மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

பாலியல் புகார்: பாஜக கே.டி.ராகவன் ராஜினாமா!

பாலியல் புகார்:  பாஜக கே.டி.ராகவன் ராஜினாமா!

தமிழ்நாடு பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளராக இருக்கும் கே.டி.ராகவன் தன் மேல் பாஜகவினர் எழுப்பிய பாலியல் குற்றச்சாட்டையடுத்து தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஆர்.எஸ். எஸ். இயக்கத்தைச் சேர்ந்த கே.டி.ராகவன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவர் சில வருடங்களாகவே பாஜகவில் தீவிரமாக ஈடுபட்டு தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக சார்பாக பங்கேற்றார். அண்மையில் அவர் தமிழக பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளராக பதவி உயர்த்தப்பட்டார்.

இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த பத்திரிகையாளரான மதன் ரவிச்சந்திரன் தனது மதன் டைரி என்ற யு ட்யூப் பக்கத்தில் இன்று (ஆகஸ்டு 24) பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், தனது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவரிடம் வீடியோ காலில் பேசுவதை பதிவு செய்து வெளியிட்டார்.

அந்த வீடியோவில் அந்த பெண்ணிடம் சட்டை அணியாத நிலையில் ராகவன் ஓரிரு வார்த்தைகள் பேசுவதும், சைகைகள் காட்டுவதும் பதிவாகியிருக்கிறது.

‘பாஜகவில் அதிகாரத்தையும் பதவியையும் வைத்து பாலியல் சீண்டல்கள் நடப்பது பற்றி தகவல்கள் வந்தது. சுமார் மூன்று மாதம் ஆய்வு செய்து ராகவனைப் பற்றிய இந்த விஷயங்களைக் கண்டுபிடித்தேன். அவர் கட்சியில் தனக்கு இருக்கும் அதிகாரத்தையும் லாபியையும் பயன்படுத்தி பெண்களை தவறாக அணுகியிருக்கிறார். இதை எங்கள் குழுவில் இருக்கும் இன்னொரு பெண் மூலமாகவே சம்பந்தப்பட்ட மாவட்ட பாஜக பெண் நிர்வாகியிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

இதைத் தொடர்ந்து இதுபற்றி பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து முறையிட்டோம். அவர் அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். நீங்கள் வீடியோவை வெளியிட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அண்ணாமலையின் ஒப்புதலின் பேரில்தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம்”என்று அந்த வீடியோவில் மதன் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.

அண்மையில்தான் தமிழக பாஜகவில் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருப்பதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது. கமலாலயம் ஹாஸ்பிடலாடி சென்டராக மாறிவிட்டதாக அக்கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கருத்து வெளியிட்டார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த பத்திரிகையாளரே பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பற்றிய வீடியோவை வெளியிட்டது தமிழக பாஜகவுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அண்ணாமலையின் ஓப்புதலின் பேரில்தான் இதை வெளியிடுகிறேன் என்றும் மதன் ரவிச்சந்திரன் பதிவு செய்திருக்கிறார்.

இதன் விளைவாக கே.டி.ராகவன் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இன்று (ஆகஸ்டு 24) அவர் தனது சமூக தளப் பக்கத்தில்,

“தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன் . என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்”என்று கே.டி.ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

-வேந்தன்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

செவ்வாய் 24 ஆக 2021