மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

கொடநாடு எஸ்டேட் கொலைகளும்... தமிழ்நாடு ஸ்டேட் தலைகளும்!

கொடநாடு எஸ்டேட் கொலைகளும்... தமிழ்நாடு ஸ்டேட் தலைகளும்!

அறை எண் 302ல் ஆதாரம்... அம்பலமானால் அதிமுகவுக்கு சேதாரம்!

கொடநாடு எஸ்டேட்டில் நடந்தது ஒரேயொரு கொலைதான்...அதற்குப் பின் நடந்த பல மரணங்களும் அத்துடன் இணைத்துப் பார்க்கப்படுவதால் அது கொடநாடு கொலைகளின் பட்டியலாகக் கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த அந்த கொலை, கொள்ளையின் உண்மை வெளியே வருவதில்தான், தமிழ்நாடு என்கிற தனித்துவமான ஸ்டேட்டின் எதிர்கால அரசியலும், பல அரசியல் ஆளுமைகளின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது என்பது மட்டும் துல்லியமாகத் தெரிகிறது.

கரடி பொம்மையையும் கைக்கடிகாரங்களையும் களவாடுவதற்கு வந்த கும்பல்தான், காவலாளியைக் கொன்று விட்டது என்பதுதான் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், கடந்த 2017 ஆம் ஆண்டில் தமிழக காவல்துறை கண்டுபிடித்த மாபெரும் உண்மை. இப்போது அதே காவல்துறைதான், வழக்கை மறுபடியும் தோண்ட ஆரம்பித்திருக்கிறது. அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்றுதான் பட்டிதொட்டியெல்லாம் நடக்கிறது பட்டிமன்றம். அதையும்விட, எட்டுக் கோடி தமிழக மக்களின் தலையையும் உடைத்துக் கொண்டிருக்கும் ஒரே விஷயம், அந்த ‘சம்பவத்தில்’ அப்படி என்ன பொருட்கள்தான் கொள்ளையடிக்கப்பட்டன, அது என்னதான் ஆயிற்று என்பதுதான்.

ஆயிரம் ஏக்கர் எஸ்டேட்; அகல அகலமாய் 11 கேட்; அரசையும், அரசியலையும் அங்கேயிருந்துதான் நடத்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அப்போதெல்லாம் மெயின்கேட்டிற்கு வெளியே செயின் போட்ட பாதுகாப்பு வளையத்துக்கு அப்பால் அப்பாவியாய் நிற்பார்கள் அதிமுக அமைச்சர்கள். பதவி பறிக்கப்பட்டாலும், பணம் பறிக்கப்பட்டாலும் ஜெயலலிதாவைப் பார்த்து கேள்வி கேட்க முடியாது. சில பல தடைகளைக் கடந்து, சசிகலாவை மட்டும்தான் அவர்களால் பார்க்க முடியும். அவரைப் பார்த்துத்தான், ‘‘சின்னம்மா! என்னம்மா இப்படிப் பண்ணீட்டீங்களே?’’ என்று தான் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதனால் அந்த சின்னம்மா வாயைத் திறந்தால்தான் பல உண்மைகள் வெளியே வரும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏற்கப்பட்டு, சசிகலாவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் ஒருவேளை அன்று கொள்ளை போனது என்னென்ன என்பது தெரியவரலாம்.

2017 ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நள்ளிரவில் நடந்த சம்பவத்தில், நான்காண்டுகளாகியும் உண்மை வெளி வராமல் இருப்பதற்கு ஒரே காரணம், அந்தக் கொள்ளை வெறும் பொருட்களைக் கவர்வதற்காக நடந்த கொள்ளை இல்லை; அதற்குள் ஓர் அரசியல் ரகசியம் அடங்கியிருக்கிறது என்பதுதான். இதைத்தான் மேத்யூ சாமுவேல் ஏற்பாட்டின்பேரில், டெல்லியில் பேட்டியாகக் கொடுத்தார்கள் முக்கியக் குற்றவாளியான சயானும், கூட்டாளி வாளையார் மனோஜூம். அவர்கள் அப்போதே கைநீட்டி குற்றம்சாட்டியது, அன்றைக்கு தமிழக முதல்வர் என்ற மகா வல்லமையும் அதிகாரமும் பொருந்திய பதவியில் இருந்த பழனிசாமியின் மீது.

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசாவும் அப்போதே இதே குற்றச்சாட்டைத்தான் பகிரங்கமாகக் கூறினார். அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக நிறுவனர் ராமதாசும் கூட, அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். வழக்கில் பல விடயங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதுதான் மக்களின் சந்தேகமாகவும் இருந்தது.

ஆட்சி மாறிய பின், அதற்கான சூழல் அமைந்தது. இப்போது வழக்கு மறு விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தோண்டித் துருவப்படுகிறது. இதுவே தமிழக அரசியலில் பெரும் புயலையும் கிளப்பியிருக்கிறது. சட்டசபையில் வெளிநடப்பு செய்தது அதிமுக; ஆளுநரைப் பார்த்து மனுவும் கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அது பரிசீலனையில் இருக்கிறது.

இதற்கிடையில், இந்த வழக்கில் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, எஸ்டேட்டில் மர வேலைகள் செய்து கொடுத்த சஜீவன் உள்ளிட்ட பலரையும் விசாரிக்க வேண்டுமென்று நீதிமன்றத்தில் மனுவும் தாக்கலாகியுள்ளது. இதெல்லாம் ஒரு புறமிருக்க, இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்து வரும் ஸ்பெஷல் டீமுக்கு, முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ஒரு அட்வைஸ் கொடுத்திருப்பதாகவும் தகவல் பரவியுள்ளது. அதாவது, ‘ஒரு சில மனிதர்கள் சொல்லும் சாட்சிகளை மட்டும் நம்ப வேண்டாம்; வலுவான ஆதாரம் ஏதாவது இருந்தால் பாருங்கள்; அதன்படி நடவடிக்கை எடுங்கள்!’ என்பதுதான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் சொன்ன அட்வைஸ். இதற்குப் பிறகுதான், ஆதாரங்களைத் திரட்டுவதில் அதிகமான சிரத்தை எடுத்திருக்கிறார்கள்.

சஜீவன்

அப்படித் தேடியதில், சம்பவம் நடந்த நாள் அன்று கோத்தகிரி காவல் நிலையத்தில் பயன்படுத்திய ஜிடி புக் கிடைத்திருக்கிறது; ஆனால் அந்த கொலை, கொள்ளை வழக்கின் டைரி தொலைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். அந்த டைரியில்தான், வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி எங்கெங்கே சென்றார், யார் யாரை விசாரித்தார், தொலைபேசியில் யார் யாருடன் பேசினார் என்ற விபரங்கள் இருக்கும். அது எப்படி மிஸ் ஆனது என்பது புரியாத புதிராக இருக்கிறது. வேண்டுமென்றே அது அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. சம்பவம் நடந்து நான்காண்டுகள் ஆகிவிட்டதால், இப்போது கால் டீட்டெய்ல்ஸ் (சிடிஆர்) எடுப்பதற்கு வாய்ப்பேயில்லை என்கிறார்கள் சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரிகள். ஏற்கெனவே எடுத்து வைக்கப்பட்டிருந்த கால் டீட்டெய்ல்ஸ் பட்டியலிலும் பல குழப்பங்கள் இருப்பதாகவும், சில எண்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் சொல்கிறார்கள். இதனால் வலுவான ஆதாரம் எதுவுமில்லையே என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்த சூழலில்தான், வழக்கை விசாரிக்கும் முக்கியமான போலீஸ் அதிகாரிக்கு சசிகலா தரப்பிலிருந்து ஓர் உதவிக்கரம் நீண்டிருக்கிறது...

அது என்ன உதவி, அந்த சம்பவம் என்ன என்பதை முக்கியமான போலீஸ் சோர்ஸ் நம்மிடம் விளக்கினார்...

‘‘ஜெயலலிதா இறந்தது 2016 டிசம்பர் 5 அன்று. சசிகலாவும், கொடநாடு எஸ்டேட்டின் பங்குதாரர்களாக இருந்த மற்ற இருவரான இளவரசியும், சுதாகரனும் சிறை சென்றது, 2017 பிப்ரவரி 15ஆம் தேதியன்று. எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்றது, அதற்கு அடுத்த நாள் அதாவது பிப்ரவரி 16 அன்று. கொடநாடு எஸ்டேட்டில் கொலையும், கொள்ளையும் நடந்தது ஏப்ரல் 23 நள்ளிரவில். எஸ்டேட் பங்களாவில் ஜெயலலிதா அறையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் திருடுபோனதாக அன்றே பேச்சு எழுந்தது. ஆனால், கரடி பொம்மையும், சில கைக்கடிகாரங்களும் மட்டுமே கொள்ளை போனதாக காவல்துறை கணக்கு எழுதியது. சில மாதங்கள் இந்த பரபரப்புகளுக்கெல்லாம் சிறிய இடைவெளி.

அதே ஆண்டு நவம்பர் 9 அன்று, சசிகலாவை குறி வைத்து, அதிரடியாக அரங்கேறுகிறது ஐடி ரெய்டு. ஒரு இடம் இரண்டு இடமில்லை; கொடநாடு எஸ்டேட், மிடாஸ் மதுபான ஆலை, இளவரசி மகன் விவேக் வீடு, தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீடு என மொத்தம் 190 இடங்களில் 2000 அதிகாரிகள் சேர்ந்து ரெய்டு நடத்தினார்கள். அப்போது வருமானவரித்துறை துணை கமிஷனர் சுபஸ்ரீ டீம் நடத்திய ரெய்டில், கிருஷ்ணப்ரியாவின் செல்போன் கேலரியில் சில டாக்குெமன்ட்களின் குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவை என்ன டாக்குமென்ட்கள், அவை எங்கேயிருக்கின்றன என்ற விபரங்களை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ப்ரியாவும் எதையும் சொல்லவேயில்லை.

ரெய்டெல்லாம் முடிந்து, ஒன்பது நாள் கழித்து நவம்பர் 18ஆம் தேதி காலையில், வருமானவரித்துறை அலுவலகங்களில் ஒன்றான 108 வது பில்டிங்கிற்கு ஒரு அநாமதேய அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய நபர், ‘‘சசிகலா சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட்கள், சிஐடி காலனியில் இருக்கும் ஷய்லீ நிவாஸ் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் உள்ள அறை எண் 302ல் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது!’ என்ற தகவலைச் சொல்லி விட்டு ‘கட்’ செய்து விடுகிறார். அடுத்த சில நிமிடங்களில், அந்த சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுக்குப் பறக்கிறது ஐடி படை. அறை எண் 302 பூட்டப்பட்டிருந்திருக்கிறது. உடைத்துக் கொண்டு உள்ளே போகிறார்கள். அங்கே ஐந்து டாக்குமெண்ட்கள் கிடைக்கின்றன. அவற்றின் மொத்த மதிப்பு மட்டும் 1600 கோடி ரூபாய். பெரம்பூர் எஸ் 2 தியேட்டர், கிழக்கு கடற்கரை சாலையில் (இசிஆர் ரோடு) உள்ள ஓசேன் ஸ்பிரே ரிசார்ட், மதுரையில் ஒரு மால், சுகர் மில் உட்பட ஐந்து டாக்குமெண்ட்கள் அங்கு கிடைத்திருக்கின்றன. அவற்றுடன் எம்.ஓ.யூ.எஸ், ஷேர் சர்டிபிகேட், ஆன்வெல் ரிப்போர்ட் ஒரிஜினல் காப்பியும் இருந்திருக்கின்றன. கிருஷ்ணப்ரியா செல்போன் கேலரியில் இருந்த குறிப்புகளும், இந்த டாக்குமெண்ட்களும் ஒத்துப் போயிருக்கின்றன.

அந்த அறையை எடுத்துத் தங்கியவர் யாரென்று ஐடி அதிகாரிகள் விசாரித்திருக்கிறார்கள். கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த செபாஸ்டின் என்பவரின் டிரைவிங் லைசென்ஸ் கொடுத்து, நவம்பர் 17 ஆம் தேதியன்று (ரெய்டுக்கு முந்தைய நாள்) அந்த அறை எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. செபாஸ்டினைத் தேடிப்போனது ஒரு டீம். அவரைப் பிடித்து விசாரிக்க, அவர் அலறியிருக்கிறார். நான் சென்னைக்கு வந்தே இரண்டு வருஷங்களாகி விட்டது என்று சொல்லியிருக்கிறார். 2015 ஏப்ரல் மாதத்தில் சென்னைக்கு அவர் வந்திருந்தபோது, பீச் ரோட்டில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியிருக்கிறார். போலீசார் பிடித்து கேஸ் போடும்போது ஒரிஜினல் லைசென்சையும் வாங்கியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு அவர் லைசென்ஸ் எடுக்கவேயில்லை என்று தெரிந்திருக்கிறது. அவரிடம் வாங்கிய லைசென்சை, அந்த அறையை எடுப்பதற்குக் கொடுத்திருக்கிறார்கள். அங்கு எடுக்கப்பட்ட டாக்குமெண்ட்கள், கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போனவை என்றும் ஐடி டீம் கண்டுபிடித்திருக்கிறது. அதை அங்கு கொண்டு போய் வைத்தது யார் என்பதைத்தான் இப்போது ஸ்பெஷல் டீம் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது!’’ என்றார்.

சிஐடி காலனி அப்பார்ட்மென்ட் 302 வது அறையை எடுத்தது யார் என்பதில், விசாரணை அதிகாரிகளுக்கு பல சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. போலீசிடம் தரப்பட்ட ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், அங்கு கொடுக்கப்பட்டு இருப்பதால், அப்போது சென்னை சிட்டி போலீசில் முக்கியபொறுப்பிலிருந்த அதிகாரிகள் சிலர் இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம். அப்போது காவல்துறையை கையில் வைத்திருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்காக அந்த அதிகாரிகள் இதைச் செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் கிளம்பியுள்ளது.

அறை எண் 302, ஐபிசி செக்சன் 302 அதாவது கொலை வழக்குப் பிரிவை நினைவுபடுத்துவதாகவுள்ளதும் விசாரணை அதிகாரிகளுக்குள் ஒரு பொறியைக் கிளப்பி விட்டிருக்கிறது. அந்த அறையில் கிடைத்த ஆவணங்கள், கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போனதில் ஒரு பகுதிதான் என்றும், மற்ற ஆவணங்கள் வேறெங்கோ ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன என்றும் போலீசுக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இப்படி எக்கச்சக்கமான மர்ம முடிச்சுகளாய் தொடர்கிறது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; ஒவ்வொரு முடிச்சும் அவிழ்க்கப்படும்போதும் ஒவ்வொரு அரசியல் தலை உருளலாம். கொலைக்கும், தலைக்குமான தொடர்பு உறுதியானால், அதற்கு அதிமுக என்கிற மாபெரும் இயக்கம் மிகப்பெரிய விலை தர வேண்டியிருக்கலாம்.

ஆக...கொடநாடு வழக்கில்தான் எழுதப்படவிருக்கிறது, தமிழ்நாடு தலைவர்கள் பலரின் தலையெழுத்து!

-பாலசிங்கம்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 25 ஆக 2021