மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

சிவசங்கர் பாபா வழக்கு... விசாரணை அதிகாரி மாற்றத்தின் ‘விவகாரமான’ பின்னணி!

சிவசங்கர் பாபா வழக்கு... விசாரணை அதிகாரி மாற்றத்தின் ‘விவகாரமான’ பின்னணி!

பகுதி - 1

விசாரணைக்கு அழைத்து வந்தவர்களை, காவல் நிலையத்தில் அடித்துக்கொன்ற வரலாறுகளை தமிழகம் நிறையவே பார்த்திருக்கிறது. கடந்த ஆட்சியில், சாத்தான்குளத்தில் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட தந்தை - மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் சமீபத்திய சாட்சி. ஆனால், காவலர்கள் எல்லோரையும் அப்படி பொத்தாம்பொதுவாகக் குறைகூறிவிட முடியாது. இந்த ஆட்சியில்தான், விசாரணைக்கு அழைத்து வந்த குற்றவாளிக்கு, விசாரணை அதிகாரி அறையிலேயே புதிதாகக் கட்டில் போட்டு, புதிய போர்வை, தலையணை வாங்கிக் கொடுத்து, ஏசி போட்டு மூன்று நாள்களும் நிம்மதியாகத் தூங்க வைத்த அதிசயமும் நிகழ்ந்துள்ளது. இப்படியொரு மனிதாபிமானச் செயலைச் செய்தவரைப் பாராட்டி விருது கொடுப்பதற்குப் பதிலாக, அவரை பணி மாறுதல் செய்து தண்டித்திருக்கிறது திமுக அரசு.

அரசை வசை பாடுவதற்கு முன், இந்தத் தகவலையும் தெரிந்து கொள்ளுங்கள்...

இப்படி சிறப்பாகக் ‘கவனிக்கப்பட்ட’ அந்த குற்றவாளி, பள்ளிக்குச் சென்ற பெண் குழந்தைகளுக்கும், அவர்களின் தாய்மார்களுக்கும் பாலியல் தொல்லைகள் கொடுத்த சிவசங்கர் பாபா. அந்த ‘மனிதாபிமான’ அதிகாரி, அந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன். இவர்களிருவருக்குமான ‘கெமிஸ்ட்ரி’ என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தவர்கள், அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். இவ்வளவு சிறப்பாக பாபாவைக் கவனித்துக் கொண்டதற்காக, அவர் அடைந்த பலனைப் பற்றிக் கேள்விப்பட்டால், உங்களுக்கும் நெஞ்சம் படபடக்கும். அந்த அதிகாரியைப் பணி மாறுதல் மட்டும் செய்ததற்காக தற்போதுள்ள தமிழக அரசை நீங்கள் தாறுமாறாகத் திட்டித் தீர்ப்பீர்கள்!

பாபாவின் வழக்கு விசாரணையைப் பற்றி அறிந்து கொள்ளும் முன், ஒரு ட்ரோன் வைத்து பாபாவின் பள்ளியின் அறைகளையும், அவரின் பள்ளியறையையும் கொஞ்சம் படமெடுப்போம்...

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் பரந்து விரிந்திருக்கிறது சுஷில் ஹரி பள்ளி. பல தளங்களைக் கொண்ட அடுக்கு மாடிகள் நிறைந்த வளாகம் அது. மாணவர்கள், மாணவிகள் தங்க தனித்தனியே விடுதிகள் இருக்கின்றன. ஆசிரியர்கள், பணியாளர்கள் தங்குவதற்கான வீடுகளும் நூற்றுக்கும் மேலே இருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வந்து பாபாவின் சீடர்கள் தங்கவும் அங்கு அமர்க்களமான, அலங்காரமான விடுதிகளும் உள்ளன. எல்லாவற்றையும் விட, பிரமாண்டமாய், பிரமாதமாய் பிரமிக்க வைக்கும் கெஸ்ட் ஹவுஸ் ஒன்று இருக்கிறது. அதுதான் சிவசங்கர் பாபாவின் குதூகலக் குடிசை.

தமிழகத்திலிருந்து மட்டுமல்ல; வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்து வந்தார்கள் பல ஆயிரம் மாணவ மாணவிகள். அவர்களில், அப்பா, அம்மா இல்லாதவர்கள், அப்பாவை மட்டும் இழந்து அம்மாவின் அரவணைப்பில் வளரும் பெண் குழந்தைகளைப் பார்த்துப் பார்த்துக் குறி வைத்தது பாபாவின் படை. கணவனை இழந்து, கஷ்டத்தில் இருக்கும் பெண்களையும் பக்தி என்ற பெயரில் பங்களாவுக்கு வரவழைத்து, தன் பாலியல் வன்மங்களைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார் பாபா. இப்படி உடலாலும் மனதாலும் வேதனைக்குள்ளான சில மாணவிகள், உள்ளுக்குள்ளே அந்த அழுக்கான சுமைகளைச் சுமக்க முடியாமல், வெளியில் எடுத்தெறிய முயன்று உண்மையைச் சொன்னபோதுதான் சிக்கினார் சிவசங்கர் பாபா. இதுவும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததுதான். அதற்கு முன்பும், பின்பும் அந்த வளாகத்தில் நடந்த வன்மங்கள் எதிர்காலத்தில் வெளிவரலாம்; வராமலும் போகலாம்.

இப்போதைக்கு இந்த வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டதற்கான காரணத்தைத் தோண்டினோம்...

எடுத்த எடுப்பிலேயே சிபிசிஐடியால் எடுக்கப்பட்டது சிவசங்கர் பாபா மீதான வழக்கு. முதலில் செங்கல்பட்டு சிபிசிஐடி போலீஸார் தான் மூன்று வழக்குகள் பதிவு செய்தனர். ஆனால், சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகமான ஒசியூ 2 பிரிவில் உள்ள டிஎஸ்பி குணவர்மன்தான், இதன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பாலியல்ரீதியான இத்தகைய வழக்குகளில், விசாரணை அதிகாரியாக ஒரு பெண் அதிகாரிதான் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் குணவர்மனை நியமித்தபோதே, துறைக்குள் ஒரு முணுமுணுப்பு கிளம்பியது. அது நாளடைவிலேயே குமுறலாக வெடித்தது.

வர்மன் என்ற வடமொழிச்சொல்லுக்கு அர்த்தம் பாதுகாவலன். ஆனால், பெண்கள் தொடர்பான புகாரை விசாரிக்க வேண்டிய பொறுப்பிலிருந்த குணவர்மனின் குணம் அதற்கு நேர்மாறாக இருந்துள்ளது. இந்த வழக்கை பெண் ஆய்வாளர்கள் சிலர், மிகவும் ஆர்வத்தோடும் ஆக்டிவாகவும் விசாரித்து பல உண்மைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். அவர்களைப் பாராட்ட வேண்டிய டிஎஸ்பி குணவர்மன், அவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி நோகடித்திருப்பதாகக் குமுறுகிறார்கள், பெண் காவலர்கள்.

டிஎஸ்பி குணவர்மன்

இதுபற்றி நம்மிடம் பேசினார்கள் பெண் அதிகாரிகள் சிலர்...

‘‘அந்த வழக்கில் புகார் கொடுத்த, கொடுக்க மறுத்த பல பெண்களிடம் நாங்கள் பேசியிருக்கிறோம். அவர்கள் சொல்வதைக் கேட்கும்போதே நமக்கு நெஞ்சு படபடக்கும். அவ்வளவு மோசமாக நடந்திருக்கிறார் சிவசங்கர் பாபா. விசாரணை அதிகாரி என்ற முறையில் டிஎஸ்பி குணவர்மனிடம் இதைப் பற்றி விவரித்தால், எங்களிடமே இரட்டை அர்த்தத்தில் பேசுவார். பாபா வழக்கை நாங்கள் தீவிரமாக விசாரித்து, பலமான சாட்சியத்தைத் தயார் செய்தால், எங்களிடமே, ‘பாபா சாதாரண ஆளில்லை. 700 கோடிக்குச் சொந்தக்காரர். அவருக்காக யார் யார் என்கிட்ட பேசுறாங்க தெரியுமா... வெளிநாட்டுல இருந்தெல்லாம் போன் வருது. இதுல ஏதாவது பிரச்சினையாச்சுன்னா உங்க தாலி அறுந்துரும்!’னு சொல்லியே எங்களை மிரட்டுவார். சில நேரங்கள்ல பார்த்தா, அவரு இந்தக் கேஸோட விசாரணை அதிகாரியா அல்லது பாபாவோட வக்கீலான்னு எங்களுக்கே சந்தேகமா இருக்கும்!’’ என்று கூறியதோடு, அவரின் வக்கிரமான வார்த்தைகளையும் விளக்கினர்.

இந்த வழக்கிலிருந்து குணவர்மன் எப்படி துாக்கப்பட்டார் என்பது பற்றி நாம் விசாரித்தபோதுதான், சில விஷயங்கள் நமக்குத் தெரிய வந்தன. பாபா வழக்கில் ஏதோ தவறு நடக்கிறது என்று உளவுத் துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்தான், முதலில் மோப்பம் பிடித்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன்பே, சிபிசிஐடி முக்கிய அதிகாரியைத் தொடர்புகொண்டு, தனக்குக் கிடைத்த தகவல்களைச் சொல்லி, அதைக் கொஞ்சம் சீரியஸ் ஆக விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். அப்போதிருந்த எஸ்பி விஜயகுமார், உடனே டிஎஸ்பி குணவர்மனைக் கூப்பிட்டு, ‘நிறைய கம்பிளைண்ட் வருதுங்க. கரெக்டா விசாரிங்க. யாரையும் வழக்குல விட்றாதீங்க!’ என்று எச்சரித்திருக்கிறார். அதை அவர் செய்தாரா என்பதைப் பார்க்கவும் அவருக்குக் கால அவகாசமில்லாமல் போனது. ஏற்கெனவே மாவட்டத்தில் பணியாற்ற அவர் விருப்பம் தெரிவித்து இருந்ததன் அடிப்படையில், அவரை திருவாரூர் எஸ்பியாக நியமித்தது தமிழக அரசு.

அதற்கு பின் நடந்தது என்ன?

பகுதி - 2 மதியம் ஒரு மணி பதிப்பில்...

-பாலசிங்கம்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

செவ்வாய் 24 ஆக 2021