மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

கலைஞருக்கு நினைவிடம்: வரவேற்ற ஓபிஎஸ்

கலைஞருக்கு நினைவிடம்: வரவேற்ற ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்குச் சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்தார். இதனை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இன்று முதல் அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கலைஞர். 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 5 முறை முதல்வராக இருந்தவர். அரசியல் களத்தில் இனி யாரும் அவர் இடத்தை பிடிக்கவே முடியாது. தோல்வி அவரை தொட்டதே இல்லை வெற்றி அவரை விட்டதே இல்லை” என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், 80 ஆண்டுகள் பொது வாழ்க்கை, 70ஆண்டுகள் திரைத்துறை மற்றும் பத்திரிகையாளர், 60 ஆண்டுக் கால சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுக் கால திமுக தலைவர் என்று வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாக வாழ்ந்தவர் கலைஞர்.

நான் முதலமைச்சராகக் கோட்டையிலிருந்தாலும், அங்கிருந்தபடியே குடிசைகளைப் பற்றியே சிந்திப்பவன்' என்று முதல் முறை ஆட்சிக்கு வந்த போது முதலமைச்சர் கலைஞர் சொன்னார். சமுதாய சீர்திருத்தத் தொண்டு, வளர்ச்சிப் பணிகள், சமதர்ம நோக்கு இவை மூன்றையும்தான் தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக முதலமைச்சர் கலைஞர் சொன்னார். அந்த அடிப்படையில்தான் ஆட்சியை நடத்தினார்” என்று குறிப்பிட்டார்.

“அன்னைத் தமிழ்மொழிக்குச் செம்மொழித் தகுதி. ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உரிமை. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம். மகளிருக்குச் சொத்தில் சம உரிமை என்ற சட்டம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கான சமூகநீதி உரிமைகள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம். கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் கோடிக் கடன் ரத்து. சென்னை தரமணியில் டைடல் பார்க். சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம் என கலைஞர் கொண்டு வந்த திட்டங்களைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், “கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தின் நிரந்தரத் தலைப்புச் செய்தியாக இருந்த கலைஞர் அவர்கள், 2018 ஆகஸ்ட் 7 ஆம் நாள் நிரந்தர ஓய்வுக்குச் சென்று விட்டார். ஓய்வெடுக்கச் சென்றார் என்று நான் சொன்னாலும்கூட, அவர் இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கு ஏராளமானவற்றைக் கொடுத்துவிட்டுத்தான் ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார். தான் மறைந்தால், ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இதோ ஓய்வு கொண்டிருக்கிறார்' என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எழுதச் சொன்ன மக்கள் தொண்டர் அவர். ‘அண்ணா... நீ இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில், இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா... நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா...’ என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உறுதிமொழி எடுத்தவர் அவர்” என்றார்.

மேலும், “தாய்த் தமிழ்நாட்டை உருவாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை வரவேற்றுப் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வரவேற்கிறேன். அதிமுக உறுப்பினர்களும் மனதார வரவேற்கக் கடமைப்பட்டுள்ளோம். அவரைப் பற்றிய அனைத்துச் சிறப்பம்சங்களும் நினைவிடத்தில் இடம்பெற வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறேன். என் தந்தை தீவிர கருணாநிதி பக்தர். அவர் பெட்டியில் எப்போதும் கலைஞரின் 'பராசக்தி' பட வசனப் புத்தகம் இருக்கும்” என்று பேசினார்.

ஆனால், கலைஞர் மறைந்த போது அவருக்கு மெரினாவில் இடம் கொடுக்க அதிமுக அரசு மறுத்தது. இதனால், தற்போதைய முதல்வரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் முன்னாள் முதல்வர் எடப்பாடி வீட்டுக்கே சென்று, “அண்ணன் பக்கத்தில் தான் துயிலுறங்க வேண்டும் எனக் கலைஞர் அடிக்கடி சொல்லுவார். அதுதான் கலைஞரின் கடைசி ஆசை” என்று கேட்டார். ஆனால் மெரினாவில் இடம் தர எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.

இதனிடையே, திமுக சார்பில் கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக் கேட்டு அவசர வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஹுலுவாடி ரமேஷ் வீட்டில் இரவு முதல் காலை வரை விசாரணை நடைபெற்றது.

கிண்டியில் காமராஜர் உடல் அருகே கலைஞருக்கு நல்லடக்கம் நடைபெற அனுமதி வழங்குகிறோம் என அப்போதைய அதிமுக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் திமுக தரப்பில் கலைஞருக்கு மெரினாவில் இடம் கேட்டு வாதத்தை முன் வைத்தனர்.

விடிய விடிய நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பைக் கேட்டு, கலைஞரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி ஹால் பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரக் குரல் எழுப்பினர். கலைஞரின் மகனும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், இந்தத் தீர்பைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அங்கு சூழ்ந்திருந்த தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கைகூப்பி நன்றி தெரிவித்தார்.

இதையடுத்து கலைஞரின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

செவ்வாய் 24 ஆக 2021