மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

முன்மாதிரி சட்டமன்றத்தை உருவாக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி!

முன்மாதிரி சட்டமன்றத்தை உருவாக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி!

எப்போதும் இல்லாத அளவுக்கு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களையும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒரே இடத்தில் அமரவைத்து வகுப்பு எடுத்திருக்கிறார் சபாநாயகர் அப்பாவு.

சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்,சட்டமன்ற உறுப்பினர் பதவியை மக்கள் நலனுக்காக எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பது பற்றிய பயிற்சியை புதிய உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்குவதற்காக ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் இந்தப் புத்தாக்கப் பயிற்சியை அளித்து வருகிறார்கள்.

தற்போது சட்டமன்றம் நடைபெற்றுவரும் கலைவாணர் அரங்கம் அருகில் அமைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்காக கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் , 10ஆவது மாடியில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையில் இந்த பயிற்சி நடைபெற்றது.

சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோரின் ஏற்பாட்டில் சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார். சிறப்பு வகுப்பு எடுப்பவர்களாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் வந்தனர்.

திமுக, அதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், த.வா.க,ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள். மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்களில் சுமார் 190 எம்.எல்.ஏ.க்கள் கலந்துக்கொண்டார்கள். அமைச்சர்கள் 20 பேரும், அதிமுக முக்கிய பிரமுகர்கள் சிலரும் மட்டும் கலந்துகொள்ளவில்லை.

சபாநாயகர் அப்பாவு சட்டமன்ற விதிகள் புத்தகத்தை விரித்து வகுப்பை துவக்கினார். சட்டமன்ற விதிகள் என்ன சொல்கிறது என விலாவரியாக விளக்கினார். எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுவது, எதைப் பேசக்கூடாது (அன்பார்லிமென்ட் வோர்டு) அவையில் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது எப்படி என்பது பற்றியெல்லாம் அப்பாவு விளக்கினார். அவரைத் தொடர்ந்து துணை சபாநாயகர் பிச்சாண்டியும் பேசினார்.

நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “ஆட்சியையும், சட்டமன்றத்தையும் வழிநடத்துவது மூன்று குழுதான். எஸ்டிமேட் கமிட்டி, எதிர்காலத்துக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும். பப்ளிக் அண்டர் டேக்கிங் கமிட்டி நிகழ்காலத்துக்கான வழிகாட்டுதல் செய்யும். பப்ளிக் ஆடிட்டிங் கமிட்டி நிகழ்ந்த காலத்தைப் பற்றி ஆராய்ந்து செயல்படும்.

இங்கே அமைச்சருக்கும் முதல்வருக்கும் மட்டும்தான் பொறுப்பு என்று நினைக்ககூடாது. ஒவ்வொரு உறுப்பினருக்கும் பொறுப்பு இருக்கிறது. சட்டமன்றம் என்றால் தொகுதி பிரச்சினைகளை மட்டும் பேசுவதற்கு இல்லை. மக்களுக்கான புதிய சட்டத்தை இயற்றவேண்டும், அதற்கான ஆலோசனைகளை எம்.எல்.ஏ.க்கள் கூறலாம், அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கலாம்”என்று பேசினார் நிதியமைச்சர்.

நிதி செயலாளர் கிருஷ்ணன், “அதிகாரிகளான எங்களுக்குச் சட்டமன்றத்திலும் சரி வெளியிலும் சரி பேசவும் கேள்வி கேட்கவும் வாய்ப்புகள் இருக்காது கொடுப்பதும் இல்லை. இதோ உங்களிடம் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதற்கு நன்றி” என்றவர்,

“நான் நிதித்துறை இணை செயலாளராக இருந்தேன். ஆந்திரா ஆளுநர்தான் தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநராக இருந்தார், அப்போது தமிழக அரசு சார்பில் ஒரு கோப்பில் கையெழுத்து பெற ஆந்திராவுக்கு அனுப்பிவைத்தார்கள். ஆளுநரைச் சந்தித்து கோப்பினைக் கொடுத்தேன். அதைப் பார்த்த ஆளுநர், குறிப்பிட்ட இடத்தை காட்டி திருத்தி கொடுக்கச் சொன்னார். திருத்தும் செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை, எங்கள் முதல்வருக்குத்தான் (கலைஞர்) என்றேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அதிகாரம் அவ்வளவு முக்கியமானது” என்று கூறியவர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பல டிப்ஸுகளைக் கொடுத்தார்.

பயிற்சியோடு சேர்ந்து சில சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டு பதிலும் வாங்கினார்கள். த.வா.க.எம்.எல்.ஏ வேல்முருகன், “ஆதிதிராவிடர் துறைக்கு நிதி ஒதுக்கியதை குறிப்பிட்டுள்ளீர்கள். அதுபோல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நலத்துறைக்கு எவ்வளவு நிதி என்று குறிப்பிடவில்லையே?” என்ற கேள்விக்கு, “மொத்தம் 70 பாகங்கள் உள்ளது. அதில் 63வது பாகத்தில் பாருங்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறோம்” எனப் பதில் கொடுத்தார் நிதித்துறை அமைச்சர்.

அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் எழுந்து, ஆதி திராவிடர் நலத்துறைக்கு நிதி ஒதுக்குகிறீர்கள். தாட்கோ கடன் வழங்க மானியம் அளிக்கிறீர்கள், ஆனால் வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. அதனால் வருடம் வருடம் நிதி திரும்ப செல்கிறது” என்றார். “இனி இதுபோல் நடக்காத அளவுக்கு இந்த அரசு கவனித்துக் கொள்ளும்”என்று பதிலளித்தார் நிதியமைச்சர்.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் என நடைபெற்றுள்ள வகுப்பில் மாணவர்களாக நடந்துகொண்டார்கள் எம்.எல்.ஏ.க்கள். மேடையிலிருந்த சபாநாயகர், துணை சபாநாயகர், நிதி அமைச்சர் மற்றும் நிதி செயலாளர் போன்றவர்கள் பொறுப்புள்ள பேராசிரியர்களாக நடந்துகொண்டார்கள். கணினி மயமான சட்டமன்றத்தைப் பயன்படுத்தவும் இந்த வகுப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டன.

”அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கான இந்த பயிற்சி பட்டறை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பிரிவினை இல்லாமல் முன் மாதிரியான ஒரு சட்டமன்றத்தை உருவாக்கும் முயற்சி” என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள திமுக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.

-வணங்காமுடி

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 25 ஆக 2021