராவது போராடுவார்கள். அவர்கள் பின்னால் நின்றுகொள்ளலாம் என்று கருதாதீர்கள். நாம்தான் போராட வேண்டும்” என்று பேசிய அழகிரி,

“திருவாரூர் மாவட்டத்தில் செயல்வீரர்கள் கூட்டத்தை மாவட்ட தலைவர் துரைவேலன் சிறப்பாக நடத்தியிருக்கிறார். இளைஞர்கள் அதிக அளவு பங்கேற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் ஒரு செய்தி சொல்லுகிறேன். நான் ஊராட்சி மன்ற தலைவராக இருந்திருக்கிறேன். ஒன்றிய பெருந்தலைவராக இருந்திருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருகிறேன். இப்போது மாநில தலைவராக இருக்கிறேன்.

இதில் எது கஷ்டம் என்றால் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதுதான். எம்பி தேர்தலில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தால் இன்னொரு தொகுதியில் இருந்து கிடைத்துவிடும். எம்.எல்.ஏ. தேர்தலில் ஒரு பகுதியில் குறைந்தால் இன்னொரு பகுதியில் இருந்து கிடைத்துவிடும். ஒன்றிய தேர்தலில் ஓர் ஊரில் குறைந்தாலும் இன்னொரு ஊரில் சரிக்கட்டிவிடலாம். ஆனால் ஊராட்சி மன்றத் தேர்தலில் ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வாக்குகள் பெற்றால்தான் நாம் ஜெயிக்க முடியும்.

அந்த நிலையில் அனைவருமே ஊராட்சிகளைக் குறிவையுங்கள். கிராமங்களைக் குறி வையுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ எல்லா கிராமங்களிலும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தெருவிலும் காங்கிரஸ் கொடியேற்றப்பட்டிருக்க வேண்டும். முதலில் நம் தொண்டர்கள் உங்கள் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் 15 அடி உயரத்துக்கு காங்கிரஸ் கொடி ஏற்றுங்கள். மக்களிடம் பேசுங்கள். காங்கிரசை எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொரு கிராமத்திலும் நாம் போட்டியிட்டால் தோற்றாலும் ஜெயித்தாலும் மக்கள் நம்பின்னால் வருவார்கள். எனவே மாவட்டம், சட்டமன்றம் ஆகியவற்றை விட ஊராட்சிகளில் கிராமங்களில் அதிக கவனம் செலுத்துங்கள்” என்று பேசியிருக்கிறார் கே.எஸ். அழகிரி.

திருவாரூர் மாவட்டத்தில் இப்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் வர வில்லை என்றாலும் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. அழகிரியின் இந்தப் பேச்சு திருவாரூர் மாவட்டத்துக்கு மட்டுமானது அல்ல, வர இருக்கிற ஊரக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் அந்த ஒன்பது மாவட்டங்களுக்கும் சேர்த்துதான் என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.

-வேந்தன்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வியாழன் 26 ஆக 2021