மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

சிறப்பு செய்தி : வெள்ளந்தி மனிதன் விஜயகாந்த்

சிறப்பு செய்தி : வெள்ளந்தி மனிதன் விஜயகாந்த்

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது தலைமை செயலகத்தில் இருந்து தி.நகரில் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்திற்கு திரும்பியவர், தொலைக்காட்சியில் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி ஒளிபரப்பானதை தற்செயலாக பார்த்திருக்கிறார்.

அதில் ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தனிமையிலே ஒரு ராகம்...’ பாடலை பார்த்திருக்கிறார். விஜயகாந்த்தின் நடிப்பை பார்த்து ரசித்தவர், அருகில் இருந்த புகைப்பட கலைஞர் சுபா சுந்தரத்திடம் “விஜயகாந்த் சிறப்பாக நடித்திருப்பதாக” தெரிவித்த எம்.ஜி.ஆர்., “இந்தப் பையனுக்கு நடிகருக்கான அத்தனை அம்சமும் இருக்கிறது. எதிர்காலத்தில் பெரிய நடிகராக வருவான் பாருங்கள்” என்றும் கூறி இருக்கிறார்.

இந்த தகவலை புகைப்பட கலைஞர் சுபா தனது பத்திரிகையாளர் நண்பர் சுராவிடம் பகிர்ந்து கொண்டதுடன், விஜயகாந்திடம் தெரிவிக்குமாறு கூறி இருக்கிறார்.

விஜயகாந்த் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்ததால் உடனடியாக சந்தித்து இந்த தகவலை தெரிவிக்க முடியாத பத்திரிகையாளர் சுரா, விஜயகாந்தின் நண்பரும் மேனேஜருமான இப்ராகிம் ராவுத்தரை சந்தித்த போது கூறி இருக்கிறார்.

எதிர்காலத்தில் பெரிய நடிகனாக வருவான்என்று எம்.ஜி.ஆர். சொன்ன அந்த வார்த்தையை கேட்டதும் நெகிழ்ந்து போனார், இப்ராகிம் ராவுத்தர். இவ்வளவு பிசியான நேரத்திலும் தனது நண்பன் விஜயகாந்தைப் பற்றி சிந்தித்த எம்.ஜி.ஆரின் உயர்ந்த உள்ளத்தை நினைத்து கண்கலங்கினார். இரு கைகளையும் உயர்த்தி வானத்தை அண்ணாந்து பார்த்து அல்லாவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர் கூறியதுபோல ரஜினிகாந்திற்கு அடுத்து மிகப்பெரிய கமர்ஷியல் கதாநாயகனாக உயர்ந்த நிலைக்கு வளர்ந்த விஜயகாந்திற்கு இன்று 69ஆவது பிறந்தநாள்.

எந்த பலமான பின்புலமும் இன்றி சினிமா, அரசியல் என தனி மனிதனாக அவரது அசுர வளர்ச்சி எல்லோருக்கும் ஆச்சர்யமூட்டும் ஒன்று. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாராயணனாகப் பிறந்த இவரை வீட்டில் எல்லாரும் விஜயராஜ் என்றே அழைத்துவந்தனர். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை பள்ளிகள் பல மாறினாலும் பத்தாம் வகுப்பை தாண்டாததால் விஜயராஜ் படிப்பை நிறுத்திவிட்டு தனது அப்பாவின் அரிசி ஆலை நிர்வாகத்துக்கு வந்தார்.

இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் 1978-ம் ஆண்டு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான இவருக்கு, அப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.காஜா வைத்த பெயர்தான் விஜயகாந்த்.

1980ல் வெளியான 'தூரத்து இடி முழக்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் விஜயகாந்த். ஆனால் ஓர் அதிரடி நாயகனாக விஜயகாந்த் அறியப்பட்டது 1981-ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் இருந்துதான்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படமான இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படம். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. இதன் இந்திப் பதிப்பில் ரஜினிகாந்தும், தெலுங்குப் பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்தனர். விஜயகாந்த்-எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணியில் அதே ஆண்டில் 'சாதிக்கொரு நீதி', 'நெஞ்சிலே துணிவிருந்தால்', 'நீதி பிழைத்தது' என மூன்று படங்கள் வெளியானது

ரஜினிகாந்திற்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் என்பதுபோல், விஜயகாந்திற்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார். இதே போல் 'சிவப்பு மல்லி' தந்த வெற்றியால்

ராம நாராயணன் இயக்கத்திலும் இவர் 17 படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கதாநாயகனாக நடித்து 1984-ல் மொத்தம் 18 படங்களும், 1985-ல் 17 படங்களும் வெளியாகின. இன்றுவரை இந்த சாதனையை அவரது சமகாலத்து நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், கார்த்திக் போன்றவர்களால் இன்றுவரை முறியடிக்கப்படாமல் வரலாறாக மாறிப்போனது

இடதுசாரி சிந்தனை கொண்ட திரைக்கதையில் தொடர்ந்து புரட்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்து வந்ததால் 1985-ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் புரட்சிக்கலைஞர் என அழைக்கப்பட்டார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் தமிழின் மீது கொண்ட பற்றால் தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை என்பதுடன் பிற மொழிகளில் நடிக்க வந்த வாய்ப்புகளை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னர்களாக இருந்த காலத்தில் ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஏவி.எம்.ராஜன், ஜெய்சங்கர் போன்றவர்கள் தங்களுக்கு என்று வியாபார வட்டத்தை உருவாக்கி கொண்டனர். ஆனால் எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்கள் இருவரையும் நெருங்க முடியவில்லை.

ஆனால் விஜயகாந்த் ரஜினி, கமலுக்கு இணையாக பயணித்தார், 'பி' மற்றும் 'சி' சென்டர்களில் விஜயகாந்த் படம் என்றாலே அது ஆக்க்ஷன் படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கினார். இவரது சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் பெருகியதால் அதன்பின்பு பல திரைப்படங்களிலும் சண்டைக்காட்சிகளில்தான் விஜயகாந்தின் அறிமுகமே இருந்தது.

கிராமங்களின் ஊர்த் திருவிழாக்களில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இவர்களில் யார் நடித்த படத்தை திரையிடுவது என்கிற போட்டி நடக்கும் அந்த நேரத்தில் விஜயகாந்த் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு சண்டை தவிர்க்கப்பட காரணமாக இருந்தார்.

புதுமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயகாந்தையே சேரும். ஆபாவாணன் - ஆர்.அரவிந்தராஜ் கூட்டணியில் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்' போன்ற திரைப்படங்களும், ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' போன்ற வெற்றிப்படங்களை அளித்தவர் விஜயகாந்த்.

ஒருகாலத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நேராகக் கதை சொல்லும் இடமாக தி.நகர் ராஜாபாதர் தெருவில்இருந்த விஜயகாந்த் அலுவலகம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆக்க்ஷன் ஹீரோ ஆக முடியாது என்பது சினிமாவில் எழுதப்படாத விதி. அந்த வகையில் போலீஸ், ராணுவம் என யூனிஃபார்ம் அணிந்து நியாயத்திற்காகப் போராடும் கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அதிகம் நடித்தவர் விஜயகாந்த் தான்.

இன்றும் போலீஸ் வேடமென்றால் தமிழ் ரசிகர்களின் மனதில் முதலில் வந்து நிற்பது விஜயகாந்தாகத்தான் இருக்கும். தனது 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்களால் கேப்டன் என அழைக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அவரது 100ஆவது படமான ராகவேந்திரா கமலின் 100ஆவது திரைப்படமான ராஜபார்வை போன்ற திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி கண்டிருந்த நிலையில், அந்தக் காலகட்டத்தில் நடித்த நடிகர்களில் 100-வது படம் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்குத்தான்.

க்ளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் ஹீரோ சாவதையெல்லாம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றிருந்த சூழலை செந்தூரப் பூவே, வைதேகி காத்திருந்தாள்,ரமணா போன்ற படங்களில் மாற்றியவர் விஜயகாந்த்.

1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுக்க இவரின் அரிசி ஆலை நிர்வாக அனுபவம் உதவியது என்பார் விஜயகாந்த். படிப்பறிவு காட்டிலும் அனுபவ அறிவு முக்கியம் என தனது சகாக்களிடம் அடிக்கடி கூறுவாராம் விஜயகாந்த்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டியவர் விஜயகாந்த். 2000-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்திற்கென கொடியை அறிமுகப்படுத்தி பல படங்களில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். அரசியலுக்கு வருவேன் என சொன்னதோடு நிக்காமல் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார்.

தனது ரசிகர்மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் அறிவித்தார். அடுத்து வந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தனி ஆளாகத் தன் கட்சியின் சார்பாக சட்டமன்றம் சென்றார்.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த்.

எந்த பின்புலமும் இன்றி சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த் அரசியலில் வெற்றியை தொடர முடியவில்லை என்றாலும் திரைப்பட துறையில் ட்ரெண்ட் செட்டராக, மைல் கல்லாக பல்வேறு படங்களின் மூலம் காலம் கடந்தும் இருப்பார் என்பதற்கு ஊமை விழிகள் ஒரு படம் போதும்.

இந்திய சினிமா உலகத்தை திரும்பி பார்க்க வைத்தது1986 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ந் தேதி வெளியான ஊமை விழிகள் திரைப்படம். அதுவரை தமிழ் சினிமா பேசிய காதல், பழி வாங்கும் கதை,குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசக் கதை, இவைகளை கடந்து ஒரு புதிய தளத்தை ரசிகர்களுக்கு அமைத்துக் கொடுத்தது ஊமை விழிகள்.

மிகப்பெரிய வெற்றி அடைந்த, இந்த திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள். புதிய சிந்தனையோடும், புதிய வேகத்தோடு, புதிய கதைக் களத்தோடும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டது ஊமை விழிகள் படம்.

ஆபாவாணன், அரவிந்தராஜ், ரமேஷ் உள்ளிட்ட சென்னை திரைப்பட கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சினிமாஸ்கோப் சித்திரமாக வெளிவந்து , முதல்நாள் முதல் காட்சியிலேயே இந்த படம் , நிச்சயம் வெள்ளிவிழா காணும் என்று திரையரங்கு உரிமையாளர்களால் கூறப்பட்டது. அன்றைய அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களிடமும் ஊமை விழிகள் பார்த்திட்டியா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதுவே அப்படம் வெள்ளி விழா கொண்டாட அடித்தளம் அமைத்தது.

ஊமை விழிகள் எத்தகைய உணர்வுகளை ரசிகர்களிடம் தோற்றுவித்தது? இந்த படம் இமாலய வெற்றிக்கு காரணம் என்ன? என்று அன்றைய காலகட்ட செய்திகளை பார்த்தால் ஊமை விழிகளில் அத்தனை அம்சங்களும் முத்திரை பதித்தவையாக இருக்கிறது இன்றைய அரசியல் நிகழ்வுகளை நினைவுபடுத்தகூடியதாக இருக்கிறது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் சோழா பிக்னிக் வில்லேஜ் என்கிற ரிசார்ட். இதன் உரிமையாளர் பி.ஆர்.கே என்ற கதாபாத்திரத்தில் அந்தக்கால கதாநாயகன் - நடிகர் ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இங்கு வரும் இளம்பெண்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். அதை பற்றி விசாரிக்க வரும் பத்திரிகையாளர் சந்திரசேகர் அங்கு நிகழும் மர்மத்தை பற்றி துப்பு துலக்க தொடங்குகிறார். ஆனால், அவர் கொல்லப்படுகிறார்.

'தினமுரசு' பத்திரிகை உரிமையாளர் ஜெய்சங்கர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகாந்த் பத்திரிகையாளர், நடிகர் அருண்பாண்டியன் ஆகியோர் சோழா பிக்னிக் வில்லேஜ் மர்மங்களையும், இங்கு நடக்கும் கொடுமைகளுக்கு ஆதரவாக இருக்கும் அரசியல்வாதிகளையும் கண்டுபிடிக்கிறார்கள். இறுதியில் இவர்கள் எப்படி வெல்கிறார்கள் என்பதே கதை.

ஆனால், ஒவ்வொரு காட்சியிலும் ‘திக்..திக்’ என ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கு வரவேண்டிய நிலையை படத்தின் இயக்குநர் ஏற்படுத்தியிருப்பார். பட்ஜெட் இடங்கொடுக்காததால் படத்தின் பின்னணி இசையை ஆபாவாணன், மனோஜ் கியான் அமைத்திருக்கிறார்கள். பாடல்களை ஆபாவாணன் எழுதியிருக்கிறார். இசையும், பாடலும் படத்திற்கு பலம் சேர்ப்பவையாக இருக்கிறது

படத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு கூடுதல் சிறப்பு. ஒரு காட்சியில் கார்கள் அணிவகுத்து வரும் போது, விளக்குகள் மட்டும் மின்மினிப் பூச்சிகளைப் போல காண்பிக்கும் போது... ரசிகர்களின் உணர்வுபூர்வமான கைத்தட்டல் அரங்கங்களில் ஆர்பரித்ததை இப்போது காண இயலவில்லை என்கின்றனர் அந்தகால தியேட்டர் ஆப்பரேட்டர்கள்.

லைட்டிங் என்பதை எப்படி எல்லாம் புதுமையாக பயன்படுத்த வேண்டும் என்று அன்றைய திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஊமை விழிகள் படத்தில் செய்துகாட்டியிருக்கிறார்கள். அதைவிடகதை மாந்தர்களை அறிமுகப்படுத்துவதிலும், திரையில் உலவவிடுவதிலும், வசன உச்சரிப்பிலும் இயக்குநர் அதகளப்படுத்தியிருப்பார்.

படத்தில் வரும் ஒரு மர்ம கிழவியை காட்டும் காட்சிகளில், திக்..திக்..திகில் என ஆல்பிரட் இட்ச்காக் படங்களை பார்ப்பது போன்ற ஒருவித மரணபீதி மனதை தொற்றிக் கொள்வதை படம் பார்ப்பவர்களால் தவிர்க்கவே முடியாது.

விஜயகாந்த், சரிதா, கார்த்திக், சசிகலா, அருண்பாண்டியன், விசு, சந்திரசேகர், இளவரசி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், செந்தில், ஸ்ரீவித்யா, மலேசியா வாசுதேவன், மீசை முருகேஷ் என நட்சத்திர பட்டாளமே தங்கள் நடிப்பு ஆளுமையை கொட்டித் தீர்த்திருக்கும் படம் தான்‘ஊமை விழிகள்’.

இந்த படம் வெளிவந்த சமயத்தில் மிகப் பிரபலமான ஹீரோவாக இருந்த விஜயகாந்த், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு உதவுவதற்காக சம்பளமே இல்லாமல் நடித்துக்கொடுத்திருக்கிறார். அருண்பாண்டியன் அறிமுகம் , ரவிச்சந்திரனின் இரண்டாம் இன்னிங்ஸ் தொடக்கம் எல்லாவற்றிற்கும் வித்திட்டது இந்த ‘ஊமை விழிகள்’.

சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தங்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளும் சாதனை திரைப்படம், ‘ஊமை விழிகள்’ ஒரு டிரெண்ட் செட்டர் படம் என்றால் அது மிகையாகாது. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் இசையிலும், ஒலி-ஒளிப்பதிவிலும் மாற்றத்தை கொண்டுவந்த படம் ஊமை விழிகள் இந்த திரைப்படம் வெளியாகி 33 வருடங்கள் ஆனாலும், தமிழ் தொலைகாட்சிகளில் திரையிடும் போது, ஊமை விழிகள் படத்திற்கு ‘டி.ஆர்.பி.ரேட்டிங் நெம்பர் 1’ என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு:இராமானுஜம்

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

புதன் 25 ஆக 2021